செஸ் ஒலிம்பியாட் : பிரதமரை அழைக்க செல்லும் தமிழக எம்.பி.க்கள்!

Published On:

| By Kavi

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பிரதமர் மோடியை நேரில் அழைக்க திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் ஜூலை 19ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. 188 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். எனவே உணவு, உபசரிப்பு, போக்குவரத்து என அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்ளத் தமிழக அரசு 18 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

ADVERTISEMENT

முதன்முறையாகத் தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி என்பதால் அனைத்து நாடுகளின் கவனமும் தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வந்தார். அந்தவகையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையின் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு வருமாறு பிரதமரை நேரில் சென்று முதல்வர் அழைப்பதாக இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை. எம்.பி.க்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை அனுப்பி வைக்கிறேன். கண்டிப்பாக நீங்கள் வர வேண்டும் என்று போனிலேயே பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர்.
அதன்படி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க, தமிழக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர்.

பிரியா

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share