ADVERTISEMENT

“தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை நெருக்கடி” – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Published On:

| By indhu

"Central Government Uses Enforcement Sector to Retaliate"

அமலாக்கத்துறையை மத்திய அரசு பழிவாங்க பயன்படுத்துகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இன்று (ஏப்ரல் 27) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 27)பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் தரப்பிலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸுக்கு அமலாக்கத்துறை அளித்த பதிலில், “அரவிந்த் கெஜ்ரிவாலை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், “மத்திய அரசு அமலாக்கத்துறையை எந்த அளவிற்கு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக பயன்படுத்துகிறது என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் அவர் சார்ந்த கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக தனது மேலாதிக்கத்தை காட்டுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை சமரசம் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை எந்த அளவிற்கு பழிவாங்கும் நடவடிக்கைக்காக தன்னிச்சையாக நடந்து கொள்கிறது என்பது தெளிவாக புரிகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி…உத்திரப்பிரதேச ரிசல்ட்டை மாற்றுமா?

பட்டப் பகலில் கோயம்பேடு பாலத்தில்… இப்படியுமா? வைரலாகும் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share