’மைம்’ கோபி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிப்பு வாய்ப்புகள் குவிகிற சமகால நடிகர்களில் ஒருவர். திரையில் முழுமையாக முகம் காட்டும் முன்னரே, இவர் ‘ஜி மைம் ஸ்டூடியோ’ எனும் நடிப்பு பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்திருக்கிறார். அது, இளம் திறமையாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. character artist mime gopi – the good soul in villain suit
வில்லன் பாத்திரங்களை விரும்பி ஏற்கும் நல்ல மனிதர்!
ஆறு அடி உயரம். ஆஜானுபாகுவான தோற்றம். மிரட்டும் பார்வை. பயமுறுத்தும் குரல். நடுங்க வைக்கும் உடல்மொழி என்று சினிமா வில்லன்களுக்கே உரிய லட்சணங்கள் அனைத்தையும் அச்சுப் பிசகாமல் பிரதிபலிப்பவர் ‘மைம்’ கோபி. அதற்கு நேரெதிராக, இயல்பு வாழ்க்கையில் எதிர்ப்படும் எல்லோரையும் அன்போடு நோக்கி, ஆறுதலளித்து அரவணைக்க விரும்புகிற மனதுக்குச் சொந்தக்காரர்.
சுருக்கமாகச் சொன்னால், திரையில் வில்லன் பாத்திரங்களை விரும்பி ஏற்கிற ஒரு நல்ல மனிதர் எனலாம்.
மைம் எனும் மௌன நாடகக் கலை மீது அதீத காதல் கொண்ட காரணத்தால், அது இவரது பெயரில் ஒருபாதியாகவே மாறிப் போனது. கோபிநாதன் என்பது இவரது இயற்பெயர்.
1975ஆம் ஆண்டு ஜுன் 29ஆம் தேதி சென்னையில் இவர் பிறந்தார். சிறு வயது முதலே படிப்பைக் காட்டிலும் நடிப்பில் அதீத ஆர்வம் இவருக்கு இருந்திருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரிக் காலத்தில் ‘மைம்’ கலையைப் பற்றித் தெரிந்துகொண்டு அதில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

அந்த வகையில், சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது அங்கு இவருக்கு அறிமுகமானவர்தான் இயக்குனர் பா.ரஞ்சித். அவரது நாடகத் திறமையைப் பார்த்து வியந்தவர், பிறகு அவரோடு நட்பு பேணத் தொடங்கியிருக்கிறார். அது, ‘அட்டகத்தி’ படத்தில் ’ஜி மைம் ஸ்டூடியோ’வைச் சேர்ந்த கலைஞர்கள் முகம் காட்டத் துணை நின்றிருக்கிறது.
மைம் கோபி நடிகராக அறிமுகமான முதல் திரைப்படம் ‘கண்ணும் கண்ணும்’. மறைந்த இயக்குனர் மாரிமுத்து அதனை இயக்கியிருந்தார். ஆனால், அதற்கு முன்னரே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சிறு பாத்திரத்தில் தலைகாட்டிய அனுபவம் இவருக்குண்டு.
திரைப்படங்களில் நடிப்பதுதான் இலக்கு என்றான பிறகு, அதனை நோக்கிய பயணத்தில் பல்வேறு அனுபவங்களை இவர் எதிர்கொண்டிருக்கிறார். தொடக்க காலத்தில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக, சில ஷாட்களில் வந்து போகிறவராக, இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. பிறகே துரோகி, உயர்திரு 420, இனம் போன்ற படங்களில் நடித்தார்.
2014ஆம் ஆண்டு பிறந்தபோது, மைம் கோபியின் திரை வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது எனலாம். அந்த ஆண்டு வெளியான ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் அவருக்குச் சொல்லத்தக்க வகையில் ஒரு பாத்திரம் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, ‘மெட்ராஸ்’ படத்தில் மைம் கோபி நடித்தார். அதில் அவர் ஏற்ற பெருமாள் பாத்திரம், தமிழ் சினிமா அவரைப் பத்திரமாகக் காக்கும் என்ற உத்தரவாதத்தைத் தந்தது. அதுநாள்வரை தான் பார்த்த, பழகிய, எதிர்கொண்ட சென்னை மக்களின் ஒரு துளியாக அப்படத்தில் அவர் தெரிந்தார்.
காதலுடன் ஒரு பணியில் ஈடுபட்டால், காலம் பல கடந்தாலும் அது வெற்றியைப் பரிசளிக்காமல் விடாது என்பதற்கான உதாரணமாக அமைந்தது ‘மெட்ராஸ்’.

