2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக (DMK) நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
விராலிமலையில் இன்று ஏப்ரல் 1-ந் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மேடை ஏறி வருகின்ற பொழுதே மக்கள் வெள்ளத்திலே நீந்தி இங்கே வந்து உங்களைச் சந்தித்திருக்கிறோம். ஆக மக்களுடைய ஆரவார எழுச்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே அண்ணா திமுக வெற்றி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி.
அண்ணா திமுக தலைமையிலே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய வேட்பாளர்கள், கழகத்தின் சார்பாக விராலிமலை சட்டமன்றத் தொகுதியிலே சகோதரர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
திருமயம் தொகுதியிலே மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே. வைரமுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆலங்குடி தொகுதியிலே தன விமல் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆக, மூன்று சட்டமன்றத் தொகுதியிலும் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றோம். நம்முடைய விராலிமலை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் விஜயபாஸ்கர் அவர்கள் அமைச்சராக இருந்தவர், நம் மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.
அவர் இருந்த காலத்திலே பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து நம் மாவட்ட மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். விராலிமலை தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர்.
பி.கே. வைரமுத்து அவர்கள் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் வாரியத் தலைவர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், இப்படிப் பல்வேறு பொறுப்புகளிலிருந்து பணியாற்றி மக்களுக்குச் சேவை செய்தவர்.
அவர் திருமயம் சட்டமன்றத் தொகுதியிலே கழக வேட்பாளராகத் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்பட்டிருக்கின்றார், அவருக்கு இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
தன விமல் அவர்கள் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலே கழகத்தின் சார்பாகப் போட்டியிடுகிறார். அவர் ஒரு வழக்கறிஞர், மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஒரு இளைஞர், அவருக்கு இரட்டை இலைச் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி தொகுதியிலே போட்டியிடுகின்ற கூட்டணி வேட்பாளர்களுக்குத் தாமரைச் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்ற மாவட்டம். இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டிலே ஆர்வம் கொண்டவர்கள். நம்முடைய பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நானே நேரடியாக வந்து முதலமைச்சராக இருக்கும்போது துவக்கி வைத்திருக்கின்றேன்.
இந்த ஜல்லிக்கட்டுக் காளையை எப்படி ஒரு தாய் தன் பெற்ற குழந்தையை வளர்ப்பார்களோ அதுபோல நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள், வேளாண் பெருமக்கள் இந்த ஜல்லிக்கட்டுக் காளையைக் குழந்தையைப் போல் வளர்க்கின்ற காட்சியை நான் பார்த்திருக்கிறேன்.
நான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போகும்போது விஜயபாஸ்கர் அவர்கள் அங்கே அற்புதமான காளைகளை நிறுத்தி வைத்திருப்பார். அப்படி காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலே நடைபெறுவதற்கு இந்த மாவட்டம் பெயர் பெற்ற மாவட்டம் என்பதிலே சந்தேகமில்லை.
அண்ணா திமுக ஆட்சி அமைந்தவுடன், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகின்ற இடத்திற்கு 5 லட்சம் ரூபாய் அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும்.
2-வது இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியிலே கலந்துகொண்டு அந்த இளைஞர்கள் யாராவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது காளைகள் முட்டி உயிரிழக்க நேரிட்டால், அவங்க குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில கலந்துக்கப் பதிவு செய்யுற இளைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அவங்களுக்குக் காப்பீடு செய்து தரப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை (பிரீமியம்) அரசாங்கமே செலுத்தும். இந்த வீர விளையாட்டு மேலும் பொலிவோடும் வலிமையோடும் நடக்குறதுக்கு, அண்ணா திமுக அரசு இந்த இளைஞர் பட்டாளத்துக்கு எப்பவும் துணையா நிற்கும்.
தமிழகம் அமைதிப் பூங்காவா இருக்காம். சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்காம். ஆனா நாடே சந்தி சிரிச்சுக்கிட்டு இருக்கு. எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைன்னு நடக்காத நாளே இல்லை. இதெல்லாம் ஏன் நடக்குதுன்னா, போதை ஆசாமிகளால தான் நடக்குது. கிராமத்துல இருந்து நகரம் வரைக்கும் எல்லா இடத்துலயும் கஞ்சா விற்பனை அமோகமா நடக்குது. மத்ததெல்லாம் கிடைக்குதோ இல்லையோ, கஞ்சா தாராளமா கிடைக்குது. இந்தக் கஞ்சா விற்பனைக்கு ஆளுங்கட்சிக்காரங்களே துணையா இருக்குறப்போ, கஞ்சாவை எப்படி ஒழிக்க முடியும்?
ஸ்டாலின் அவர்களே, உங்க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. கிருஷ்ணகிரியில் ஒரு சிறுமி, விளாத்திகுளத்தில் ஒரு மாணவி, சிவகங்கையில் ஒரு கோயில் காவலாளி எனப் படுகொலைகள் தொடருது. புகார் கொடுத்தாலும் போலீஸ் வழக்கு பதிவு செய்யுறது இல்லை. இதுவா அமைதிப் பூங்கா?
