தமிழக சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற விவாதம்
திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்: இந்த அவை பொறுத்தவரையில் 234 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு அவை இது. ஆனால் இன்றைக்கு இருப்பது 227 பேர். நம்முடைய முதலமைச்சர், 2 தொகுதியிலே போட்டியிட்ட காரணத்தினால் 1 தொகுதியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். அதுபோக 6 உறுப்பினர்களுடைய பணியிடம் இங்கே இன்றைக்கு காலியாக இருக்கின்றது. 6 உறுப்பினர்கள் பதவி ஏற்று ஒரு மாதத்திற்குள்ளே தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்.

அவர்கள் ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது இன்று வரை முழுமையாக வெட்டவெளிச்சமாக யாருக்கும் தெரியவில்லை, ஆனால் மக்களுடைய…
சபாநாயகர்: அல்ல, அது அவங்களுடைய விருப்பம்…
ஆஸ்டின்: ஆனால் மக்களுக்கு இன்றைக்குத் தெரிகின்றது. என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அந்த 6 தொகுதியினுடைய மக்களுடைய குரல் இந்த அவையில் இன்றைக்கு முடக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்குக் குரல் கொடுக்க இன்றைக்கு ஆள் இல்லை. கிட்டத்தட்ட 3 மாத காலம் ஆகிவிட்டது. ஒரு தேர்தலிலே போட்டியிடுவது வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கெல்லாம் தெரியும். ஒரு மாத காலம் கடுமையாக அந்த 6 உறுப்பினர்களும் அங்கே பணியாற்றி இருப்பார்கள். மக்கள் வாக்களித்த மக்கள், 60 வயது.. 70 வயது என்பதை தாண்டியவர்கள் எல்லாம் நடக்க முடியாத அளவிலே கூட அந்த வாக்குச் சாவடிக்கு வந்து, இவருக்கு ஓட்டு போட வேண்டும், இவர் ஓட்டு போட்டால் இந்த தொகுதி மக்களுக்கு நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை… அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள் வந்து அங்கு வாக்களிக்கின்றார்கள். ஆனால் இன்றைக்கு அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இன்றைக்குப் பொய்த்துப் போய்விட்டது.
சட்டமன்ற உறுப்பினருக்கும் சரி, அவருடைய குடும்பத்தாருக்கும் சரி, அவருடைய நண்பர்களுக்கும் சரி, தொகுதி… அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் சரி, மிகப்பெரிய மகிழ்ச்சியும் மிகப்பெரிய கொண்டாட்டமும் இருக்கும். 5 காலம் இந்த எம்.எல்.ஏ பதவி என்ற ஒரு மிகப்பெரிய அந்தஸ்து, ஒரு மிகப்பெரிய மரியாதை… இதையெல்லாம் ஒருவர் இழந்துவிட்டு, வெற்றி பெற்று பதவியேற்ற ஒரே மாத காலத்திற்குள்ளாக ஒரு கூட்டத் தொடரில் கூட கலந்து கொள்ளாமல், பதவியை ராஜினாமா செய்கின்றார் என்று சொன்னால், இதைவிட பெரிய ஆதாயம் கிடைத்தால் தான் பண்ணுவாரே தவிர, சாதாரணமாக பண்ண மாட்டார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: அவர்களுடைய விலகல் கடிதம், விதிகளின் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு, இப்போது வழக்குமன்றத்திலே வழக்கு இருக்கிறது. தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதைப் பற்றி தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்கும். அதை, பேரவை தலைவர் நான் முடிவு எடுக்க முடியாது. நீங்களும் முடிவு எடுக்க முடியாது. அது தேர்தல் ஆணையம் எப்போது முடிவு எடுத்து தேர்தல் நடந்தாலும், மக்கள் பணி ஆற்றுவதற்கு நிச்சயமாக அங்கே யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தயாராக இருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த விவாதத்திற்குள்ளே போகாமல் மற்ற கருத்துக்களை மானிய கோரிக்கை ஓட்டி பேசுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: 6 எம்.எல்.ஏ தொகுதி வேகண்டா இருக்கு. அந்த மக்களுடைய குரலை கேட்பதற்கு யாரும் இல்லை என உறுப்பினர் பதிவு செய்கிறார்.. மாண்புமிகு முதலமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர் என ஜிஓ போட்டு ஆல்ரெடி அப்பாயிண்ட்மென்ட் பண்ணி இருக்காரு. ஒவ்வொரு மாவட்ட அமைச்சருடைய பொறுப்பு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் எல்லா பிரச்சினைகளையும் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதுதான்.
அதனால, அந்த 6 தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், பொறுப்பு அமைச்சர்கள் 234 தொகுதியும் என்னென்ன தேவைகள் குடிநீர் பிரச்சனை என்னென்ன தேவைகளோ அந்தந்த அமைச்சர்களுடைய நேரடி கண்காணிப்பில் முதலமைச்சருடைய அலுவலகமும் முதலமைச்சரும் நேரடியாக கண்காணிப்பில் மேற்கொண்டு வருகிறார் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: பொறுப்பு அமைச்சர்கள் என்பது எல்லா அரசிலும், எல்லா முதலமைச்சர்களும் எடுக்கக்கூடிய நடவடிக்கை தான். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் கேட்பது, அந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த ஒரு கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல், தன்னுடைய பதவியை ராஜினாமா பண்ணிட்டாங்க, யாரையும் குற்றம் சாட்டவில்லை. மக்களுடைய முடிவுக்கு அவர் விட்டுவிட்டார்.

