ராஜன் குறை
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்திற்கேற்ப 22 கட்சிகளையும், அனைத்து சமூகத் தொகுதிகளையும் ஒருங்கிணைத்து பிரம்மாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது தி.மு.க. அதன் பிறகும் 164 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும் பதினோரு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். உதய சூரியன் சின்னம் போட்டியிடும் தொகுதிகள் 175. பிற சின்னங்களில் கூட்டணி கட்சிகள் 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
சிந்தித்துப் பார்த்தால் இத்தனை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் ஆமோதிப்பைப் பெற்று இப்படியொரு கூட்டணி உருவாக்குவது சுலபமான காரியமல்ல என்பது புரியும். இதனை முதல்வர் ஸ்டாலின் சாதித்துக் காட்டியுள்ளார். அத்துடன் வளர்ச்சியும், நலத்திட்டங்களும் இணைந்த நம்பகமான, முதிர்ச்சியான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.

ஸ்டாலின் சாதனையின் அடிப்படை வெறும் அரசியல் பேரமல்ல. சுயநல, பதவி மோக அரசியல் அல்ல. அப்படியிருந்திருந்தால் இந்த கூட்டணி சாத்தியமாகியிருக்காது. இந்த கூட்டணியின் அடிப்படை அழுத்தமான, ஆக்கபூர்வமான கருத்தியல் என்பதுதான் முக்கியம். அந்த கருத்தியலின் அடிப்படைகள் மூன்று: மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சியம். இந்த மூன்றும் ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக-வின் இந்துத்துவ, பார்ப்பன-பனியா மேலாதிக்க ஆதரவு கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது என்பதுதான் கூட்டணியை பிணைக்கும் கருத்தியல் சிமெண்ட் என்பது யாருக்கும் புரியும்.
தி.மு.க திராவிடவியம் (Dravidianism) என்ற கருத்தியல் எஃகுக் கோட்டையால் கட்டப்பட்டது. அது இந்துத்துவத்தின் துருவ எதிர்முனை. வேறு வகையில் பாஜக வலதுசாரி அரசியலுக்கு எதிர்முனையில் இருக்கும் இடதுசாரி கட்சிகள் தி.மு.க-வுடன் பிணைந்திருப்பதும். தலித் அரசியலின் கோட்பாட்டுச் செறிவினைக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க-வுடன் பிணைந்திருப்பதும் அதனால்தான்.
தி.மு.க-வுடன் தமிழ்நாட்டு வரலாற்றில் முரணரசியல் எதிர்முனையாக இருந்த அ.இ.அ.தி.மு.க, பாஜக தமிழ்நாட்டின் திராவிடவிய அரசியலுக்கு முற்றிலும் எதிரானது என்பதைக் கருதாமல் அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது. பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் சுமந்தாலும் அந்த கருத்தியல் அடிப்படைகளை முற்றிலும் துறந்துவிட்டது. ஆனால் பேச்சுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று பம்மாத்து செய்கிறது.
மக்களாட்சியில் எதிர்கட்சி, ஆளும் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற போராடத்தானே வேண்டும் என்று கேட்கலாம். அது முற்றிலும் சரியான வாதம். எப்படி போராட வேண்டும் என்பதுதான் கேள்வி. தி.மு.க-வை விட பாஜக-வை நாங்கள்தான் தீவிரமாக எதிர்க்கிறோம் என்று நிரூபித்து போராட வேண்டும். நாங்கள்தான் உண்மையான அண்ணாவின் வாரிசு, ஆரிய மாயைக்கு பலியாக மாட்டோம் என்று போராட வேண்டும். நாங்கள்தான் மாநில சுயாட்சிக்காக தீவிரமாக போராடுகிறோம் என்று கூற வேண்டும். அப்படி செய்தால் அது உண்மையான திராவிட முரணரசியல்.

