திமுக வேட்பாளர் பட்டியல்: ஓர் பார்வை!

By Balaji

|

Published on 15 Apr 2016, 12:00 AM

பல முனைப் போட்டிக் கொண்ட தமிழக தேர்தல் களத்தில் கடந்தகால வரலாற்றின்படியும், வாக்கு வங்கியின் அடிப்படையிலும் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள முக்கிய கட்சிகள் ‘அதிமுக-திமுக’.

அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட, எதிர்ப்பார்ப்புக்கிடையே திமுக தனது வேட்பாளர்ப் பட்டியலை 13 ம் தேதி மாலை வெளியிட்டது. இதில் கூட்டணிக்கட்சிகளுக்கு போக மீதமுள்ள தங்களது 173 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் 97 தொகுதிகள் பழைய முகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விழுக்காடு 56.06%. ஆகும். முறையே

ADVERTISEMENT

76 புது முகங்கள் 43.93%

19 பெண்கள் 10.98%

ADVERTISEMENT

106 பட்டதாரிகள் 61.27%

9 மருத்துவர்கள் 5.20%

ADVERTISEMENT

27 வழக்கறிஞர்கள் 15.60%

12 பொறியாளர்கள் 6.93%

19 முதுநிலை பட்டதாரிகள் 10.98%

3 பி.எச்.டி ஆய்வு பட்டம்

பெற்றவர்கள் 1.73%

36 இளைநிலை

பட்டதாரிகள்.. 20.80%

4 இஸ்லாமியர்கள் 2.31 %

18 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு 10.40%

23 சிட்டிங் தொகுதிகளில் 12 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

11 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. இதன் விழுக்காடு 6.35%

65 மாவட்டங்களில் 25 மாவட்ட செயலாளர்களுக்கு வாய்ப்பில்லை 14.45%

4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பில்லை 2.31% ஆகும். திமுக பொருளாளர் மு, க. ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் பெற்ற அனுபவங்கள் மேற்கண்ட வேட்பாளர் பட்டியல் புள்ளிவிவரங்களில் தெரிகிறது. குறிப்பாக பட்டதாரிகள், பெண்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு பிரிவாகச் சந்தித்துப் பேசினார். அவர்கள் பிரச்னைகளை அறிந்துகொண்டார். அதனை வேட்பாளர்கள் பட்டியலில் பார்க்கமுடிகிறது.

படித்தவர்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ல் நடந்த தேர்தலை விட இம்முறை கூடுதலாக படித்த வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை (119 தொகுதிகள்) விட இம்முறை கூடுதல் தொகுதிகளில் திமுக பங்கேற்றுள்ளதால், பட்டதாரிகள் பட்டியலும் உயர்ந்துள்ளது என்றாலும் சமகால அரசியல் போக்கில் ‘படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்ற எண்ணம் நகரமயமான சமூகத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. மருத்துவர்களுக்கு 5.20% வழங்கி, அதை நகரம் சார்ந்த தொகுதிகளில் ஒதுக்கியுள்ளனர். உதாரணமாக மெட்ரோ சிட்டி சென்னையின் தியாகராயர் நகர் தொகுதி டாக்டர் எஸ்.என் கனிமொழிக்கு ஒதுக்கியுள்ளதை கூறலாம்.. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் 80% படித்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,79,9,636 புதிய வாக்காளர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இடம்பிடித்துள்ளனர். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இவ்வாக்காளர்களின் வாக்குகள் இருக்கும். எனவே இந்த வாக்குகளைக் கவர திமுக வும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது. இதையொட்டியே 43.93% புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கலாம். திருவெறும்ப்பூர் தொகுதி தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

