வெளிநாடுகளில் இந்தியாவின் அரிசி, கோதுமைக்கு கடுமையான கிராக்கி உள்ளதால், விளைநிலங்களின் பரப்பளவை அதிகரித்து நடப்பு சீசனில் நெல், கோதுமையை அதிகமாக பயிரிட ஒன்றிய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநில உணவுத் துறை அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் நெல், கோதுமை அதிகம் பயிரிடும் மாநிலங்கள் மாற்றுபயிர்களான எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளை பயிரிடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தேசிய அளவில் நெல் பயிரிடும் பரப்பளவு 16 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே நெல் பயிரிடும் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே நெல் பயிரிடும் வயல்களில் மாற்றுபயிர்களாக எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகளைப் பயிரிட்டிருந்தால் அது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம் நெல் சாகுபடி மற்றும் உற்பத்தி குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது ஒன்றிய அரசிடம் போதுமான கையிருப்பில் அரிசி உள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அரிசிக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, விவசாயிகள் நெல் பயிரிட்டால் சர்வதேச அளவில் அதற்கு நல்ல விலை கிடைக்கும். தேவைப்பட்டால் அரசும் கூடுதலாக கொள்முதல் செய்யத் தயாராக உள்ளது. இதே போல கோதுமை உற்பத்தி பரப்பளவையும் அதிகரிக்க வேண்டும்” என்று பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
“பெரும்பாலான மாநிலங்களில் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. சில பற்றாக்குறை மாநிலங்களில் தற்போது உபரி உற்பத்தி காணப்படுகிறது. இருப்பினும் ஒன்றிய அரசின் தொகுப்புக்கான கொள்முதல் வரத்து ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே சமயம் மாநிலங்களின் தேவை குறைந்து வரும்போது ஒன்றிய அரசிடம் உள்ள இருப்பு அதிகரித்துவிடுகிறது. இத்தகைய சூழலில் உபரி உற்பத்தி உள்ள மாநிலங்களுக்கு கிடங்குகளை மாற்ற முடியாது. இதன் காரணமாகவே உபரி உற்பத்தி மாநிலங்கள் மாற்று பயிர்களை சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டன. இதன் மூலம்தான் ஸ்திரமான வேளாண் வளர்ச்சிக்கு வழி காண முடியும்” என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
2020-21ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் அரிசி உபரி உற்பத்தி இருந்ததாக ஒன்றிய அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