பிறகு மாரி, மாயா, கதகளி போன்ற திரைப்படங்களில் வெவ்வேறு நட்சத்திரங்களோடு இணைந்து நடித்தார் மைம் கோபி. அதேநேரத்தில், புதுமுகங்கள் நிறைந்திருக்கிற படைப்புகளிலும் தன்னைப் பொருத்திக் கொண்டார். அந்த சமநிலை தான் இவரது பெரும்பலம்.
அதற்கான பலனாக ‘உறியடி’ அமைந்தது. விஜயகுமார் நாயகனாக நடித்து, இயக்கித் தயாரித்த அப்படத்தில் மைம் கோபி ஏற்ற குமார் பாத்திரம் திரை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ‘பைரவா’, ‘8 தோட்டாக்கள்’, ’மரகத நாணயம்’, ‘மாயவன்’, ‘வேலைக்காரன்’, ’அடங்கமறு’, ‘விஸ்வாசம்’ என்று தொடர்ந்தது அவரது வெற்றிக் கணக்கு.
தனக்கான காட்சிகள் எத்தனை என்பதை நோக்காமல், தான் திரையில் தெரிகிற நேரத்தில் எப்படி பார்வையாளர்களால் கவனிக்கப்படுவோம் என்பதில் கவனம் செலுத்துகிற சிலரில் ஒருவர் மைம் கோபி. அதனாலேயே ஜீவி, ஜாக்பாட், வி1 போன்ற படங்களிலும் அவரால் பிரகாசிக்க முடிந்தது.
இதோ, அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ படத்தில் பெயர் குறிப்பிடுகிற அளவுக்கு அவரது ‘பெர்பார்மன்ஸ்’ அமைந்திருக்கிறது. வில்லத்தனத்தை வெளிப்படுத்திய அளவுக்கு நகைச்சுவையை, குணசித்திர நடிப்பை வெளிப்படுத்துகிற வாய்ப்பு இவருக்குப் பெரிதாகக் கிடைக்காதது வருத்தம் தரும் விஷயம் தான்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரையுலகிலும் முத்திரை பதித்து வருகிறார் மைம் கோபி. ஆண்டுக்கு ஐந்தாறு படங்களாவது தெலுங்கில் நடித்து விடும் அளவுக்கு பிஸியாக இயங்கி வருகிறார்.
குக் வித் கோமாளி வின்னர்!

இதற்கு நடுவே, ‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாகத் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டிருக்கிறார். வெறுமனே சமையல் நிகழ்ச்சியாக அதனைக் கருதாமல், தனது இயல்பான சுபாவத்தை அதில் வெளிப்படுத்தியது அவருக்குப் பல லட்சம் ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
வயதில் மூத்தவர்களை ‘அண்ணே’, ‘ஐயா’ என்றழைப்பதும், இளையவர்களை ‘தம்பியான்’ என்றழைப்பதும் மைம் கோபியின் இயல்புகளில் ஒன்று. அதனைத் தனது வாரிசுகள் மட்டுமல்லாமல் தான் எதிர்கொள்ளும் அனைத்து இளையோரும் கற்றுச் செயல்படுத்த வேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட பேச்சுகள் இவரிடத்தில் வெளிப்படுவதைக் காணும்போது, சிறந்த பேச்சாளராகவும் நமக்குத் தென்படுகிறார்.

நடிப்பு பணிகளுக்கு நடுவே முதியோர் இல்லங்கள், ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளுக்குச் சென்று நல உதவிகளை வழங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மைம் கோபி. தான் நேசிக்கிற மைம் கலையில் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் என்பது பெரும்பாலானோர் அறியாத தகவல்.
இப்படித் தேடத் தேடப் பல நல்முகங்களை வெளிப்படுத்துகிற மைம் கோபி, இதனை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் ஏதேனும் ஒரு திரைப்படத்தில் அடியாளாக வந்து, உரத்த குரலில் அலறிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வாய்ப்புகளை மீறி, அவரது வேறுபட்ட பரிமாணங்களை திரையில் வெளிக்காட்டுகிற வாய்ப்புகள் அடுத்தடுத்து அவருக்குக் கிட்ட வேண்டும்; சிறப்பானதொரு திரையாளுமையாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.