அ.இ.அ.தி.மு.க அதன் வரலாற்றுத் தோற்றுவாயிலிருந்து முற்றிலும் அன்னியப்பட்டு நிற்கிறது. அது தி.மு.க-வை வீழ்த்த பாஜக-வின் ஆதரவை நாடி கருத்தியல்ரீதியாக சரணடைந்து விட்டது. ஆனால் அரசியல் விவாதங்களில் பலரும் பழனிசாமி எத்தனை தொகுதிகள் பாஜக-விற்குக் கொடுத்தார் என்பதை வைத்து அவரது ஆளுமையை, சுதந்திரத் தலைமையை எடைபோடுகின்றனர். இது எப்படிப்பட்ட பிழைவாதம் என்பதை நாம் அரசியல் தத்துவத்தின் துணை கொண்டு புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் (politics) வேறு, முரணரசியல் (political) வேறு
அரசியலை மூன்று முக்கிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும். ஒன்று கருத்தியல், கொள்கை, கோட்பாடு என்ற பரிமாணம். அடுத்தது கட்சி அமைப்புகள், அவற்றின் கட்டமைப்பு, சமூகத்தில் அவற்றின் வேர்கள் என்ற பரிமாணம். மூன்றாவது தனி நபர்களான அரசியல்வாதிகள், அவர்கள் அணிசேர்க்கைகள் என்ற பரிமாணம்.
கருத்தியல் பரிமாணம்: ஆட்சி என்பது கருத்தியல், கோட்பாடு, கொள்கைகள் சார்ந்தது. அது எந்தவிதமான தத்துவத்தின் அடிப்படையில் குடியரசு செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது. கொள்கை முடிவுகளை, அரசு நிர்வாகத்தைத் தீர்மானிப்பது. குடியரசின் சட்டங்களை தீர்மானிப்பது விழுமியங்கள்; அரசின் திட்டங்களை தீர்மானிப்பது கொள்கைகள், கோட்பாடுகள். இவற்றில் உள்ள கருத்தியல் வேறுபாடுகள் சில கட்சிகளுக்கு நிலையான அடையாளங்களை வழங்குபவை.
கட்சி அமைப்பு என்ற பரிமாணம்: இருப்பினும் கட்சி அமைப்புகளை கருத்தியலுடன் முழுமையாக இணைத்துவிட முடியாது. ஏனெனில் ஒரு கட்சியின் கருத்தியலே கூட காலப்போக்கில் மாறலாம். அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் நிறவேற்றுமைக்கு எதிரான கருத்தியல் ஜனநாயகக் கட்சியின் கருத்தியலாகக் காலப்போக்கில் மாறியது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் சோஷலிஸ நோக்கு உலகமயமாதல் நோக்காக மாறியது; மீண்டும் மக்கள் நலன் நோக்காக வடிவம் பெற்றுள்ளது. கட்சிகள் என்பவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள் மாற்றத்திற்குரியனதான். வாஜ்பேயி கால பாஜக-வைவிட மோடி கால பாஜக தீவிர இந்துத்துவ நோக்கு கொண்டது எனலாம். மேற்கு வங்காள கம்யூனிஸ்டு ஆட்சியும் புத்த தேப் தாஸ்குப்தா முதலமைச்சர் ஆனபோது அந்நிய முதலீடுகளை வரவேற்றது. ஆனால் சில கருத்தியல் அம்சங்களில் கட்சி அமைப்புகளில் ஒரு தொடர்ச்சியும் இருக்கும் எனலாம்.
