ADVERTISEMENT

அதிமுக ஆட்சியை காப்பாற்றிய எனக்கே இந்த நிலைமையா? மாஜி சபாநாயகர் தனபால் அதிருப்தி!

Published On:

| By Kavi

அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எனக்கே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்று முன்னாள் சபாநாயகர் தனபால் அதிருப்தியுடன் பேசியுள்ளார். 

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இதில், அவிநாசி தனித் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் முன்னாள் சபாநாயகரும் அதிமுக எம்எல்ஏவுமான தனபால் கடும் அதிருப்தியில் இருக்கிறார். 

இந்த தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் தனபால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த நிலையில் ஜூனியர் விகடன் இதழுக்குப் பேட்டி அளித்துள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினர். அப்போது சபாநாயகர் பொறுப்பிலிருந்த நான் எதிர்ப்பாளர்களை பேரவையிலிருந்து தகுதி நீக்கம் செய்து, இந்த ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். 

ADVERTISEMENT

இப்படி பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு உதவியாக இருந்து காப்பாற்றி கொடுத்திருக்கிறேன். ஆனால் தற்போது கட்சியில் எனக்கு சுயமரியாதை இல்லை. 

விருப்ப மனு அளித்த என்னிடம் தேர்தலில் போட்டியிட விருப்பமா இல்லையா என்று கூட கேட்கவில்லை. நடப்பது நடக்கட்டும்” என்று விரத்தியுடன் பேட்டி அளித்திருக்கிறார். 

முன்னதாக அதிமுகவில் இருந்து விலகிய தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழக வெற்றி கழகத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இணைந்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் தமிழ்ச்செல்வன், ‘என் அப்பா எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு உழைத்தவர். கடந்த 2025 ஜூலை மாதம் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அதிமுக தலைமையோ அல்லது மற்ற முக்கிய தலைவர்களோ நேரில் வந்து பார்க்கவில்லை. இது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. அதிமுகவில் எனது தந்தை போன்ற மூத்த தலைவர்களுக்கு முறையான மரியாதை வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சிலரே கட்சியை தன்னிச்சையாக வழி நடத்துகின்றனர். எங்கள் அப்பாவுக்கு மரியாதையே கிடையாது. செங்கோட்டையன் போல பலர் வருத்தத்தில் இருக்கிறார்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனபாலும் அதிமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share