குழந்தைகள் இறப்புக்குக் காரணமான ‘கோல்ட்ரிஃப்’ மருந்து தரப் பரிசோதனை பட்டியலில் இடம்பெறாத நிலையில், தமிழக அதிகாரிகள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகளில் 20 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் மருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக (48.6%) நச்சுத்தன்மையுள்ள டைஎத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மருந்துக்குத் தடை விதித்தது. நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
முறையாக ஆய்வு செய்யவில்லை எனக் கூறி, தமிழக மருந்து தர ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மருந்துகளைப் பரிந்துரைத்த மருத்துவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடந்த மாதம் நடத்திய தரப் பரிசோதனைக்காகப் பட்டியலில் சமர்ப்பிக்கப்பட்ட மருந்துகளில், குழந்தைகள் இறப்புக்குக் காரணமான ‘கோல்ட்ரிஃப்’ மருந்து இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்த விவரங்களை, தமிழக அரசு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்குச் சமர்ப்பிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு மாதந்தோறும் அனுப்பி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன.
தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் ஆய்வு செய்து கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் காய்ச்சல், கிருமித் தொற்று, சளி பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 112 மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் கோல்ட்ரிஃப் மருந்து இடம்பெறவில்லை.
தமிழகத்திலிருந்து கடந்த மாதத்தில் எந்தெந்த மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்காதது, தமிழக அரசின் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