அமைச்சர் செங்கோட்டையன்: 6 சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றி இங்கே ஆஸ்டின் இங்கே குறிப்பிட்டார். 6 சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகள் என்ன இருக்கிறது என்பதை எங்களை போன்ற அமைச்சர்கள் அங்கு சென்று, மக்களை கூட்டி, மனுக்களை பெற்று, அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர்கள் போய் ஒரே நாள்ல உட்கார்ந்து மக்களுடைய தொகுதி பிரச்சனைகளை எப்படி பேச முடியும்? இன்னைக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தால்தான், அவர்கள் வந்து அந்த தொகுதியில போய் பார்த்து, மக்களை பார்த்து, மக்களுடைய பிரச்சனைகளை கொண்டு வந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு வருவாங்க, அமைச்சருடைய கவனத்துக்கு கொண்டு வருவாங்க. பொறுப்பு அமைச்சர் என்பது ஒரு நாள் போவார்.. கொடுக்கிற மனுவை வாங்குவார்.. அந்த தொகுதியில் இருக்கின்ற மக்களுடைய பிரச்சனையை பொறுப்பு அமைச்சரால் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்ற அடிப்படையில் தான், அங்கு சட்டமன்ற உறுப்பினர் தேவை.
அமைச்சர் செங்கோட்டையன்: அந்த 6 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆர்வம். அதிலே மாற்றுக் கருத்து கிடையாது. அதிலே நாங்கள் வெற்றி பெறுவோம், அதிலும் மாற்றுக் கருத்து கிடையாது. அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: விவாதம் வேற மாதிரி போகுது, திசை மாறி போகுது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கு…
சபாநாயகர் குறுக்கீடு
எடப்பாடி பழனிசாமி: வெற்றி பெற்ற பிறகு, தங்களை சந்தித்து ஒரு மனு கொடுக்கின்றார்கள். அந்த நிகழ்ச்சியிலே ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கு பெறுகிறார். அந்த சட்டமன்ற உறுப்பினர் அடுத்த நாள் ராஜினாமா செய்த உடனே, முதல் மாடியில் இருந்து முதல் மாடிக்கு போய்…
சபாநாயகர் குறுக்கீடு (இது வழக்குமன்றத்திலே இருக்கிறது, இதைப்பற்றி பேச அனுமதி இல்லை. இதிலுள்ள விவரங்கள் எல்லாம் வழக்கிலே இருக்கிறது. நீங்கள் சொல்ற இந்த விவரங்கள் எல்லாம் வழக்கிலே இருக்கிறது. இதைப் பற்றி பேச நான் அனுமதியளிக்கவில்லை. உணர்ச்சிவசப்படாதீங்க.. நீங்கள் சொல்ற கருத்தை நிதானமா சொல்லுங்க..
அமைச்சர் செங்கோட்டையன்: குதிரை பேரம் என்றெல்லாம் பேசினார்கள். நான் சொல்லி முடிக்கிற வரைக்கும். இருங்க, உட்காருங்க. சொல்லி முடிக்கிற வரைக்கும் இருங்க.
(எடப்பாடி பழனிசாமி மைக் துண்டிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓஎஸ் மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சபாநாயகருடன் காரசாரமாக வாதிட்டனர்)
அமைச்சர் செங்கோட்டையன்: எடப்பாடி தொகுதியில் எங்களுடைய வேட்பாளர் அருண் வாபஸ் பெற்றார்; அது குதிரை பேரம் இல்லையா? அவரை இப்போது சேர்த்திருக்கிறீர்களே அது குதிரை பேரம் இல்லையா?
எடப்பாடி பழனிசாமி: அவருடைய (அருண்) மனு தள்ளுபடி செய்ய போயிட்டு இருக்குது. யாரும் வாபஸ் எல்லாம் வாங்கவில்லை. அது முறையாக, அவர் முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதன் மூலமாக, அது இருக்கின்ற தேர்தல் அதிகாரி அந்த மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்று சொல்லிருக்காங்க ஒழிய, யாரும் வாபஸ் வாங்கவில்லை. அது குறிப்பா சொன்னா, அப்போது வேட்பு மனு பரிசீலிக்கும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணா திமுக வேட்பாளருக்கு தான், அங்க எனக்கும், என்னை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு தான் பிரச்சனை ஏற்பட்டுக்கிட்டு இருந்தது. அவர்களைப் பத்தி, அவருடைய வேட்பாளரை பத்தி எல்லாம் நாங்க பொறுட்படுத்தவில்லை.
