நீதிமன்ற விசாரணையைக் காட்டும் கமர்ஷியல் சினிமா! Court Telugu Movie 2025 Review
சில திரைப்படங்களின் ட்ரெய்லர், டீசர் மற்றும் சமூகவலைதளங்களில் அவை குறித்த தகவல்களைக் கண்டவுடன், அவற்றைக் கண்டு ரசிக்க வேண்டுமென்ற ஆவல் பிறக்கும். ஆனாலும், அது நமது முதன்மையான, உடனடியான விருப்பமாக இருக்காது. வேறொரு சந்தர்ப்பத்தில் அந்த நினைவு வரும்போது, மீண்டும் அந்த ஆவல் பெருகும்.
தெலுங்கில் வெளியாகியுள்ள ‘கோர்ட்’ திரைப்படம் அப்படியொரு ஆசையை மனதில் ஏற்படுத்தியது. Court Telugu Movie 2025 Review

இப்படம் குறித்த தகவல்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தாலும், சுமார் 10 நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடியை வசூலித்ததாக வந்த செய்திகளே அதற்குக் காரணம். இத்தனைக்கும் இப்படத்தில் பிரியதர்ஷி, சாய்குமார், சிவாஜி எனத் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரிந்த மிகச்சில கலைஞர்களே இதில் நடித்திருக்கின்றனர். இதனை இயக்கியிருப்பவர் புதுமுகமான ராம் ஜகதீஷ். அப்படியிருந்தும் இப்படியொரு சாதனையைப் படைக்கும் அளவுக்கு ‘கோர்ட்’ படத்தில் என்ன சிறப்பம்சம் இருக்கிறது?
போக்சோ குற்றச்சாட்டு கதை! Court Telugu Movie 2025 Review
ஒரு இளம் வழக்கறிஞர் தனது சீனியர் எப்படியெல்லாம் ஒரு வழக்கை அணுகுவார் என்று கனகச்சிதமாகச் சிந்திக்கிறார். அதனைக் கண்டு அவரது சகாக்களே ஆச்சர்யப்படுகின்றனர். குறிப்பிட்ட காலம் வரும்போது, தானும் தனியாக வழக்கு விசாரணையை மேற்கொள்வேன் என்பதில் அந்த இளம் வழக்கறிஞர் உறுதியாக இருக்கிறார். Court Telugu Movie 2025 Review
சில காலம் கழித்து தனது சீனியரிடம் அந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. Court Telugu Movie 2025 Review
தானாக முயற்சிக்கும்போது கிடைக்காத அந்த வாய்ப்பு, ஒருநாள் அந்த இளம் வழக்கறிஞரைத் தேடி வந்தடைகிறது. Court Telugu Movie 2025 Review
போக்சோ குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள ஒரு இளைஞனுக்கு ஆதரவாக, அந்த இளம் வழக்கறிஞர் ஆஜராகிறார். இத்தனைக்கும் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியிடப்படவுள்ள நாளன்று, அவர் நீதிமன்றத்தை நாடுகிறார்.

வழக்கில் மறுவிசாரணை செய்யப்பட வேண்டும் என்ற அந்த இளம் வழக்கறிஞரின் வேண்டுகோளை நீதிபதி ஏற்கிறார். மீண்டும் சாட்சிகள் கூண்டில் ஏற்றப்படுகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 19 வயதாகிறது. அவர் காதலிக்கும் பெண்ணின் வயது 17. தற்செயலாக மொபைல்போனில் பேசத் தொடங்கும் இருவரும் ஒருகட்டத்தில் தங்களது காதலை உணர்கின்றனர். Court Telugu Movie 2025 Review
பெரிதாகக் கல்வியறிவு இல்லாத அந்த இளைஞர் சாலையில் மொபைல் போன் விற்பவர், பார் அட்டெண்டர் என்று பல வேலைகளைச் செய்கிறார். அந்தப் பெண்ணோ ஒரு கல்லூரியில் ‘இண்டர்மீடியட்’ பயின்று வருகிறார்.
தான் வசிக்கும் வீட்டிற்கு அப்பெண்ணை அழைத்துவரும் அந்த இளைஞர் தனது தாய், சகோதரியிடம் அவரை அறிமுகப்படுத்துகிறார். அதேநேரத்தில், அவரது தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைக்கின்றனர். அது அவரைச் சிக்கலில் மாட்டி விடுகிறது.
அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அந்த இளைஞர் மீது ‘போக்சோ’ வழக்கு பாய்கிறது.
நடந்த உண்மை என்னவென்று அறியும் அந்த வழக்கறிஞர், காதலில் ஈடுபட்ட இருவரைப் பிரிக்க ‘போக்சோ குற்றச்சாட்டு’ சுமத்துவது சரியா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்.
அது மட்டுமல்லாமல், தனது கேள்வியை வலுப்படுத்தும்விதமாக அவரால் உண்மைகளை நிரூபிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘கோர்ட்’ படத்தின் மீதி.
‘கமர்ஷியலான’ பின்பாதி! Court Telugu Movie 2025 Review
இதில் இளம் வழக்கறிஞராக பிரியதர்ஷி புலிகொண்டாவும், அவரது சீனியராக சாய்குமாரும் நடித்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அறிமுகக் காட்சி படத்தைப் பார்ப்பதற்கான ‘விசிட்டிங் கார்டாக’ உள்ளது. இந்தக் கதையில் தங்களுக்கான இடம் என்ன என்பதை உணர்ந்து அவர்கள் நடித்துள்ளனர்.
சாய்குமாரின் இன்னொரு ஜூனியராக நடித்துள்ள விசிகா சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். விரைவில் இவரை முழுநேர ஹீரோயினாக எதிர்பார்க்கலாம்.
இதில் வரும் சந்திரசேகர் – ஜாப்லி காதல் ஜோடியாகப் புதுமுகங்கள் ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி இருவரும் நடித்துள்ளனர். இளமைத் துடிப்போடு சிறப்பானதொரு நடிப்புத்திறமையும் கலந்திருப்பது, அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஈர்ப்புமிக்கதாக ஆக்கியிருக்கிறது.

