திமுக அதிரடி தேர்தல் அறிக்கை: பெண்களுக்கு ரூ8,000 கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ2,000… முழு விவரம்!

Published On:

| By Mathi

2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று மார்ச் 29-ந் தேதி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசியஸ்டாலின், திமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து எப்படி தேர்தல் அறிக்கையை தயார் செய்தது என்பதையும் ஸ்டாலின் விவரித்தார். தேர்தல் அறிக்கையை தயாரித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவை ஸ்டாலின் பாராட்டினார்.

ADVERTISEMENT

கடந்த 5 ஆண்டுகளை விஞ்சும் வகையில் திராவிடம் 2.0 ஆட்சி இருக்கும்; தமிழ்நாட்டில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஸ்டாலின் பேசியதாவது:

ADVERTISEMENT

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் உருவாக்கித் தந்த பாதையில, கொள்கை தடம் மாறாம திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தி, ஆறாவது முறையா கழகத்தை ஆட்சியில் அமர்த்தி, ‘திராவிட மாடல்’ எனப் பெயரிட்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில நடைபோட வச்சு, தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன் என்ற பெருமித உணர்வோடு 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எங்க வாக்குறுதியை நான் வெளியிடுகிறேன். நடைபெறவிருக்கிற தேர்தல்ல வெற்றி பெற்று ஏழாவது முறையா ஆட்சி அமைக்க இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நம்பிக்கை கழகத்தினருக்கு மட்டுமல்ல…

திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். பல மேடைகளில் அந்தத் திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு சொல்லி இருந்தாலும் ஒரு சின்ன ரிவைண்ட் (Rewind) மாதிரி தலைப்புச் செய்தியாகச் சில திட்டங்களின் பெயர்களை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

ADVERTISEMENT
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
  • விடியல் பயணம்
  • காலை உணவுத் திட்டம்
  • புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன்
  • நான் முதல்வன்
  • இல்லம் தேடிக் கல்வி
  • மக்களைத் தேடி மருத்துவம்
  • இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48
  • கலைஞர் கனவு இல்லம்
  • தாயுமானவர் திட்டம்
  • கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் திட்டம்

என ஒவ்வொரு துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தித் தமிழ்நாட்டை வளர்த்திருக்கிறோம். அதனால்தான் நம்முடைய வளர்ச்சியை யாராலும் தடுக்கவும் முடியல, மறைக்கவும் முடியல. நாட்டிலேயே டபுள் டிஜிட் (Double digit) பொருளாதார வளர்ச்சியைச் சொல்லக்கூடிய ஒரு மாநிலமாக இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு இருக்கு.

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது 10 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்துதான் இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கினோம். அதற்கான தொலைநோக்குத் திட்டங்களையெல்லாம் வகுத்தோம். ஒவ்வொரு தனி மனிதரும் பயனடைகிற திட்டங்களை உருவாக்கினோம்.

கொடுத்த வாக்குறுதிப்படி 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு 1000 ரூபாயை உரிமைத் தொகையாகக் கொடுக்கத் தொடங்கினோம். தேர்தலைக் காரணங்காட்டி அதைத் தடுக்கலாம்னு பா.ஜ.க நினைச்சது. ஆனால் அந்தச் சதியை முன்கூட்டியே உணர்ந்து, 3000 ரூபாயையும் கோடைகாலச் சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து 5000 ரூபாயை 1 கோடியே 31 லட்சம் மகளிரோட வங்கி கணக்குல பிப்ரவரி மாசத்துல செலுத்தினோம்.

அரசு ஊழியர்களோட 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக்கூடிய வகையில, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றி அரசு ஊழியர்களோட மனங்களை மகிழவச்சோம்.

இப்படி ஒவ்வொரு சாதனையும் புள்ளி விவரத்துடன் என்னால சொல்ல முடியும். தமிழ்நாட்டோட வளர்ச்சியைத் கெடுக்க நினைக்கிற கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்குது. அவங்களும் ஏராளமான பொய் செய்திகளைப் பரப்பிப் பார்த்தாங்க. அது எதுவுமே தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எடுபடல.

இப்போ ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களோட எண்ணம் என்னன்னா, திராவிட மாடல் கட்டமைச்சிருக்கக்கூடிய வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு தொடர்ந்து பயணிக்கணும். தமிழ்நாடு தலைநிமிர்ந்த தமிழ்நாடா, தலைசிறந்த தமிழ்நாடா எப்பவுமே இருக்கணும்.

தமிழ்நாட்டை காக்க, கல்வியையும் உட்கட்டமைப்பையும் வளர்க்க, சமூக நீதியைத் தழைக்க, இதுவரை அடைந்திருக்கக்கூடிய முன்னேற்றத்தைப் பாதுகாக்க, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடரணும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையணும். இதுதான் தமிழ்நாட்டு மக்களோட உறுதியான எண்ணம்.

சொன்னதை மட்டும் இல்ல, சொல்லாததையும் செஞ்சு காட்டுன கடந்த ஐந்து ஆண்டுகளோட திராவிட மாடல் சாதனைகளை மிஞ்சக்கூடிய அளவுக்குத் திராவிட மாடல் 2.0 இருக்கும். அதுக்கு அடித்தளமாக இருக்கப்போற தேர்தல் அறிக்கையைத்தான் இப்போ உங்ககிட்ட பகிர்ந்துக்கப் போறேன். எங்களுடைய கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள் மட்டும் இல்ல, இதுக்காக அமைக்கப்பட்ட குழு தமிழ்நாடு முழுக்கப் பலமுறை பயணம் செஞ்சு, மக்களோட கனவுகளையும் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டு இதைத் தயாரிச்சிருக்காங்க.

