இன்னும் சில நாட்களில் ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகளையும், உங்கள் அருகிலுள்ள ஏடிஎம்களில் “பணம் இல்லை” (No Cash) என்ற அறிவிப்புப் பலகைகளையும் நீங்கள் காண நேரிடலாம். ஏனெனில், ஏற்கெனவே சில மாநிலங்களில் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியைச் செய்யும் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டம் நீண்ட காலம் நீடித்தால் மக்கள் கடுமையான பணத் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடலாம்.
ஏன் இந்த Cash Shortages போராட்டம்?
ஊதிய உயர்வு தொடர்பான கருத்து வேறுபாடே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணமாகும். ஏடிஎம்களில் பணத்தை நிரப்புதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் பணிக்குத் திரும்ப மாட்டார்கள். இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வராவிட்டால் ஏடிஎம்களால் புதிய பணத்தாள்களை வழங்க இயலாது. ஏடிஎம்களில் உள்ள பணம் தீர்ந்தவுடன் அவை காலியாகிவிடும் என்பதால், இது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும்.
எந்தெந்த மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும்?
தற்போது நாடு முழுவதும் சில மாநிலங்களில் இந்தப் போராட்டத்தின் தாக்கம் இருக்கிறது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இப்பிரச்சினை இருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் தற்போது இந்தப் போராட்டம் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரவில்லை ஆனால், வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் விரிவடையலாம்.