முரணரசியல் பரிமாணம்: முரணரசியல் என்பது நபர்கள் சார்ந்தது. யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது. முரணசியல் என்பது நண்பன் யார், பகைவன் யார் என்று அணி சேர்வது. இதனை நடப்பரசியல் அல்லது நடைமுறை அரசியல் எனலாம். இதில் தனி நபர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே முக்கியத்துவம் பெறும். முன்னாளில் மன்னர்களுக்கு இடையிலான போர்களாக இருந்தது போல ஒவ்வொருவரும் அதிகாரத்தை நிலைப்படுத்துவதை நோக்கி நகர்வதாக இருக்கும். ஒரே கட்சிக்குள்ளும், ஒரே சமூகத்திற்குள்ளும், ஒரே கருத்தியலைச் சேர்ந்தவர்களுக்குள்ளும். ஏன் ஒரே குடும்பத்தை சேர்தவர்களுக்குள்ளும் கூட முரணரசியல் இருக்கும். ஆண்டிப்பட்டி தொகுதியில் சகோதரர்களே எதிரெதிர் அணியில் போட்டியிடுகிறார்கள். அண்ணன் தி.மு.க; தம்பி அ.இஅ.தி.மு.க.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது என்று சொல்லும்போது நண்பர்கள், எதிரிகள் என்ற வேறுபாடுதான் முரணரசியலின் அடிப்படை என்பது தெளிவாகிறது. அதாவது ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகள் போல. ஆட்டக்காரர்கள் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு மாறிவிடுவார்கள் – அதாவது வாங்கப்படுவார்கள். சென்னை சூப்பர் கிங்க்ஸில் ஆடியவர் அடுத்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்சிற்கு ஆடுவார். ஆனால் அணிகள் தொடர்ந்து போட்டியிடும். அரசியலிலும் காங்கிரஸில் இருப்பவர் பாஜக-விற்குச் சென்றுவிடுவார். பாஜக தலைவர் காங்கிரஸில் இணைந்துவிடுவார் (குஜராத் பாஜக தலைவர் சங்கர்சிங் வாகேலா காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனார்.)
இப்படி கட்சி மாறுபவர்களுக்கு கொள்கை கிடையாதா என்று கேட்பதில் பொருள் இல்லை. ஏனெனில் அவர்களை செலுத்துவது முரணரசியல் பரிமாணமே. மேலும் மக்களாட்சிக் கட்சிகளிடையே பொது நன்மை, மக்கள் நலன் என்பது போன்ற பொது அம்சங்கள் நிறைய உண்டு. எந்த கட்சியில் இருந்தாலும் அது மக்கள் பணிதான் என்பதால் கருத்தியலுக்கு அப்பாற்பட்ட குடியரசு அரசியல் என்பது முரணரசியலுக்கு களம் அமைக்கிறது. அதனால் பரந்த நோக்கில் எந்த கட்சியிலும் அரசியல் பணியாற்றலாம் என்பது மக்களாட்சி நோக்கிற்கு எதிரானது என்று சொல்ல முடியாது. அதனை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம், ஏன் கட்சி மாறினீர்கள், உங்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்வதில்லை.

அ.இ.அ.தி.மு.க-விற்கு என்ன நடந்தது?
அ.இ.அ.தி.மு.க முரணரசியலில்தான் பிறந்தது. எம்.ஜி.ஆரும் அண்ணா பெயரில்தான் கட்சி தொடங்கினார். அண்ணாவின் உருவத்தை கட்சிக் கொடியில் பொறித்தார். தி.மு.க-வுடன் எம்.ஜி.ஆரின் துவக்ககால வேறுபாடு கருத்தியல் வேறுபாடு என்று சொல்லமுடியாது. ஆனால் காலப்போக்கில் அது திராவிடவிய அம்சங்களில் மென்போக்கைக் கடைபிடித்தது. கட்சிப் பெயரிலேயே “அகில இந்திய” என்ற அடைமொழியைச் சேர்த்தது. பெரியாரியத்திலிருந்து விலகத் துவங்கியது. இது ஜெயலலிதா காலத்தில் அதிகரித்தது. ஆனாலும், சமூக நீதி, மாநில உரிமை ஆகியவற்றில் திராவிட கருத்தியல் வெளிக்குள்தான் இயங்கியது.
தி.மு.க-வும், அ.இ.அ.தி.மு.க-வும் மாறி, மாறி ஆட்சி செய்ததால் திராவிட தமிழர் என்ற மக்கள் அடையாளம் உறுதிப்பட்டது. இந்தியாவிலேயே மாநில முரணரசியல் திடமாக வேர்கொண்ட மக்கள் பரப்பாக தமிழ்நாடு மாறியது. இந்த அடையாளம் கொடுத்த தன்னுணர்வு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியது. முரணரசியல் போட்டியும் வளர்ச்சிக்கு உதவியது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க கட்சி அமைப்பை பலவீனப்படுத்தி தன் பிடிக்குள் கொண்டுவர ஒன்றியத்தில் ஆட்சி செய்த பாஜக விரும்பியது. அ.இ.அ.தி.மு.க தலைவர்களை ஒருவருக்கொருவர் எதிராக இயங்க அது தூண்டி முரணரசியலைக் கூர்மைப்படுத்தியது. கட்சியைப் பிளந்தது; இணைத்தது.
