குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட சிலர் அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அத்துடன், இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குப் போட்டியாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளது.
இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பரப்புரையில் மூன்று கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன.
இந்த நிலையில், பாஜக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத 2 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 7 போ், தமது தொகுதிகளில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இது, பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில், முதல்கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் நடைபெறவிருக்கிறது. இதையடுத்து, பாஜகவில் தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேசமயம், காங்கிரஸில் இருந்து கட்சிமாறி வந்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மோர்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால், பாஜகவின் உள்ளூா் நிா்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து, 2 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 7 போ், தமது தொகுதிகளில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் அரவிந்த் லதானி, ஹா்ஷத் வாசவா ஆகியோருடன் சத்தா்சிங் குஞ்சாரியா, கேதான் படேல், பாரத் சாவ்தா, உதய் ஷா, கரண் பரையா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பாஜக நிறுத்தியிருக்கும் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள், கட்சிக்கு எதிராக களமிறங்கியதை அடுத்து, மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீல் இவர்களை இடைநீக்கம் செய்துள்ளார். இதுபோக, 6 முறை எம்எல்ஏவான மது ஸ்ரீவஸ்தவ் வுக்கும் இம்முறை பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.
இதையடுத்து, அவா் வகோடியா தொகுதியிலும், மற்றொரு முன்னாள் எம்எல்ஏ தினேஷ் படேலும் பத்ரா தொகுதியிலும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்விரு தொகுதிகளும் இரண்டாம்கட்ட தோ்தலில் அடங்குபவை. ஆகையால், இந்த இருவா் மீதும் இன்னும் பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கு மனுவை திரும்பப் பெற அவகாசம் உள்ளதால், அதைப் பொறுத்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
’சினிமாவின் மறுபக்கம்’ ஆரூர்தாஸ் மறைவு: முதல்வர் இரங்கல்!
கால்பந்து உலகக்கோப்பை: கத்தாரை வீழ்த்தியது ஈகுவடார்!