“ஜாமீனுக்காக கெஜ்ரிவால் அதிக மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” : அமலாக்கத்துறை வாதம்!

Published On:

| By Kavi

ஜாமீன் கிடைப்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்கிறார் என்று அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் கெஜ்ரிவால் சார்பில், ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். மருத்துவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (ஏப்ரல் 18) சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹப் ஹூசைன், “ஜாமீன் கிடைப்பதற்காக வேண்டுமென்றே அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவை அதிகரிக்க முயற்சி செய்கிறார்.

நாங்கள் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கெஜ்ரிவால் என்ன உணவு எடுத்துக் கொள்கிறார், மருந்து சாப்பிடுகிறார் என்று கேட்டோம்.

ஏப்ரல் 1ஆம் தேதி அவருக்கு வீட்டில் சமைத்த உணவு கொடுக்க அனுமதிக்கப்பட்டது.

தனது உடம்பில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக கூறும் அவர் தினமும் மாம்பழங்கள், இனிப்பு அதிகம் கலந்த தேநீர், மற்றும் இனிப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார்.

தனது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதாக கூறி ஜாமீன் பெற வேண்டும் என்பதற்காக கெஜ்ரிவால் இவ்வாறு செய்கிறார்” என்று வாதம் வைத்தார்.

இந்த வாதத்தை எதிர்த்து கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின், “ஊடகங்களுக்கு தீனி போட வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை இதுபோன்ற வாதங்களை முன் வைத்துள்ளது. இந்த மனுவை நாங்கள் திரும்ப பெறுகிறோம். வேறொரு மனு தாக்கல் செய்யப்படும்” என்று கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி, “கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?

”தேர்தல் முறைகேடு… 2 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது” : உச்சநீதிமன்றம்