வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கில் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆந்திரா, தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
