பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8
ஒருமுகத்தன்மை எனும் பிழையான வாதம்:
தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது
ஒற்றைமயமாக்கல் அல்ல, அரவணைப்பே
-அசோக் வர்தன் ஷெட்டி
மையவாதச் சிந்தனையானது நீண்ட காலமாக, ஈர்க்கக்கூடிய ஆனால் தவறான ஒரு கருதுகோளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது: அதாவது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஒருமுகத்தன்மை (uniformity) அவசியம் என்பதே அந்தக் கருதுகோளாகும். இந்தக் கண்ணோட்டத்தில், ஒரு தேசம் பிணைப்புடன் இருக்க வேண்டுமானால், ஆதிக்கம் செலுத்தும் ஒரு மையத்தால் (dominant Centre) திணிக்கப்படும் ஒரே மொழி, ஒரே பண்பாடு மற்றும் ஒரே நிர்வாகக் கட்டமைப்பை அது கொண்டிருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது ஒரு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது; எனவே, ஒற்றைமயமாக்கலின் (homogenisation) மூலம் அதனை ஒரே தேசிய வார்ப்புக்குள் (single national mould) அடைத்து, அழித்துவிட வேண்டும் என நம்பப்படுகிறது.
நான்கு உருவகங்கள்
கூட்டாட்சி முறையானது, ஒற்றுமை குறித்த முற்றிலும் மாறுபட்ட ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது – அது பன்முகத்தன்மையை அழிப்பதற்குப் பதிலாக அதனை அரவணைக்கும் ஒரு புரிதலாகும். இந்தப் புரிதல், கூட்டாட்சிக் கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு உருவகங்களின் மூலம் விளக்கப்படுகிறது.
பெரும்பாலும் ‘தன்வயப்படுத்தும் தேசியவாதத்துடன்’ (assimilationist nationalism) தொடர்புபடுத்தப்படும் “உருக்கி கலக்கும் கலம்” (melting pot) என்ற உருவகம், பன்முகத்தன்மை கரைந்து ஒருமுகத்தன்மை கொண்ட ஒற்றை அடையாளமாக மாற வேண்டும் எனக் கருதுகிறது. கூட்டாட்சி முறை இந்தக் கருதுகோளை நிராகரிக்கிறது. மாறாக, “காய்கறிக் கலவை” (salad bowl) என்ற உருவகம், கரைந்துபோகாத ஒரு இணைப்பை வலியுறுத்துகிறது: இதில் ஒவ்வொரு மூலப்பொருளும் தனது தனித்துவமான தன்மையைத் தக்கவைத்துக்கொண்டே, ஒரு முழுமையான கலவைக்குத் தனது பங்களிப்பை வழங்குகிறது.
இதேபோன்ற ஒரு கருத்தைப் “பாவுநூல் மற்றும் ஊடுநூல்” (warp and weft) என்ற உருவகத்தின் மூலமும் கூறலாம். ‘ஒன்றியம்’ (Union) பாவுநூலை – அதாவது துணியை ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கும் கட்டமைப்பு நூல்களை – வழங்குகிறது; அதேநேரத்தில் ‘மாநிலங்கள்’ (States) ஊடுநூலை வழங்கி, வண்ணம், மாறுபாடு மற்றும் நயத்தைச் சேர்க்கின்றன. இவ்வாறு, ஒற்றுமை என்பது ஒரே வார்ப்பில் வார்க்கப்படுவதற்குப் பதிலாக, பன்முகத்தன்மையின் மூலம் நெய்யப்படுகிறது.

1960 ஆம் ஆண்டில் மார்ட்டன் க்ரோட்ஜின்ஸ் (Morton Grodzins) உருவாக்கிய நான்காவது உருவகம், கூட்டாட்சி முறையை ஒரு “பளிங்கு கேக்” (marble cake) என விவரிக்கிறது; இதில் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் செயல்பாடுகள் தனித்தனி அடுக்குகளாக இல்லாமல் ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக, இந்த உருவகங்கள் ஒரு பொதுவான பாடத்தை உணர்த்துகின்றன: ஒற்றுமைக்கு ஒற்றைமயமாக்கல் தேவையில்லை. திணிக்கப்படும் ஒருமுகத்தன்மை ஒரு சுவையற்ற காய்கறிக் கலவையையோ, மந்தமான துணியையோ அல்லது சுவையற்ற கேக்கையோதான் உருவாக்கும்.