இந்த சதுரங்க விளையாட்டில் பாஜக-வின் ஒரே ஒப்பந்ததாரராகத் தானே விளங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்பினார். சசிகலா, ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் ஆகிய அனைவரையும் விலக்கிவிட்டு தானே கட்சியின் தலைவராகி, பாஜக கூட்டுறவுடன் ஆளவேண்டும் என்பதே அவர் இலட்சியமாக இருந்தது.
பண்பாட்டு ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பழனிசாமிக்கு திராவிட கருத்தியல் புலத்துடன் எந்த ஒட்டுதலும், உறவும் இருக்கவில்லை. அவர் வளரும் பருவத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்திருக்கலாம் என்பதற்கு மேல் எந்த கருத்தியலும் அவரைத் தீண்டியதாகத் தெரியவில்லை. அவர் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று சொன்னது வாய்தவறிய சந்தர்ப்பமாக இருந்தாலும், வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு தமிழ் பண்பாட்டு வரலாற்றின் மீது எந்த பற்றும் இருப்பதாக வெளிப்பட்டதில்லை.
அவர் ஆட்சியிலிருந்து நாலரை ஆண்டுகளில் ஒன்றியத்தில் பாஜக கொண்டுவந்த அனைத்து பிற்போக்குக் கொள்கைகளுக்கும் ஆதரவளித்தார். குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை நாடெங்கும் சிறுபான்மையினர் எதிர்த்தபோது, அதனை ஆதரித்தார். விவசாய சட்டங்களை நாடெங்கும் விவசாயிகள் எதிர்த்துப் போராடியபோது அவற்றை ஆதரித்தார். இந்தியக் குடியரசு வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலத்தை, காஷ்மீர் மாநிலத்தை, மாநிலம் இல்லையென அறிவித்தபோது வாளாவிருந்தார். தி.மு.க தலைநகரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நட த்தி தீவிரமான கண்டனங்களைப் பதிவு செய்தது.
உச்சகட்டமாக அவரிடம் “திராவிடம்” என்று ஒரு தனி அடையாளம் கிடையாது என்று ஆளுனர் கூறுகிறாரே என்று கேட்டபோது. அதையெல்லாம் ஆராய்ச்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கைவிரித்துவிட்டார். அவர் கட்சியின் பெயருக்காகக் கூட திராவிட அடையாளத்திற்காக வாதிட முடியாத அளவு பலவீனமானவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு அது தேவையுமில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் எதிரி நண்பன் முரணரசியல்தான். அதில் எப்படியாவது தான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும், முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் இலட்சியம்.

பழனிசாமி முரணரசியல் வெற்றிகரமானதா?
கருத்தியல், கொள்கையெல்லாம் கிடையாது; பழனிசாமி முரணரசியல் வியூகத்தில் மிகவும் கெட்டிக்காரர் என்று கூறலாமா என்று பார்த்தால் அதற்கு சிறிதும் சாத்தியமில்லை. எப்படியென்று நாம் நுட்பமாக ஆராய வேண்டும்.
முரணரசியலில் என்ன செய்ய வேண்டுமென்றால் எதிரிகளையும் நண்பர்களாக மாற்ற வேண்டும். அப்போதுதான் ஆதரவு தளம் பெருகும். ஆனால் பழனிசாமி நண்பர்களையும் எதிரிகளாக்குவதில் தீவிரமாக இருப்பவர். தன் கட்சியிலிருந்து எத்தனை பேர் விலகினாலும் பிரச்சினை இல்லை என்று இறுமாந்திருக்கிறார். எப்படியாவது பாஜக ஆதரவு இருந்தால் போதும்; நாம் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார். அங்கேதான் மிகப்பெரிய வேடிக்கை இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை பழனிசாமி பாஜக, ஒன்றிணைந்த பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இன்னபிற கட்சிகள் என்ற வலுவான கூட்டணியுடன் முதலமைச்சராக சந்தித்தார். தி.மு.க அணியிடம் ஆட்சியை பறிகொடுத்தார்.

