ராஜன் குறை
தமிழர் பண்பாட்டின் அடித்தளம் குறள்நெறி எனலாம். தேர்தல் அறிக்கைகளை ஒப்பிடும் இந்த நேரத்தில் அதற்குப் பொருத்தமான ஒரு குறளிலிருந்து துவங்குவோம்.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அறிவியக்கமாக தன்னை வடிவமைத்துக் கொண்ட இயக்கம் என்பதால் தேர்தல்களில் பங்கேற்கத் துவங்கிய காலம் முதலே அது தன்னுடைய இலட்சியங்களை, கொள்கைகளை, தாங்கள் செயல்படுத்த விரும்பும், வலியுறுத்தும் திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டு வந்துள்ளது அதன் தனிச்சிறப்பாகும். அக்கட்சியின் துவக்க கால தேர்தல் அறிக்கைகள் தொகுக்கப்பட்டு நூலாகவே வெளிவந்து, ஆய்வாளர்களுக்கு தகவல் களஞ்சியமாக விளங்குவது இதற்குச் சான்றாகும்.
உதாரணமாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை, கோரிக்கையை தி.மு.க துவக்கத்திலேயே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்திரா காந்தி அம்மையார் அறுபதுகளின் இறுதியில்தான் அதனைச் செயல்படுத்தினார் என்பது வரலாறு. அதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் வலதுசாரிகளிடமிருந்து அவர் எதிர்ப்பைச் சந்தித்து கட்சி பிளவுபட்டபோது தி.மு.க அவரை ஆதரித்து நின்றதும், 1971 தேர்தலில் அவருடன் கூட்டணி கண்டதும் வரலாறு.

நடைபெறும் தேர்தலின் சூப்பர் ஸ்டார் தி.மு.க தேர்தல் அறிக்கை!
முதல்வர் ஸ்டாலின் அவருடைய தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு வருகிறார். பிரசாரக் கூட்டங்களில் போதிய அவகாசமில்லாததால் ஒரு சில முக்கிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அவர் குறிப்பிட்டுச் சொல்லி வருகிறார். சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையின் சிறப்புகளைப் புரிந்துகொள்ள அந்த அறிக்கையை ஒருவர் முழுமையாகப் படித்து அறிய வேண்டும். கட்சி வலைதளத்தில் சுலபமாக தரவிறக்கம் செய்து வாசிக்கக் கூடிய, அரசியல் நாட்டம் கொண்டோர் அவசியம் வாசிக்க வேண்டிய அரசியல் ஆவணமாக அறிக்கை அமைந்துள்ளது.
அரசியல் ஆவணமா? அப்படியானால் அதைப்படிக்க ஓரிட த்தில் அமர்ந்து பல மணி நேரங்கள் செலவழிக்க வேண்டுமே என்று யாரும் எண்ணத் தேவையில்லை. ஐம்பது தலைப்புகளில், அழகாக ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி இலட்சியங்களும், திட்டங்களும் கூறப்பட்டுள்ளன. ஒரு பேருந்துப் பயணத்திற்குள் யாரும் செல்பேசியில் படித்துவிட முடியும் என்னும்படியாக அற்புதமான திட்டங்கள் அருமையாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

அவையாவும், ஏனோதானோவென்று அள்ளித் தெளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அல்ல. முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரிடமும், மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள செயல்திட்டங்கள் ஆகும். கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட, டி.கே.எஸ்.இளங்கோவன், கோ.வி.செழியன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாதிபதி, தமிழரசி ரவிகுமார், ஜி.சந்தானம் ஆகியோர் அதன் உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
ஐம்பது தலைப்புகளில் ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க தமிழ்நாட்டை நேசிக்கும் எவர் மனமும் விம்மிப் பெருமிதம் கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே இந்திய மாநிலங்களில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டை இன்னம் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான அத்துனை அம்சங்களும் இந்த அறிக்கையில் அமைந்துள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் உழைப்பும், சிந்தனையும் அவற்றில் வெளிப்படுகின்றன.

