மேற்காசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்தியாவில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு எரிபொருள் இருப்பை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு சில தற்காலிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பெட்ரோலியத்துறை நேற்று (ஜூன் 29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“மேற்காசிய நெருக்கடியால் ஏற்பட்ட விநியோகத் தடைகளின் போது, சர்வதேச எரிபொருள் விலை உயர்வில் இருந்து சில்லறை வர்த்தக நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிலையாக வைத்திருந்தது.
இதனால் சில்லறை விலைக்கும், மொத்த நுகர்வோர் விலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில தொழில்துறையினரும், வணிக நுகர்வோரும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் எரிபொருளை வாங்கத் தொடங்கினர். இது எரிபொருள் பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றுக்கு வழிவகுத்து, விநியோகத்தைப் பாதித்தது.
இத்தகைய சூழ்நிலையைச் சீரமைக்க, கடந்த ஜூன் 12, 2026 அன்று தற்காலிக ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் அல்லது வாகனத்திற்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் ஸ்பீடு டீசல் மட்டுமே வழங்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தொழில்துறை நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட நுகர்வோர் பம்புகள் மூலம் எரிபொருளைப் பெற அறிவுறுத்தப்பட்டது.
தற்போது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகச் சூழல் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடுகள் இனி தேவையில்லை என முடிவு செய்துள்ளது. விநியோக நிலைமை சீரடைந்துள்ளதால், ஜூன் 12, 2026 தேதியிட்ட உத்தரவு ஜூலை 1, 2026 முதல் திரும்பப் பெறப்படுகிறது. இது விநியோகச் சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும், விநியோக நடைமுறைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