கழகத் துணை பொதுச் செயலாளர் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்கள் திரு. டி.கே.எஸ் இளங்கோவன், முனைவர் கோவி செழியன், முனைவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முனைவர் டி.ஆர்.பி ராஜா, திரு. எம்.எம் அப்துல்லா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவர் எழில் நாகநாதன், திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி, திருமதி தமிழரசி ரவிக்குமார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. ஜெ. சந்தானம், தொழில்முனைவோர் திரு. சுரேஷ் சம்பந்தம் ஆகியோரடங்கிய குழுவிற்கு என்னுடைய பாராட்டுகளையும் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களை நம்புகிற மக்களுக்கு நான் நிச்சயமாகச் சொல்கிறேன், உங்கள் எல்லோருடைய நம்பிக்கையை நாங்கள் நிச்சயமாகக் காப்பாற்றுவோம். இந்த உறுதியோடு தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் எல்லாமே முக்கியமான வாக்குறுதிகள் தான். நேரத்தின் அருமை கருதி முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தலைப்புச் செய்திகளாக நான் அறிவிக்கிறேன்.

  1. இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் காலை உணவு வழங்கணும். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
  2. 1 கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் உரிமைத் தொகையை இனி 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  3. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்ப் செட்டுகள் வழங்கப்படும்.
  4. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
  5. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
  6. உயர்கல்விச் சேர்க்கை அதிகரிக்க புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் இனி 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  7. நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  8. பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.
  9. முதியோர் உதவித் தொகை 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  10. மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  11. அன்னைத் தமிழைப் போற்ற பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு செம்மொழி மாநாடு… வல்லுநர்களைக் கொண்டு செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
  12. ஒன்றிய மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
  13. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள் தொழில் முனைவராக முன்னேறிடும் வகையில் பிணை ஏதுமின்றி 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடன் உதவி வழங்கப்படும்.
  14. பேரிடர் கால இழப்பீடுகளாக இறைவைப் பாசனப் பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்ட காலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  15. மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
  16. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்.
  17. ஒன்றிய அரசின் எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும் அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குச் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.
  18. அரசு அமைப்புகளில் ஏற்படும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும்.
  19. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  20. உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
  21. உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ரூபாய் 1,500 மாத உதவித்தொகையோடு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும்.
  22. புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள், நகரங்களிலும் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  23. 18 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  24. தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம்பிடிக்கும் வகையில் திராவிட மாடல் 2.0 ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்.
  25. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.
  26. 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படும். 1,000 கிராம தெய்வத் திருக்கோயில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
  27. சிறுபான்மையினர் தொழில் தொடங்க டாம்கோ (TAMCO) மூலம் கடன் பெறும் உச்சவரம்பு அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  28. அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியோடு தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்.
  29. மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க “தாயுமானவர் திட்டத்தின்” படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  30. கிராமச் சாலை திட்டத்தின் கீழ் 15,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர் செய்யப்படும்.
  31. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  32. திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகள் அருகில் நவீன உலகத்தர வசதிகளோடு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்.
  33. அடுத்த ஐந்தாண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
  34. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.
  35. மொழிப்போர் வரலாற்று இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதியோடு கூடிய காட்சிக்கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.
  36. நிகர சாகுபடிப் பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
  37. தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, குழந்தைகள் காப்பகம் (1,000) உருவாக்கப்படும்.
  38. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் திருநர் மற்றும் திருநங்கையருக்கு விருது வழங்கப்படும்.
  39. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் இல்லா நிலை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
  40. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க டாப்செட்கோ (TABCEDCO) மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  41. கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  42. பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.
  43. தமிழ்நாட்டில் 10 கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
  44. தமிழ்நாட்டின் MSME நிறுவனப் பொருட்கள் உலகளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத்தளம் (Virtual Trade Platform) உருவாக்கப்படும்.
  45. கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு உலகப் பகுதிகளில் 5,000 புத்தொழில்கள் (Startups) தொடங்கப்படும்.
  46. கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுக்கான பல்நோக்கு வசதி கொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
  47. மீனவர்கள் தங்களின் வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
  48. 50-வது வாக்குறுதி: இல்லத்தரசி திட்டம்
  49. நம் இல்லங்களின் அரசிகளான மகளிரை மகிழ்விக்க ஒரு முக்கியமான அறிவிப்பு:
  50. இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், பிரிட்ஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ வழிவகை செய்யப்படும்.
    “இல்லத்தரசி” என்ற இந்த புதிய திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளில் இந்தப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

சிறப்பு மண்டல வளர்ச்சித் திட்டங்கள்

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்:

வட மாவட்டங்கள்: கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகளில் மாநில அளவிலான சராசரி வளர்ச்சியை அடைய சிறப்புத் திட்டம்.

டெல்டா மாவட்டங்கள்: வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் முன்னேற்றத்தை உறுதி செய்ய சிறப்புத் திட்டம்.

மேற்கு மாவட்டங்கள்: அடுத்த கட்ட தொழில் புரட்சியை உறுதி செய்யும் வகையில் சிறப்பு தொழில் வளர்ச்சித் திட்டம்.

தென் மாவட்டங்கள்: கல்வி மற்றும் சுகாதாரத்தில் முன்னேற்றம் காண்பதோடு, தென் தமிழகம் தொழில்மயமாவதை உறுதி செய்ய சிறப்புத் திட்டம்.

சூப்பர் ஸ்டார்

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் எப்போதும் தேர்தலின் ஹீரோ. இப்போது திராவிட மாடல் 2.0-விற்கான இந்த அறிக்கை சூப்பர் ஸ்டாராகக் களம் இறங்கியிருக்கிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கை முழுமையாக:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share