பெரியார் அறிவுலகம் நூலகத்தை திறந்து வைக்க கோவை வந்த முதல்வர் விஜய் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரை அடையாளம் கண்டு, வாகனத்தை நிறுத்தச் சொல்லி நலம் விசாரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல்முறையாக விஜய்யைச் சந்தித்தவர். கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தில் தீவிர நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கோவை வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை காண்பதற்காக விமான நிலையத்திற்கு வெளியே ரங்கராஜன் காத்திருந்தார். விஜய்யின் வாகனம் சென்றபோது அவர் கையசைத்துள்ளார். கூட்டத்திற்கு நடுவே நின்றுகொண்டிருந்த ரங்கராஜனைத் தூரத்திலேயே அடையாளம் கண்டுகொண்ட விஜய், உடனடியாகத் தன் வாகனத்தை நிறுத்தச் சொன்னார். உடனடியாக வாகனத்தில் இருந்தவாறே அவரை அழைத்து அன்போடு நலம் விசாரித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன் மிகுந்த உணர்ச்சியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“என்னை அடையாளம் கண்டு அவர் அழைத்துப் பேசியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். என் குடும்பத்தாரின் நலன் பற்றி விசாரித்தார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக அவரை நேரில் சந்திக்க முடியாமல் இருந்ததை அவரிடம் சொன்னேன்.
கட்சி தொடங்கிய பிறகு வந்த சில புதிய நிர்வாகிகள், எங்களைப் போன்ற மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாகவும் அவரிடம் எடுத்துச் சொன்னேன். அதைக் கவனமாகத் கேட்ட விஜய், இதுகுறித்து கவனிப்பதாக உறுதியளித்தார்.
பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் என்னைச் சந்திக்க அனுமதிக்காத நிலையிலும், தலைவரே என்னை அடையாளம் கண்டு அழைத்துப்பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். கடந்த 30 ஆண்டுகளாக அவருடன் இருக்கிறேன். இதுவரை கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றாலும், அவர் நம் குறைகளைக் கவனிப்பார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று ரங்கராஜன் தெரிவித்தார்.