ஒப்பீட்டு அளவிலான பட்டறிவும் இந்த முடிவை வலுப்படுத்துகிறது. அரசமைப்பு வடிவமைப்பின் மூலம் பன்முகத்தன்மையை அரவணைத்த நாடுகள் – கனடா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் – ஆழமான மொழி, பண்பாடு அல்லது இனப் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், நிலையான அரசியல் அமைப்புகளைத் தக்கவைத்துள்ளன. இதற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் மற்றும் பாகிஸ்தான் போன்று கட்டாயப்படுத்தப்பட்ட ஒற்றைமயமாக்கலின் (enforced homogeneity) மூலம் ஒற்றுமையை உருவாக்க நினைத்த நாடுகளில், தேசியப் பிணைப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்தது; அது நீண்ட காலம் நிலைக்கவுமில்லை. ஒருமுகத்தன்மையின் மூலம் நாடப்படும் ஒற்றுமை அடிக்கடி உடைந்துபோகிறது; ஆனால், அரவணைப்பின் (accommodation) மீது கட்டமைக்கப்படும் ஒற்றுமை மிகவும் நீடித்து நிலைக்கிறது.

இந்தியா ஏன் ஒருபோதும் ஒரு ஜேக்கபிய அல்லது போல்ஷ்விக் தருணத்தை உருவாக்கவில்லை
பிரெஞ்சுப் புரட்சி (1789) மற்றும் ரஷ்யப் புரட்சி (1917) போன்ற செவ்வியல் “மக்கள் புரட்சிகள்” வெறுமனே ஆட்சி மாற்றங்களாக மட்டுமின்றி, முழுமையான புரட்சிகளாக அமைந்தன. மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய-அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த “மக்கள்” கிளர்ந்தெழுந்து, தீர்க்கமான ஒரு முறிவின் மூலம் சமூகத்தை மறுநிர்மாணம் செய்ய முயன்றனர். அரசியல் மோதல்கள் முற்றிலும் இருமுனை கொண்டவையாக மாறின – முடியாட்சிக்கு எதிராக ‘மூன்றாம் எஸ்டேட்’ (Third Estate), முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் (proletariat) என எதிரெதிர் தரப்புகளாக உருவெடுத்தன. இதனால், ஆதிக்கம் செலுத்திய அந்த ஒற்றைப் பிளவுக்கோட்டை (single dominant fault line) மையமாக வைத்து மக்களை மிக எளிதாக அணிதிரட்ட முடிந்தது. ஹன்னா அரெண்ட் (Hannah Arendt) 1963 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘புரட்சி குறித்து’ (On Revolution) என்ற நூலில் குறிப்பிட்டதைப்போல, இத்தகைய புரட்சிகள் மரபுவழியாக வந்த சமூக மற்றும் நிறுவன அமைப்பை அழிப்பதன் மூலம் “ஒரு புதிய தொடக்கத்தின் மீது சுதந்திரத்தை நிறுவ” முற்பட்டன.

இந்தியா இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது. காலனித்துவ ஆதிக்கம், பரவலான வறுமை, ஆழமான சமத்துவமின்மை மற்றும் தொடர்ச்சியான அமைதியின்மை ஆகியவை இருந்தபோதிலும், இந்த நாடு அதற்கொப்பான ஒரு “ஜேக்கபிய அல்லது போல்ஷ்விக் தருணத்தை” ஒருபோதும் கண்டதில்லை. அதாவது, ஒற்றையாக ஒன்றிணைந்த மக்கள் தங்களின் உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக அமைப்பை வன்முறை மூலம் மாற்றியமைக்கக் கிளர்ந்தெழுந்த எந்தவொரு நிகழ்வும் இங்கு நடந்ததில்லை. 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சி, மகாத்மா காந்தி தலைமையிலான விடுதலைப் போராட்டம் மற்றும் 1970களில் ஜெயபிரகாஷ் நாராயணன் முன்னெடுத்த மக்கள் அணிதிரட்டல் ஆகியவை இதற்கு மிக நெருக்கமாக வந்தன; ஆனால் அவற்றில் மக்களின் பங்கேற்பு சீரற்றதாகவும், ஒட்டுமொத்தப் பெருந்திரளையும் முழுமையாகத் தழுவாத ஒன்றாகவும் இருந்தது.