இவர்கள் தவிர்த்து ரோகிணி, சுபலேக சுதாகர், ஹர்ஷ வர்தன் உட்படச் சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் நடித்திருப்பர். அவர்களில் நம்மை மிரள வைத்திருக்கிறார் சிவாஜி.
ஒருகாலத்தில் நாயகனாக நடித்து, பின்னர் அரசியலில் குதித்து, சமீபகாலமாகத் திரைப்படங்களில் தென்படாமல் இருந்தவர், இதில் மங்கபதி எனும் வில்லன் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். அவரது வில்லத்தனம் சில இடங்களில் செயற்கையாகத் தெரிந்தாலும், கடைக்கோடி ரசிகனையும் இக்கதையோடு ஒன்ற வைப்பதற்கு அதுவே அடித்தளமிட்டிருப்பதை மறுக்க முடியாது.
’கோர்ட்’ படத்தைத் திரையில் பார்க்கிறபோது, நம்மால் ‘ப்ரெஷ்’ஷாக உணர முடியும். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ், கலை இயக்குனர் விதல் கோசணம் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படைப்பு மீது கொண்டிருக்கிற அதீத காதலே அதற்குக் காரணம்.
விஜய் புல்கனின் இசையில் பாடல்கள், ரீரிகார்டிங் இரண்டுமே கதையோடு ஒன்ற வைக்கும் வகையில் இருக்கின்றன.
முன்பாதி முழுக்கவே ‘நடந்தது என்ன’ என்று விவரிக்கும் வகையில் ஒரு இளஞ்ஜோடியின் காதலை விவரிக்கிறது. பின்பாதியில் போக்சோ குற்றச்சாட்டில் சிக்கியவரை விடுவிக்கும்விதமாக விசாரணை எவ்வாறு நடந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் முன்பாதியை விடப் பின்பாதியில்தான் ‘கமர்ஷியல்தனம்’ அதிகம். யதார்த்தத்தை விரும்புகிற ரசிகர்களுக்கு அது ‘ஒவ்வாததாக’ இருக்கலாம். ஆனால், சாதாரண ரசிகர்களை அது வெகுவாக ஈர்க்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அதனால், இப்படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதில் இயக்குனர் ராம் ஜகதீஷ் உடன் கைகோர்த்துச் செயல்பட்ட கார்த்திகேயா ஸ்ரீனிவாஸ், வம்சிதர் ஸ்ரீகிரியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இக்கதையில் காதலுக்குப் பின்னே சாதீய குறுக்கீடுகள் இருப்பதையும் தெளிவுறக் காட்டியிருக்கின்றனர்.
ஒரு இயக்குனராக ராம் ஜகதீஷ் நல்லதொரு திரையனுபவத்தைத் தருகிறார். ஒவ்வொரு பிரேமும் கதை சொல்ல வேண்டும் என்று அவர் மெனக்கெட்டிருப்பது அதன் பின்னிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவுக்கு நல்லதொரு இயக்குனர் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கமர்ஷியல் சினிமாவுக்கான ‘ஜிகினாத்தனம்’ இல்லாமல், அதேநேரத்தில் யதார்த்த தொனி தெறிக்கும் பின்னணியுடன் ஜனரஞ்சகமான உள்ளடக்கத்தைத் தந்த வகையில் நம்மை வசீகரிக்கிறது இந்த ‘கோர்ட்’. Court Telugu Movie 2025 Review
இந்த படத்தின் டைட்டில் ‘COURT – STATE vs A NOBODY’ என்றே குறிப்பிடப்படுகிறது. அதன் மூலமாக உந்தப்பட்டு தியேட்டருக்கு வருபவர்களுக்கு நல்லதொரு கமர்ஷியல் சினிமா அனுபவத்தை தருகிறது இப்படம். மாறாக, யதார்த்த சினிமாவை எதிர்பார்த்தவர்களை இது கொஞ்சம் ஏமாற்றும்..!