ஐம்பது தலைப்புகளில் உள்ளவற்றையெல்லாம் விரிவாக விவாதிப்பது இந்தக் கட்டுரையிலும் சாத்தியமில்லை என்பதால், தற்செயலான உதாரணங்களாக (random sample) சில அம்சங்களைக் காண்போம். மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து பேசப்படுவதால், பிற அம்சங்களை இங்கே கவனிக்கலாம்.

முதல் தலைப்பே மாநில உரிமைகள்தான். அதில் குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகளை இந்தியா முழுமையிலும் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டும் நோக்கம் முதல் அம்சமாக இடம் பெற்றுள்ளது. இந்த குழுவின் அறிக்கை இந்தியக் குடியரசினை அடுத்த வளர்நிலைக்குக் கொண்டுசெல்லும் ஆற்றல் கொண்ட வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான ஆவணமாகும். அதனைச் சுட்டிதான் தேர்தல் அறிக்கை தொடங்குகிறது.

கலை மற்றும் பண்பாடு என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த பண்பாட்டு ஆணையம் (Heritage Commission) அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது சிறந்ததொரு முன்னெடுப்பு. அதே போல, கலைத் திறானாய்வு குறித்த குறுகிய கால படிப்புகள் (Art Appreciation Courses) உருவாக்கப்படும் என்று கூறியிருப்பதும் சிறப்பானதாகும். மேலும், கலை நிகழ்வுகளை ஆவணப்படுத்த Dgitial Archive உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நான் உட்பட பல நண்பர்கள் கூறிவந்த உள்ளக்கிடக்கை ஒன்றுள்ளது. அது அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அது என்னவென்றால், மொழிப்போராட்ட வரலாற்றினை ஆவணப்படுத்த நவீன காட்சிக்கூடம், நூலகம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்புத்தான். ஜாலியன் வாலாபாக் நிகழ்வையொத்த ராணுவ துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த பெயர் தெரியாத தியாகிகளுக்கு அங்கே ஒரு நினைவுக்கூடம் எழுவது முற்றிலும் பொருத்தமானதாகும்.

பெண்கள் நலனைப் பொறுத்தவரை சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் ஐந்து இலசம் ரூபாய் வரை வழங்கப்படும் என்ற திட்டம் மிகப்பெரிய பாய்ச்சலாகும். இது எண்ணற்ற பெண்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் எனலாம்.
இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு தலைப்புகளிலும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்த தன்னுணர்வு மிகச்சிறப்பான அம்சமாகும். அரசு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்று மிக விரைவாகப் பெருகி வரும் ஏ.ஐ திறன் குறித்த கவனம் இந்த அறிக்கை முழுவதிலும் விரவியுள்ளது.
குறிப்பாக, உயர்கல்வி பகுதியில் பதினெட்டாவது அம்சமாக “செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்புகள் குறையும் என்ற நிலையை மாற்றிடும் வகையில், உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அந்தத் துறையில் பயிற்சியளித்து, செயற்கை நுண்ணறிவுத் திறன் பெற்ற மாணாக்கர்களாக அவர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று கூறியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் இல்லத்தரசி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எட்டாயிரம் ரூபாய்க்கான கூப்பனை அரசு கொடுத்துவிடும். அதை வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சாதனங்களை அவர்கள் விரும்பும் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்ற பயன்மிகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டியா, மின் துவைப்பானா என்றெல்லாம் அரசே முடிவு செய்யாமல், அவர்களுக்குத் தேவையானதை இல்லத்தரசிகளே பெற்றுக்கொள்ள வகை செய்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரிய திட்டம் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