இந்த தேர்தலின் போது அவருடைய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க-வில் இணைந்துவிட்டார். வேறு ஓ.பி.எஸ் அணித் தலைவர்களும், அவர்களை பின்பற்றும் தொண்டர்களும் தி.மு.க-வில் இணைந்துவிட்டார்கள். செங்கோட்டையனும், வேறு சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டார்கள். தேமுதிக தி.மு.க கூட்டணிக்குச் சென்றுவிட்டது. பாமக பிளவுபட்டு அன்புமணி தலைமையிலான பிரிவு அவருடன் கூட்டணி அமைத்துள்ளது. புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதையெல்லாம் விட உச்சகட்டம் பாஜக-வுடனான அவருடைய உறவுதான்.

பழனிசாமியின் கோரிக்கை என்னவென்றால் அவர் இந்துத்துவத்தின் பிரதிநிதியாக தமிழ்நாட்டில் இருப்பார். ஆனால் அ.இ.அ.தி.மு.க என்ற கட்சி அமைப்பினை தன் பிடியில் வைத்துக்கொண்டு அதன் தலைவராக, முதல்வராக இருப்பார். அதற்கு பாஜக ஒத்துழைக்க வேண்டும். பாஜக நேரடியாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய முயலக் கூடாது.
ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு சில மாவட்டங்களில் படத்தின் உரிமைகளை விநியோகஸ்தரிடம் கொடுப்பார். சில மாவட்டங்களில் தானே வெளியிடுவார். அது போல தமிழ்நாட்டில் இந்துத்துவ விநியோக உரிமையை தன்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் பழனிசாமி விரும்பும் ஏற்பாடு.
ஆனால், பாஜக-விற்கு தானே நேரடியாக விற்பனை செய்யவேண்டும் என்று விருப்பம். அதனால் அண்ணாமலை தலைவரானபோது அவரை தனித்து கட்சியை வளர்க்கச் சொல்லி அனுமதித்தார்கள். அது நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனி கூட்டணி அமைத்துப் போட்டியிடும் அளவிற்குச் சென்றது. அப்போது பாஜக பத்து, பதினோரு சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டதாகக் கணக்குக் காட்டினார்கள். இந்தியா முழுவதும் அண்ணாமலை புகழ் பரப்பப்பட்டது.
பழனிசாமி பாஜக-வுடன் தொகுதி பங்கீடு ஏற்படாததால், பன்னீர்செல்வத்தையும் வெளியேற்றிய நிலையில், ஒற்றைத் தலைமையாக தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். தோராயமாக இருபது சதவீத வாக்குகளைப் பெற்றார். ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அதைவிட முக்கியம் 2021 சட்டமன்ற தேர்தலில் தோற்றதற்கு பாஜக-வே காரணம் என பல முக்கிய தலைவர்கள் கூறியதுதான்.

இருப்பினும் வேறு வழியின்றி 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். பாஜகவும் அண்ணாமலையின் கட்சி வளர்க்கும் முயற்சி போதிய பலனளிக்கவில்லை என்று நினைத்ததால் பழனிசாமி ஏஜென்சியுடனேயே கருத்தியல் விநியோகத்தைத் தொடரலாம் என்று நினைத்தது. மேலும். அ.இ.அ.தி.மு.க வாக்குகளை தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்றால் அதனுடனேயே பயணிக்க வேண்டும் என்பதும் தேவைதான். எனவே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே மீண்டும் உறவு புதுக்கப்பட்டது.