விடுதலைக்குப் பிறகு, இந்தியா பல கிளர்ச்சிகள், நக்சலைட் இயக்கங்கள், கருத்தியல் ரீதியான அணிதிரட்டல்கள் மற்றும் மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கண்டுள்ளது. ஆயினும், இவை ஒரே நேரத்தில் வெடித்தெழும் அகில இந்திய எழுச்சியாக மாறாமல், துண்டுபட்ட மற்றும் உள்ளூர் அளவிலான நிகழ்வுகளாகவே சுருங்கிவிட்டன. இந்த வரலாற்றுப் போக்கை, “ஒன்றையொன்று ஊடறுக்கும் பிளவுகள்” (cross-cutting cleavages) என்ற சமூகவியல் கோட்பாட்டின் மூலமே மிகச் சிறப்பாக விளக்க முடியும்.

துண்டுபட்ட அடையாளங்கள், நிலையான அரசியல் அமைப்பு
சீமோர் மார்ட்டின் லிப்செட் (Seymour Martin Lipset) மற்றும் ஸ்டெயின் ரோக்கன் (Stein Rokkan) ஆகியோர் தங்களது 1967 ஆம் ஆண்டு வெளியான ‘கட்சி அமைப்புகளும் வாக்காளர் அணிசேர்க்கைகளும்’ (Party Systems and Voter Alignments) என்ற நூலில் விளக்கியுள்ள “ஒன்றையொன்று ஊடறுக்கும் பிளவுகள்” கோட்பாடு ஒரு முக்கிய வாதத்தை முன்வைக்கிறது: அரசியல் மோதல்கள் மிதமானதாக, துருவப்படுத்தப்பட்டதாக அல்லது புரட்சிகரமானதாக மாறுமா என்பதைத் தீர்மானிப்பது மக்களின் குறைகளின் தீவிரத்தை விட, அந்தச் சமூகப் பிரிவினைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதேயாகும்.
பிளவுகள் ஒன்றையொன்று வலுப்படுத்தும் இடங்களில் (cleavages reinforce one another) – அதாவது வர்க்கம், மதம், மொழி, வட்டாரம், மற்றும் சித்தாந்தம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இணையும்போது – சமூகம் இரண்டு எதிரெதிர் முகாம்களாகத் துருவப்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு மற்றும் ரஷ்யப் புரட்சிகளைப் போல, இங்கு அரசியல் இருமுனை கொண்டதாக மாறுகிறது; புரட்சிகரமான அணிதிரட்டலும் சாத்தியமாகிறது. ஆனால், பிளவுகள் ஒன்றையொன்று ஊடறுக்கும்போது, அடையாளங்கள் ஒன்றிணைவதற்குப் பதிலாகத் துண்டுபடுகின்றன. தனிநபர்கள் ஒன்றையொன்று தழுவிய பல குழுக்களில் (overlapping groups) அங்கம் வகிக்கின்றனர்; இவற்றில் எந்தவொரு குழுவும் அரசியல் அமைப்பில் முழுவதுமான ஆதிக்கத்தை செலுத்துவதில்லை. ஒவ்வொரு சிக்கலுக்கும் ஏற்ப கூட்டணிகள் மாறுகின்றன, இணைவுகள் நெகிழ்வானதாக இருக்கின்றன, மேலும் அதிருப்திகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு தேசிய அளவிலான முறிவாக மாறுவது சாத்தியமற்றுப் போகிறது.
இதற்கு இந்தியா ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். வர்க்கம் சாதியை ஊடறுக்கிறது; சாதி மதத்தை ஊடறுக்கிறது; மதம் மொழியை ஊடறுக்கிறது; மொழி பிராந்தியத்தை ஊடறுக்கிறது. கன்னடம் பேசும் ஒரு இந்து, வங்காளம் பேசும் ஒரு இந்துவுடன் மதத்தைப் பகிர்ந்துகொள்கிறார், ஆனால் மொழியை அல்ல; பஞ்சாபில் உள்ள ஒரு விவசாயி, தெலங்கானாவில் உள்ள ஒரு விவசாயியுடன் தொழிலைப் பகிர்ந்துகொள்கிறார், ஆனால் சாதியை அல்ல. ஒரு அச்சில் அரசியல் கூட்டாளிகளாக இருப்பவர்கள், மற்றொரு அச்சில் இயல்பாகவே எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.