ஆக, அவை முன்னவர் பேசுகிறார் என்றால், இருக்கின்ற கருத்து பேசலாம், பரவாயில்லை. இல்லாத கருத்து பேசினால், அவை திசை திரும்பி போய்க்கொண்டிருக்கின்றது. ஆகவே, நான் கூர்ந்து நேரம் சொல்வதெல்லாம், ஒரு கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எங்களோடு இருந்துட்டு இருக்காங்க. திடீரென்று எப்படி வேறு கட்சிக்கு மாறுவாங்க? நான் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை. எப்படி போய் கட்சியில் சேருவாங்க? ராஜினாமா பண்றாங்க, சட்டப்பேரவைத் தலைவர்கிட்ட ராஜினாமா கடிதம் கொடுக்கிறாங்க. ராஜினாமா வந்து பரிசீலிங்கிறீங்க. அடுத்த முதல் மாடிக்கு போய், உடனே கட்சியில் சேர முடியுது…
சபாநாயகர்: இந்த, இந்த விதிப்படி, நீதி விசாரணையில் இருக்கும் எந்த பொருள் குறித்தும், தன் கருத்தை சொல்லவோ, அப்பொருள் குறித்து பேசவோ கூடாதுன்னு அனுமதி இல்லை. நீங்கள் கோர்ட்டுல கேஸ் இல்லைன்னா, என்ன வேணாலும் நான் பேச அனுமதிக்கிறேன். வழக்கில இதெல்லாம் சொல்லியிருக்கீங்க. வழக்காடு மன்றத்தில் இருக்கிற பிரச்சனையில் இருக்கிற விபரத்தை சொன்ன பிறகு, அவர் எந்த கட்சி, அந்த கட்சி என்று அல்ல. மைக் கொடுத்துருங்க, மைக் கொடுத்து சொல்லியாச்சு. இல்லை, நிக்கிறது தான். இது என்ன பொதுக்கூட்டமா இது? இது என்ன பொதுக்கூட்டமா இது? உட்காருங்க. இது என்ன பொதுக்கூட்டமான்னு கேட்கிறேன்? இது என்ன பொதுக்கூட்டம்? உட்கார சொல்லுங்க எல்லாரையும். உட்காருங்க எல்லாரும். என்னங்க?

உங்களை பேச அனுமதிக்கொண்டிருக்கும்போது, பின்னாடி நின்னு குரல் கொடுத்தீங்கன்னா, பொதுக்கூட்டமா நடத்திடுவோம். இந்த அவை மாண்பை காப்பாத்துங்க. நான் விதியை பின்பற்ற ஆரம்பிக்கணுமா? உட்காருங்க எல்லாரும். உட்காருங்க, உட்காருங்க, உட்காருங்க. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் சொல்றேன்.
”இது மாதிரி ஆகுமா, ஆகாதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள்.. நானும் முதல் நாள்ல இருந்து உங்களுக்கு சொல்றேன். உணர்ச்சிவசப்படாமல் பேசுங்கள். 3 முறை உங்களுக்கு நான் சொல்லிட்டேன். உங்கள் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக நான் சொல்றேன்.. அருள்கூர்ந்து சொல்றேன். அமைதியாக பேசுங்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்தை நீங்கள் அமைதியாக சொல்லுங்கள், நான் ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கேன். ஒன்னே ஒன்னுதான்.
ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள், அவர்களாகவே முன்வந்து ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியிலே சேருகிற போது என்னென்ன சங்கடங்கள் சிரமங்கள் இருக்கின்றது என்று நீங்கள் விளக்கமாக…

ஏன் அங்க குறுக்கே பேசுறீங்க? உட்காருங்க.
ஒரு கட்சி தலைமைக்குரிய உள்ள உணர்வினை முதல் குறையில் குறிப்பிடுகிறபோது, எவ்வளவு பேர் உழைச்சாங்க? 6,000 பேர் வேலை செஞ்சாங்க? இவ்வளவு பேருடைய உழைப்பில்தான் ஜெயிச்சாங்க என்று உங்களுடைய உள்ள உணர்வுகள் எல்லாம் நீங்கள் நல்லா பதிவு செஞ்சீங்க, பதிவிலே இருக்கு. நான் ஃபுல்லா படித்து பார்த்தேன்.
ஒரு கட்சியினுடைய தலைமையிலிருந்து ஒருவர் விலகிப் போகிறபோது, ஒரு கட்சித் தலைமைக்கு ஏற்படுகிற இழப்பு குறித்தும், வருத்தம் குறித்தும் நிறைய பேசி இருக்கீங்க. அதெல்லாம் குறிப்பிலே இருக்கிறது.
இப்போது, இந்த பிரச்சனையில் மாண்புமிகு உறுப்பினர் ஆஸ்டின் பேசிய பிறகு, தேவையில்லாத விவாதங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதை சொல்லி முடிச்சிரணும். அவை முன்னவர் தவிர்த்திருக்கலாம். இருங்க. வழக்குமன்றத்தில் இருக்கிற எந்தப் பிரச்சனை குறித்தும் மேற்கொண்டு அதிலே விவாதங்களை வளர்த்துக் கொள்ளாமல், இந்த பிரச்சனையை இதோடு நான் முடித்து விடுகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