அவ்வாறு நிகழ்ந்தபோது பழனிசாமி விதித்த நிபந்தனை என்னவென்றால் அண்ணாமலை பாஜக-வின் மாநிலத் தலைவராகத் தொடரக்கூடாது என்பதுதான். அதாவது யாரால் பாஜக வளர்ந்து பத்து சதவீத வாக்குகள் வரை பெற்றது என்று கூறுகிறார்களோ, அவரையே நீக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அப்படி செய்தால் பாஜக-வும் பலவீனமடைந்து, கூட்டணியும் பலவீனம்தானே அடையும்? ஆனாலும் பழனிசாமி அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ‘வெற்றி’ பெற்றுவிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி கண்ட கட்சிகள் அனைத்தையும், பாஜக-வேதான் கூட்டணிக்குள் இணைக்க வேண்டியிருந்தது. உள்ளபடியே சொன்னால் பழனிசாமிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார் எனலாம். ஆனால் தமிழ்நாட்டில் பழனிசாமி தானே கூட்டணிக்குத் தலைமை என்று கூறுகிறார். அனைவரும் அவரை மகிழ்விக்க, சரி ஆசைப்படுகிறார், அவரே தலைவராக இருக்கட்டும் என்று கூறுகிறார்கள்.
உண்மையில் பாஜக தலைமையில்தான் கூட்டணி செயல்படுகிறது என்பது அனைவரும் டில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் அப்பட்டமாகத் தெரிகிறது. தொடர்ந்து தானே தலைவர் என்று கூறவேண்டியிருப்பதே நிலைமையின் அபத்தத்தைத் தெளிவுபடுத்துகிறது. யார் தலைவர் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டுதானே இருக்க வேண்டும்? வெறும் தொகுதி எண்ணிக்கை மட்டும் தலைமையத் தீர்மானிக்குமா?
இந்த நிலையில்தான் சென்ற சட்டமன்ற தேர்தலில் 20 இடங்கள் கொடுத்த பாஜகவிற்கு 27 இடங்கள் கொடுத்துவிட்டு அவர்களை வெற்றிகரமாக டீல் செய்துவிட்டதாக பெயர் எடுத்துள்ளார். இவர் எதற்காக பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார், எதற்காக அதிக இடங்களைக் கொடுத்தார் என்பதே தெரியாத நிலையில் அவருடைய ஆளுமையைப் புகழ்ந்து ஆளுக்கொரு விளக்கம் கொடுப்பதைக் கண்டால் வியப்பாக இருக்கிறது.
இப்போது மூன்று பரிமாணங்களில் பழனிசாமி தலைமையை தொகுத்துக்கொள்வோம்.
- திராவிட கருத்தியல், கொள்கை, கோட்பாடு என்பதோடெல்லாம் தொடர்பில்லை. இந்துத்துவத்திடம் சரணாகதி என்றே கூறலாம்.
- கட்சி அமைப்பைக் கைப்பற்றினாரே தவிர, கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை. பல தலைவர்களும் வெளியேறிவிட்டார்கள்.
- கட்சியிலும் சரி, கூட்டணியிலும் சரி எதிரிகள் அதிகரிக்கிறார்கள்; நண்பர்கள் குறைகிறார்கள். கடுமையாக இவரை எதிர்த்த அன்புமணி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் பலவீனமான கூட்டணியாகவே அமைந்துள்ளார்கள். பாஜக-வில் அண்ணாமலையும். அவர் அணியினரும் அதிருப்தியுடனேயே உள்ளார்கள்.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை குறைத்துக் கொடுத்து தன் ஆளுமையை நிறுவிவிட்டார் என்று கூறுவதெல்லாம் எத்தகைய அரசியல் புரிதல் என்று வியப்பாக இருக்கிறது.

இறுதி ஒப்பீடு
ஸ்டாலின் முரணரசியலை பயன்படுத்தி, எதிரிகளையும் நண்பர்களாக்கி, கட்சி அமைப்பை விரிவுபடுத்தி, கருத்தியல் கோட்டையினை வலுப்படுத்தியுள்ளார். அந்த வகையில் திராவிட அரசியல் மாடலையும் இந்தியாவிற்கு முன்னுதாரணம் ஆக்கியுள்ளார்.
பழனிசாமி முரணரசியலை தன்முனைப்புடன் கையாண்டு, எதிரிகளை அதிகரித்து, கட்சி அமைப்பை பலவீனப்படுத்தி, தன் கட்சியின் கருத்தியலுக்கு எதிர்நிலையிலுள்ள பாஜக-வின் தயவில் அரசியல் செய்யும் நிலையை எட்டியுள்ளார்.
இதனைப் புரிந்துகொள்பவர்கள் கூறக்கூடியது ஒன்றுதான்:
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