அடுத்து நிதி மேலாண்மை சிறப்பா இருக்காம். அஞ்சு லட்சம் கோடி கடன். அஞ்சு வருஷத்துல அஞ்சு லட்சம் கோடி கடன் வாங்குனதுல இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு தான். இதுதான் ஸ்டாலினோட சாதனை. கடன் வாங்கி ஆட்சி செய்ய யாரு வேணா வரலாம். இந்த ஊர்ல இருக்குற ராமசாமி, குப்புசாமி கூட கடன் வாங்கி ஆட்சி பண்ணுவாங்க. ஆனா அந்தக் கடனை யாரு திருப்பிச் செலுத்துறது? நாமதானே செலுத்தியாகணும்
ஸ்டாலின் வாங்கிய கடனை மக்கள் தான் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் கொடுத்தவன் சும்மா விடுவானா? நாம ஒரு இருசக்கர வாகனம் வாங்குறோம், நாலு சக்கர வாகனம் வாங்குறோம்… கடன் ஒரு டியூ (Due) கட்டலீனா வண்டியத் தூக்கிட்டு போயிடறான். அப்படி அரசாங்கம் கடன் வாங்கினா, எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை எண்ணிப் பாருங்க.
ஏய், கடன் வாங்க வேண்டாம்னு சொல்லல… இப்படி லட்சக்கணக்கான கோடி கடன் வாங்கணுமா? அப்படி என்ன நிலைமை வந்திருக்குது? அப்படி எதையாவது புதிய திட்டம் இந்த ஆட்சியில் கொண்டு வந்திருக்கீங்களா? அதுவும் இல்லை.
2020-21 அண்ணா திமுக ஆட்சியில் இருந்த வரி வருவாயை விட, 2024-25 திமுக ஆட்சியில் ஒரு லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி கூடுதலாக வருவாய் வருது. ஒரு பக்கம் கூடுதல் வருவாய், ஒரு பக்கம் கடன் வாங்குறீங்க… புதிய பெரிய திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே போட்ட திட்டத்தை நிறுத்திட்டாங்க.
காவேரி-வைகை-குண்டாறு திட்டம் எப்பேர்ப்பட்ட திட்டம்! தமிழ்நாட்டில் மாநில அரசாங்க நிதி, மாநிலத்தினுடைய சொந்த நிதி… இதுவரைக்கும் 14,000 கோடி எந்த திட்டத்துக்கும் மாநில அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யல. அப்படி இந்த புதுக்கோட்டை மாவட்டம், இந்த மாவட்டம் ஐந்து மாவட்டம் பயன்பெறுது: திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் அதேபோல இன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டம். ஐந்து மாவட்ட விவசாயிகள் பயன்படுவதற்காக இந்த திட்டத்தைக் கொண்டு வந்தோம்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறுகின்ற உபரி நீர், இந்த கால்வாய் வெட்டி, இந்தப் பகுதியில் இருக்கின்ற ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரப்பி, நிலத்தடி நீரை உயர்த்தி, வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீர், விவசாயிகளுக்குத் தேவையான நீர், குடிப்பதற்குத் தேவையான நீர்… வேளாண் பெருமக்களுக்கு மட்டுமல்ல, விவசாயத் தொழிலாளிக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். ‘வறட்சி’ என்ற பெயர் மறந்து, ‘வறட்சி’ என்ற பெயர் மறைந்து, ‘பசுமையான மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம்’ என்ற பெயரைப் பெறுகின்ற திட்டம்.
இந்த மாவட்டத்தினுடைய 100 ஆண்டு காலம் இந்த விவசாயிகள் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க, இந்த விவசாயிகள் குரல் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அந்த 100 ஆண்டு கால குரல் கொடுத்ததின் விளைவே இந்த காவேரி-வைகை-குண்டாறு திட்டத்தை அண்ணா திமுக அரசு திட்டமிட்டு, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விட்டு, முதல் அடிக்கல் நாட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் செஞ்சோம். ஆனால் திட்டத்தையே நிறுத்திட்டாங்க
விவசாயிகளின் விரோத ஆட்சி நாட்டுக்குத் தேவையா? இந்த நாட்டுக்கு உணவளிக்கின்றவர் விவசாயி. இரவென்றும் பகலென்றும் பாராமல் உழைக்கின்றவர் விவசாயி. வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்றவர் விவசாயி. ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உழைத்து நாட்டு மக்களுக்கு உணவளிக்கின்ற விவசாயியைப் புறக்கணிக்கின்ற அரசு நாட்டுக்குத் தேவையா? சிந்திச்சுப் பாருங்க.
