வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் புயல் கரையை கடக்காத நிலையில், நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி இரவு 11.30 மணி நிலவரப்படி கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவில் புயல் உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 – 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 120 -130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வராமல் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், நிவர் புயல் சென்னைக்கு அருகே கல்பாக்கம் – மாமல்லபுரம் பகுதியில், 25 ஆம் தேதி இரவு அல்லது 26 ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளார், இது ஒரு கடினமான மற்றும் சிக்கலான புயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புயல் காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்காது. அத்தியாவசியப் பணிகளுக்கான அலுவலகங்கள் மட்டும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று புயலால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
**சென்னையை சூழ்ந்த மழைநீர்**
கனமழை காரணமாகச் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞர் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்தது. கலைஞரின் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
Water enters the house of late #DMK patriarch M Karunanidhi in Gopalapuram in #Chennai . The city has been experiencing rains since Monday night. #CycloneNivar #CycloneAlert @DeccanHerald pic.twitter.com/B2kQEpVmxC
— Sivapriyan E.T.B | சிவப்பிரியன் ஏ.தி.ப (@sivaetb) November 24, 2020
இதுபோன்று சென்னையில் பல பகுதியிலும் மழை நீர் புகுந்ததால் இரவில், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தைச் சுற்றியும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சுற்றியும் மழை நீரானது சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன. pic.twitter.com/8oqgGHwoV4
— ராஜ் நியூஸ் தமிழ் ( Official) (@rajnewstamil) November 24, 2020
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே மழை நீர் சூழ்ந்ததால், கரையைக் கடக்கும் போது எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர் சென்னை மக்கள்.
**காசிமேடு கடற்கரை**
புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், காசிமேடு கடற் பகுதியில், சீறி எழுந்த கடல் அலையின் காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சும்ம சாம்பிள்…. காசிமேடு காலை நிலவரம்… pic.twitter.com/C43dom4QDR
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) November 24, 2020
இதனை குறிப்பிட்டுப் பாதுகாப்பு கருதி மக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது
**10ஆம் எண் புயல் கூண்டு**
புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் கரையைக் கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்பட்டாலும் அச்சம் வேண்டாம். மக்களைப் பாதுகாக்க விடிய விடிய கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. முகாம்களில் 13 லட்சம் பேர் வரை தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,”