கேரளாவின் முன்னாள் நிதி அமைச்சரான தாமஸ் ஐசக்கிற்கு நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார் தாமஸ் ஐசக்.
அவர் மீது அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தின் கீழ் (Foreign Exchange Management Act – FEMA) வழக்கு பதிந்துள்ளது அமலாக்கத்துறை.
என்ன வழக்கு?
2019 ஆம் ஆண்டு கேரள உட்கட்டமைப்பு முதலீடு நிதி வாரியமானது (Kerala Infrastructure Investment Fund Board) மசாலா பத்திரங்கள் (Masala Bonds) வழியாக 2150 கோடி ரூபாயை திரட்டியது. கேரளாவின் பல்வேறு திட்டங்களுக்காக 50,000 கோடி ரூபாயை திரட்டுவதற்காக திட்டமிட்டிருந்தது.
மசாலா பத்திரங்கள் என்பவை இந்தியாவுக்கு வெளியில் வெளிநாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பில் விநியோகிக்கும் பத்திரங்களாகும். அதாவது வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்கள் டாலரிலோ அல்லது அந்த நாட்டின் உள்ளூர் பண மதிப்பிலோ அல்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பில் நிதியைத் திரட்டவும், விநியோகிக்கவும் இந்த பத்திரங்கள் உதவுகின்றன.
இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை ரியல் எஸ்டேட் செயல்பாடுகளுக்கு முதலீடாகப் பயன்படுத்த முடியாது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வீட்டு வசதி தொடர்பான திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
இந்த பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியதில் FEMA சட்டத்தின் விதிகள் மீறப்பட்டதாக கேரளாவின் அப்போதைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மீது அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
நீதிமன்றம் என்ன கூறியது?
அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக தாமஸ் ஐசக் கேரள உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஆர்.ரவி ஏப்ரல் 5 ஆம் தேதியன்று, ”முதலில் தாமஸ் ஐசக் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து அவர் சட்டவிரோதமாக செயல்பட்டார் என்று நீதிமன்றம் நம்புவதற்கான முகாந்திரத்தைக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டார்.
அதன் பிறகு நேற்று (ஏப்ரல் 9) அமலாக்கத்துறை சில ஆவணங்களை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அவற்றைப் படித்த நீதிபதி ரவி, “இதிலுள்ள சில பரிவர்த்தனைகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. தேர்தல் அருகில் இருப்பதாலும், மனுதாரர்(தாமஸ் ஐசக்) ஒரு வேட்பாளராக இருப்பதாலும், தேவையான விளக்கங்களை எப்படிப் பெறுவது என்பதை பின்னால் முடிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தல் முடிவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது. பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக தேர்வாவதற்கு தேர்தலில் போட்டியிடும் ஒருவரை இந்த நேரத்தில் தொந்தரவு செய்வது முறையானதல்ல.” என்றும் நீதிபதி ரவி கூறியுள்ளார்.
அத்துடன் தேர்தல் முடியும் வரை மேற்கொண்டு எந்த சம்மனையும் தாமஸ் ஐசக்கிற்கு அனுப்பக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் மத்திய புலனாய்வு அமைப்புகளால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருக்கும் சூழலில், கேரள உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமநாதபுரம்: ஓபிஎஸ்சின் ‘கேரன்ட்டி’ வாக்குறுதிகள்!
கம்பேக் கொடுக்குமா கோலிவுட்?.. சம்மரில் களமிறங்கும் படங்களின் லிஸ்ட் இதோ..!
நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வைத்த இரண்டு வாதங்கள்..ஏற்க மறுத்த நீதிபதிகள் சொன்னது என்ன?