தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறுகையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சுமார் 34-35 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணி சுமார் 30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில், கிட்டத்தட்ட 65 சதவீத மக்கள் பிஜேபி மற்றும் இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றக் கூடாது என்பதற்காகவே வாக்களித்துள்ளனர்.
“தவெக ஆகட்டும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆகட்டும் – அனைத்தும் மதச் சார்பின்மையை முன்னிறுத்தி, மத நல்லிணக்கத்துடன் சமுதாயம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தப் பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அண்ணன் தம்பியாகவும், அக்கா தங்கச்சியாகவும் நாம் வாழ்ந்து வருகிறோம். எக்காரணம் கொண்டும் மதம் அல்லது ஜாதியின் அடிப்படையில் இந்த ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் காங்கிரஸ் கட்சி நேற்று முக்கிய முடிவை எடுத்துள்ளது.
முந்தைய அரசு (திமுக) பிஜேபிக்கு எதிராக இருந்ததுதான் எங்கள் கூட்டணிக்கு முக்கிய நோக்கம். தற்போது காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி சேர்ந்ததற்கும் அதே காரணம்தான். காங்கிரஸ் சேர்ந்ததன் மூலம் பிஜேபி தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஊடுருவ முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதை விஜய் அவர்கள் உரத்த குரலில் பேச வேண்டும் என்பதை நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் பொதுவாக சில விஷயங்களை அவர் இன்னும் பெரிய அளவில் பேசத் தொடங்கவில்லை” என்றார்.
தவெக மீது நம்பிக்கை வைத்து கூட்டணி சேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கு, “இன்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 65 சதவீத மக்கள் பிஜேபியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். ஒரு பொறுப்புள்ள கட்சியாக, 5 எம்எல்ஏக்களுடன் இருந்தாலும் இதுதான் நாம் எடுக்க வேண்டிய திசை என்று காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது
தவெகவின் மதச் சார்பின்மை கொள்கையில் நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இந்துத்துவ சக்திகளுடன் சேர மாட்டோம் என உரத்த குரலில் சொல்ல வேண்டியது அவர்களுடைய கடமை” என்று தெரிவித்தார்.
