விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு : அச்சத்தில் பொதுமக்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு ரிக்டர் அளவுகோலில் 3.0 மதிப்பீட்டில் லேசான நில அதிர்வு பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு தூத்துக்குடி மாவட்டத்திலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.06 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி, மாரனேரி, ஈஞ்சார், ராஜபாளையம், சஞ்சீவிமலை, அத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிர்வு அதிக அளவில் உணரப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்ததால் மக்கள் பதற்றமடைந்தனர். பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர், விஸ்வநாததாஸ் நகர், இந்திரா நகர், சுபா நகர், பாண்டவர்மங்கலம், சாய் சிட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு 9.15 மணியளவில் சில வினாடிகள் கடுமையான அதிர்வு உணரப்பட்டது. சில வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வின் தாக்கம் தூத்துக்குடி மாவட்டத்திலும் எதிரொலித்திருக்கலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.

புவியியல் ஆய்வாளர்கள் நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நில அதிர்வால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.அப்பகுதி மக்கள் கூறுகையில், மின்னல் போன்ற பெரிய சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், பொருட்கள் லேசாக ஆடியதாகவும், நாய்கள் அதிக சத்தத்துடன் குரைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், நில அதிர்வால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இரவில் சரியாகத் தூங்க முடியவில்லை என்றும் கூறினர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share