அ.இ.அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை
எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது சில வாக்குறுதிகளை அறிவித்தார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு அவற்றுடன் முப்பத்தோரு தலைப்புகளில் 297 வாக்குறுதிகளாக வழங்கப்பட்டுள்ளது. முதல் பகுதி அவர் கொடுத்த 21 வாக்குறுதிகள் பல நடைமுறைக்குச் சாத்தியமா என்பதை பற்றிய ஆய்வு இல்லாமல் தான்தோன்றித்தனமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளாகவே அவை தோற்றமளிக்கின்றன.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மகளிரைப் போலவே ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற திட்டமாகும். இது எந்த வித சமூகவியல் புரிதலும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்தால் அது எப்படி இருக்குமோ அதைப்போன்ற திட்டம்தான் இது. மகளிரின் சமூக, பொருளாதார வாழ்வு ஆண்களைச் சார்ந்திருப்பதையும். ஆண்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் கருத்தில் கொண்டுதான் மகளிருக்கான சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெண் பணிக்கோ, கல்வி கற்கவோ சென்று வந்தபிறகு பெரும்பாலும் வீட்டு நிர்வாகத்தில் ஈடுபடுவார். ஆண்கள் அப்படியல்ல. அவர்கள் பல்வேறுவிதமான நடவடிக்கைகளுக்காக வெளியே செல்வார்கள். நண்பர்களுடன் உல்லாசமாகவோ, கேளிக்கைகளுக்காவோ பயணம் செய்வார்கள். திரையரங்கத்தில் ஒரு இரவுக்காட்சிக்குச் சென்றால், பெரும்பாலும் ஆண்கள்தான் இருப்பார்கள். மதுபான விடுதிக்குச் சென்றாலும் முற்றிலும் ஆண்கள்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை அரசு வழங்குவது என்பது மகளிருக்கு வழங்கப்படும் சலுகையை பொருளிழக்கச் செய்துவிடும். மொத்த பொதுப் போக்குவரத்தையும் இலவசமாக்கினால், அதனை தொடர்ந்து மேம்படுத்துவது பொருளாதார ரீதியில் சாத்தியமாகுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். இது விரைவில் நகரப் பேருந்துகளை தனியார் மயமாக்குவதில்தான் போய் முடியும். அவற்றில் எல்லோருக்கும் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். அது மகளிரை அதிகம் பாதிக்கும்.

இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க குளிர்பதனப்பெட்டி விலையில்லாமல் தரப்படும் என்று கூறியுள்ளார்கள். இது அனைத்து இல்லங்களுக்கும் அவசியமானதா என்பதைப் பற்றிய ஆய்வு எதுவும் நிகழ்த்தப்பட்ட தாகத் தெரியவில்லை. சென்ற தேர்தலில் வாஷிங் மெஷின் என்று சொன்னது எடுபடாத தால் இந்த முறை குளிர்பதனப்பெட்டி என்று கூறியுள்ளார்கள். எந்த பொருள் என்பதை அரசே தீர்மானிப்பதைவிட, தி.மு.க செய்வதுபோல கூப்பனைக் கொடுத்து அவர்களே முடிவெடுப்பதுதான் பன்மடங்கு சிறந்தது. மேலும் குளிர்பதனப்பெட்டி டெண்டர் ஊழல் வழக்கு நாளை உருவாவதையும் தவிர்க்கலாம்.

இந்த வாக்குறுதிகளுக்குப் பிறகு “மத்திய, மாநில கூட்டாட்சி முறை” என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து UNION என்ற சொல்லுக்கான சரியான தமிழ்ப்பதமான “ஓன்றியம்” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது. “ஒன்றிய-மாநில” உறவு என்றுதான் தி.மு.க தேர்தல் அறிக்கை கூறுகிறது. பாஜக இந்த “ஓன்றிய” என்ற சொல்லாட்சியை அறவே வெறுக்கிறது. அது Central என்னும் சொல்லுக்கு இணையாக “மத்திய” என்ற சொல்லையே விரும்புகிறது.