விவசாயப் பணி என்பது கடுமையான பணி. நானும் ஒரு விவசாயி என்ற முறையிலே அனுபவ ரீதியாக இந்த நேரத்திலே பேசிக் கொண்டிருக்கின்றேன். விவசாயி படுகின்ற துன்பம், அது களையப்பட வேண்டும். அது பிரதான கோரிக்கையாக விவசாயிகள் வைத்தார்கள். அந்த கோரிக்கையை முதன்மையாக வைத்துத்தான் ‘குடிமராமத்து’ திட்டத்தைக் கொண்டு வந்து ஏரி, குளம், குட்டை எல்லாம் விவசாயிகள் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு… தூர்வாரப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு விலையில்லாமல் கொடுத்தோம். இது அண்ணா திமுக ஆட்சியுடைய சாதனை. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க. மீண்டும் அண்ணா திமுக ஆட்சிக்கு வந்தால், இந்த காவேரி-வைகை-குண்டாறு திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம்.
அதேபோல ஏரி, குளம், குட்டை எல்லாம் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக தூர்வாரப்படும் விவசாய பங்களிப்போடு. அப்புறம் கரூர் மாவட்டத்தில் பேசுறார்… செந்தில் பாலாஜி… பேரைச் சொன்னாவே கத்துறீங்க! அப்படி செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் இருக்கறதுனால அங்க வெற்றி பத்திக் கவலைப்பட வேண்டியதில்லையாம். சரியான ஆப்பு வைக்கப்போறாரு கவலைப்படாதீங்க. மக்கள் சரியான ஆப்பு கொடுப்பாங்களா இல்லையா?
இதே ஸ்டாலின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்ற பொழுது, இதே செந்தில் பாலாஜியை அதே கரூர் பொதுக்கூட்டத்தில் எவ்வளவு அவதூறா பேசுறாருன்னு நாட்டு மக்கள் அத்தனை பேரும் அறிவார்கள். உண்மைதானே? அன்னைக்கு ஒரு வாய், இன்னைக்கு ஒரு வாய்… அன்னைக்கு ஒரு வாய், இன்னைக்கு ஒரு வாய்! இதுதான் நிலைமை.
ஏங்க, பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழிச்சுதான் கலர் மாறும். ஆனா அடிக்கடி கலர் மாறுகின்ற தலைவர், திமுக தலைவர் ஸ்டாலின். யாருகிட்ட இந்த டூப்ளிகேட் விட்டுக்கிட்டு இருக்கீங்க? நாட்டு மக்களுக்கு ஒன்னும் தெரியாதா?”
சட்டமன்றத்துல அம்மா இருக்கும்போது அண்ணா திமுகல செந்தில் பாலாஜி அமைச்சரா இருந்தார். சகோதரர் விஜய் பாஸ்கருக்கும் தெரியும், எங்களோட சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் தெரியும். அப்பொழுது ஸ்டாலினை பற்றியும் கலைஞரைப் பற்றியும் செந்தில் பாலாஜி பேசுனது சபைக்குறிப்புல இருக்குது, எவராலும் எடுக்க முடியாது
அப்புறம் செந்தில் பாலாஜினா ஞாபகம் வருது என்ன? செந்தில் பாலாஜி. எதுல முத்திரை பதிச்சாரு? 10 ரூபாய்ல ஐஎஸ்ஐ பதிச்சுட்டாரு. 10 ரூபாய்ல ஐஎஸ்ஐ முத்திரையை பதித்தவர், அவரைப் புகழோ புகழ்னு புகழ்றாங்க. என்னை விட உங்களுக்கு அதிகமா தெரியுது.
இன்னைக்கு பங்குனி உத்திரம், அருமையான நாள். இந்த நாள்ல விராலிமலை முருகன் தானே, அதெல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான், அதாங்க வேல் காட்டுறாங்க பாருங்க. அற்புதமான நாள்ல புதுக்கோட்டையில நான் பேசிட்டு இருக்கிறேன். அதெல்லாம் இறைவன் பார்த்துக் கொள்வார். யாரெல்லாம் பி டீம் என்பது தெரிந்து போய்விட்டது.
இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்கக் கூட முடியாது. ஏன் தொண்டனை கூட தொட்டுப் பார்க்க முடியாது.
அதேபோல ஸ்டாலின் அவர்கள் என்னென்னமோ பேசுனாரு. தேர்தல் நேரத்துல 525 அறிவிப்புகள் 2021 சட்டமன்றத் தேர்தல்ல வெளியிட்டார். அதுல நான்கில் ஒரு பங்கு அறிவிப்புகளை இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. ஆனா ஸ்டாலின் அவர்களும் அவர் சக அமைச்சர்களும் திமுக பொறுப்பாளர்களும் திமுக தேர்தல் அறிக்கையில 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாம், உண்மைங்களா?. ஒரு முக்கியமான அறிவிப்புகள். இளைஞர்கள் மாணவர்கள் வங்கியில் வாங்கிய கடன் ரத்துன்னாங்க, ரத்து பண்ணாங்களா?. இன்னைக்கு கிராமப்புறத்துல 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும்னாங்க, உயர்த்தினாங்களா?. பெட்ரோல் டீசல் விலை குறைக்கிறோம்னாங்க, குறைச்சாங்களா?. மாதம் தோறும் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுக்குறோம்னாங்க, கொடுத்தாங்களா?. ரேஷன் கடையில கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ போடுறோம்னாங்க, போட்டாங்களா?. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