இந்தக் கட்டமைப்பு மூன்று நிலைப்படுத்தும் விளைவுகளை (stabilising effects) உருவாக்குகிறது: முதலாவதாக, ஒருங்கிணைப்புத் தோல்வி (coordination failure): புரட்சிகரமான அணிதிரட்டலுக்குப் பொதுவான குறியீடுகளும் எதிரிகளும் தேவை; ஆனால் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களில் ஒரு குழுவை அணிதிரட்டும் முழக்கம், பெரும்பாலும் மற்றொரு குழுவை அந்நியப்படுத்திவிடுகிறது. இரண்டாவதாக, அதிருப்திகள் வட்டாரமயமாக்கப்படுதல் (regionalisation of grievances): அதிருப்திகள் தீவிரமாக வெடித்தாலும், அது உள்ளூர் அளவிலேயே நிகழ்கிறது – தமிழ்நாட்டில் மொழி, பஞ்சாபில் விவசாயம், மத்திய இந்தியாவில் பழங்குடியினர் உரிமைகள் என – அவை மிக அரிதாகவே தேசந்தழுவிய பெரும் கிளர்ச்சியாக மாறுகின்றன. மூன்றாவதாக, மாறும் கூட்டணிகள் (shifting coalitions): ஒன்றையொன்று தழுவிய அடையாளங்கள், முழுமையான அரசியல் அழிவுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை, அரவணைப்பு மற்றும் சமரசத்தையே ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிற்கான படிப்பினைகள்
சமூகம் பலவிதமான நலன்கள், பிரிவுகள் மற்றும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்போது தன்னுரிமை பாதுகாப்பாக இருக்கும் என்ற சமூகவியல் எதார்த்தத்தை, ஜேம்ஸ் மேடிசன் (James Madison) தனது ‘பெடரலிஸ்ட் எண். 10’ (Federalist No. 10) என்ற கட்டுரையில் முன்பே கணித்திருந்தார்:
“பிளவுவாதத் தலைவர்களின் செல்வாக்கு தங்களது குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் ஒரு தீயைப் பற்றவைக்கக்கூடும்; ஆனால் மற்ற மாநிலங்கள் முழுவதும் அதனை ஒரு பெரும் நெருப்பாகப் (general conflagration) பரப்ப அவர்களால் முடியாது.”
மேடிசனின் இந்த நுண்ணறிவை இந்தியா ஒரு நாகரிகத் தளத்திலேயே (civilisational scale) மெய்ப்பித்துக் காட்டுகிறது. இங்குள்ள மொழி, சாதி, மதம் மற்றும் வட்டாரம் சார்ந்த அசாதாரணப் பன்முகத்தன்மை, எந்தவொரு தனித்த உட்பிரிவும் ஒட்டுமொத்த “மக்களையும்” பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவதைச் சாத்தியமற்றதாக்குகிறது. மையவாதக் கண்ணோட்டத்திற்கு (centralist perspective) இது ஒருவித ஒழுங்கீனமாகவோ சிதறுண்ட நிலையாகவோ தோன்றலாம். ஆனால் உண்மையில், புரட்சிகரமான முறிவுகள் மற்றும் பெரும்பான்மைவாத ஆதிக்கம் (majoritarian domination) ஆகிய இரண்டையுமே தடுப்பதற்கான ஒரு கட்டமைப்புரீதியான பாதுகாப்பாகவே இது இயங்குகிறது.இந்தக் காரணத்தினால்தான், “ஒரே நாடு, ஒரே மொழி” அல்லது “ஒரே நாடு, ஒரே அமைப்பு” போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை ஒற்றைமயமாக்கும் முயற்சிகள் அடிப்படையிலேயே தவறானவைகளாகும். கட்டாய மொழி ஒருமுகத்தன்மை (compulsory linguistic uniformity), கட்டாயப்படுத்தப்படும் சாதி அல்லது மத மறுப்புத் திருமணங்கள், கட்டாய மதமாற்றங்கள் அல்லது இது போன்ற தலையீடுகள் மூலமாக – இந்தியாவின் பன்மைத்துவ அடையாளங்களை (plural identities) செயற்கையாகவோ அல்லது வற்புறுத்தியோ அழித்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒற்றைமயமாக்கல் சாத்தியமாக இருந்தாலும்கூட, அது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு நேர்மாறான விளைவுகளைத் தருவதாகவும் ஆபத்தானதாகவுமே முடியக்கூடும். இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால்தான் அது இன்றும் ஒற்றுமையுடன் நிலைத்திருக்கிறது – மேலும் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பு, எத்துணை குறைபாடுகள் இருந்தபோதிலும், அந்தப் பன்முகத்தன்மையை மறுப்பதற்குப் பதிலாக அதனை அரவணைத்து வாழக் கற்றுக்கொண்டதாலும்தான். (தொடரும்)
கட்டுரையாளர் குறிப்பு:

கே. அசோக் வர்தன் ஷெட்டி, IAS (ஓய்வு),
- இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.
- ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்.
