நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்… ஒருபோதும் புறக்கணித்துவிடாதீர்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

early symptoms of lung cancer Never ignore

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் புகைபிடிப்பது. முன்பெல்லாம் நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பவர்களிடம் அதிகம் காணப்பட்டது. ஆனால் இப்போது ​​புகைப்பிடிக்காதவர்களிடம் கூட நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். புகை பிடிக்காதவர்கள் இடையே புற்றுநோய் வருவதற்கு காற்று மாசு மிக முக்கிய காரணமாக உள்ளது.

ADVERTISEMENT

நுரையீரல் புற்றுநோயின் தொடக்கத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாததால் அதனை மக்கள் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் புற்றுநோய் (Lung cancer symptoms) முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் குணப்படுத்துவது கடினமாகிவிடுகிறது. தொடக்கத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தி நல்வாழ்க்கை வாழலாம்.

தொடர்ந்து இருமல் பிரச்சனை

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் தொடர் சோர்வு, மூச்சுத்திணறல், மார்பு அசவுகரியம் மற்றும் லேசான இருமல் போன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படலாம். பலர் இந்த அறிகுறிகளை சாதாரண சளி அல்லது சிறிய சுவாசப் பிரச்சனை (Breathing problem) என்று புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால், இந்த அறிகுறிகள் வாரக்கணக்கில் நீடித்தால் மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ADVERTISEMENT
சளியுடன் ரத்தம் வருதல்

தொடர் இருமல், அடிக்கடி ஏற்படும் மார்பு நோய்த்தொற்றுகள் குரலில் மாற்றம், மார்பு இறுக்கம், சுவாசிப்பதில் சிரமம், இருமலுடன் ரத்தம் வருதல் (Coughing up blood) போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. அதேபோல காரணமின்றி உடல் எடை குறைதல், பசியின்மை மற்றும் ஆற்றல் குறைதல் ஆகியவற்றையும் எச்சரிக்கை மணியாகவே கருத வேண்டும்.

பரிசோதனை முறை

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்டகாலமாகப் புகைப்பிடிப்பவர்கள் (Warning to smokers) குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட சிடி ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் சிகிச்சை வெற்றிபெற வாய்ப்புகள் மிக அதிகம். ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் நுரையீரல் புற்றுநோயையும் முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ADVERTISEMENT
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நுரையீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். புகைப்பிடிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதிக காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். வீட்டில் தூய்மையான காற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெல்லிக்காய், மஞ்சள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

நுரையீரல் புற்றுநோயைப் பொறுத்தவரை மிகச்சிறிய அறிகுறிகளைக் கூட புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  உடல் காட்டும் அறிகுறிகளைக் கவனித்து, தங்கள் உடல் நலத்தைப் பேணுவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share