அரசமைப்பு சட்டம் India is a Union of States என்றும் Union Government என்றும் ஆங்கிலத்தில் கூறியதை ஒன்றிய அரசு என்றழைப்பது கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்த இன்றியமையாததாகும். “மத்திய அரசு” என்பது அந்த அரசு தானாகவே தோன்றியது போன்ற கருத்தமைவை வலியுறுத்துகிறது. மாநிலங்களின் ஒன்றியமே ஒன்றிய அரசு என்ற கருத்தை வலியுறுத்துவது மிக முக்கியமான கருத்தாக்க நகர்வாகும். அ.இ.அ.தி.மு.க பாரதீய ஜனதா கட்சியை மகிழ்விக்கவோ, அதற்கு அஞ்சியோ “மத்திய அரசு” என்ற சொல்லாட்சியைத் தொடர்வது கவனத்திற்குரியது.
மேலும், குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கை எதையுமே குறிப்பிடாதது கண்டிக்கத்தக்கது. மாநில உரிமைகளில் அந்தக் கட்சிக்கு அக்கறையிருந்தால் இந்தக் குழுவின் அறிக்கையை அது குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்த குழுவை அமைத்தது தி.மு.க அரசாங்கமாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது என்பதால் அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு தேர்தலிலும் அரசாங்கம் மாறுமே தவிர, அரசு என்பது தொடரும். அந்த வகையில் மீண்டும் ஆட்சிக்கு வர போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க குரியன் ஜோசப் அறிக்கையைக் குறித்து எதுவுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது மாநில உரிமைகள் குறித்து அதற்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே காட்டுகிறது.
இதை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேறொரு புள்ளியும் இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கை “ஓரே நாடு – ஒரே தேர்தல்” திட்ட த்தை முழுமையாக எதிர்க்கிறது. இந்த திட்ட த்தை கைவிடும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை வரவேற்றவர் என்பதை மறந்துவிடக்கூடாது. அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இது குறித்து எதுவும் கூறப்படவில்லை. மாநில சுயாட்சியை, மாநில அரசின் அடையாளத்தை மறுதலிப்பதுதான் “ஓரே நாடு – ஒரே தேர்தல்” திட்டம் என்பது சிறுவர்களுக்குக் கூட புரியக்கூடிய ஒன்றுதான். பழனிசாமி மாநில உரிமைகள் குறித்து பேசுவதெல்லாம் பம்மாத்துதான் என்பதைத் துல்லியமாக விளக்கும் புள்ளி இது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் பலராலும் பாராட்டப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவிப்புகள் எதுவும் அ,இ.அ.தி.மு.க அறிக்கையில் இடம் பெறாதது அதன் தொலைநோக்கு பார்வை இன்மையையே காட்டுகிறது எனலாம். ஏதோ மக்களைக் கவரும் வாக்குறுதிகளைத் தரவேண்டும் என்று எண்ணும் அளவு, உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும் என்று அறிவதில் அந்தக் கட்சிக்கு ஆர்வமில்லை என்பதையே இது காட்டுகிறது.

அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை எல்லாமே பயனற்ற திட்டங்களல்ல. ஆனால் அவற்றைத் தொகுத்தளிக்கும்போது பயனற்ற கூற்றுக்களுடன் கலப்பதால் அவை முக்கியத்துவமிழந்து தொனிக்கின்றன. தி.மு.க அறிக்கையின் ஒவ்வொரு பிரிவும் ஆழமான திட்டமிடுதலுடன் தொகுக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு சொல்லும் பயனுள்ளனவாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளின் செயல்படு முறைகளையும் புரிந்துகொள்ள விரும்பும் யாரும், இந்த இரண்டு தேர்தல் அறிக்கைகளையும் ஆழமாக ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம். ஒரு தொலைகாட்சி விவாதத்தில் அரசியல் விமர்சகர் சத்யன், இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிடும்படி ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளத்திடம் கேட்டபோது தி.மு.க-விற்கு 423/500 என்ற மதிப்பெண்ணும் அ.இ.அ.தி.மு.க-விற்கு 255/500 என்ற மதிப்பெண்ணும் அந்த நுண்ணறிவுத் தளம் கொடுத்ததாகக் கூறினார். அதன் பொருள் தி.மு.க அறிக்கையின் கூற்றுகள் வலுவான தரவுகளுடன் அமைந்திருப்பதுதான் எனலாம். எவர் ஒருவரும் இரண்டு அறிக்கைகளையும் கவனமாகப் படித்துப் பார்த்தாலே அந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com
