சிறுமிகளை சீரழித்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி வழக்கில் புகார் கொடுத்த காங்கிரஸ் பிரமுகர் எம்.பி.ரஞ்சன் குமார், தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆர், செந்தமிழ்ச் செல்வன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமாரின் தலையீடு தொடர்பாக நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் முதன் முதலாக செய்தி வெளியிட்டோம். கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ஜெம் வீரமணி தரப்புக்கும் சாந்தி தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ரஞ்சன் குமாரின் ‘ரோல்’ என்ன என்பது குறித்து பதிவு செய்திருந்தோம். அதன் பின்னர் ரஞ்சன் குமாரே, இந்த வழக்கில் தாம் தலையிட்டது தொடர்பாக ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார். மேலும் ரஞ்சன் குமாரிடம் ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்தி இருந்தது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து ரஞ்சன் குமார் மாற்றப்பட்டுள்ளார்.
பட்டியலினப் பிரிவு தலைவர், செயல் தலைவர்கள் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று (அக்டோபர் 23-ந் தேதி) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர்களை நியமிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் புதிய தலைவராக ஆர்.செந்தமிழ்செல்வனும், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைவராக அசோக் குமார் பகத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயல் தலைவர்கள் நியமனம்
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பட்டியலினப் பிரிவுத் தலைவர் ராஜேந்திர பால் கவுதமும் அக்டோபர் 23-ந் தேதியிட்டு மற்றொரு நியமனக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தமிழக காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் செயல் தலைவர்களாக ஆர்.கலைச்செல்வன், பி.வி.தமிழ்செல்வன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