அதே சமயம் கடந்தகால தேர்தல்களில் வெற்றிப்பெற்ற பழைய முகங்களில் 56.06% வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் செல்வாக்கு, தொகுதியில் அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள் , இவைகளைக்கொண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பார்க்க முடிகிறது. மேலும் அவர்களின் அனுபவம் தொகுதியை வெல்லவும், இளையவர்களை வழிநடத்தி செல்லவும் உதவிகரமாக இருக்கும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாக காண முடிகிறது. 10.40% முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதும் இந்தவகையிலே புரிந்துக்கொள்ளலாம். அவர்களின் கடந்த கால நிர்வாக திறமை, ஆட்சியமைக்கும் போது உதவிகரமாக இருக்கும். துறைரீதியான தகவல்கள் அறிந்துருப்பதால் அமைச்சகம் சார்ந்த திட்டங்களை வகுக்கவும் , சிறந்த பங்களிப்பாக இருக்கும் என்றடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக பல்வேறு போராட்டங்கள், கருத்தரங்கள் நடத்தியிருந்தன. அதில் குறிப்பாக மகளிர் உரிமைக்கான போராட்டங்கள் மிகுதியானது. இதிலும் குறிப்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி, தற்கால சமூகத்தில் பெண்களின் வாழ்வியலை மேம்படுத்தும் அரசியலை மைய்யப்படுத்தி தொடர்ந்து பல கூட்டங்களில், மாநாடுகளில் பேசி வந்தார். கடந்த 2015 ஆகஸ்ட் 22 ம் தேதி காஞ்சீபுரத்தில் மதுவுக்கு எதிரான மகளிர் மாநாட்டிலும் கூட ‘மகளிர் உரிமைகளை வென்றெடுக்க போராடும் ஒரே கட்சி திமுக தான். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலைக்காக உழைத்தாலும், குறைந்தது 33 விழுக்காடாவது பெண்களின் பங்களிப்பை கொண்டு வர பாடுபடுவோம்.’ என்று முழக்கமிட்டார். மார்ச் 6 ம் தேதி திருச்சியில் நடந்த மகளிர் மாநாட்டிலும் இதையே முழங்கினார். இருந்தும் திமுக வெளியிட்ட பெண்களுக்கான வேட்பாளர் பட்டியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் 10.98% தான். இதில் 4 மருத்துவர்கள், 3 வழக்குரைஞர்கள் , 3 ஆசிரியைகள், 9 தனி தொகுதி வேட்பாளர்கள்.

14 வது முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் கருணாநிதி சிட்டிங் தொகுதியான திருவாரூரிலும், மு.க ஸ்டாலின் தன் சிட்டிங் கொளத்தூர் தொகுதியிலும் நிற்க பேராசிரியர் க அன்பழகன், கோ.சி மணி, ஆற்காடு வீராசாமி போன்ற மூத்த தலைவர்கள் இம்முறை போட்டியிடவில்லை. அவர்கள் உடல்நிலை கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கலாம். திரைத்துறையை சேர்ந்த வாகை சந்திரசேகர் வேளச்சேரி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. திரைத்துறை வாக்குகளை கவர, எதிர்காலத்தில் ஆட்சியின்போது திரைத்துறையினரை திமுக சார்புநிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் வழங்கப்பட்டுருக்கலாம்.

மொத்தத்தில் 56.06% பழைய முகமும், 43.93% புது முகங்களும் உள்ளடக்கிய, அனைத்து வர்க்க பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு கலவையான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற மெனக்கெடல் தெரிகிறது. ஒரு அணியின் வெற்றிக்கு அணி தேர்வென்பது எந்தளவு முக்கியமோ அதேயளவு சூழலுக்கேற்ப யுக்திகளை கையாளும் கேப்டன், அவரின் எண்ணங்களைச் செயல்வடிவில் வார்க்கும் வீரர்கள், வெற்றிக்காக போராடும் குணம், அயராத உழைப்பும் ஒரிங்கிணைந்து வெளிப்படும்போது மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். எல்லோரையும் போலவே திமுகவும், சாம்பியனாக வேண்டுமென நம்பிக்கையோடு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பரப்புரையையும் தொடங்கிவிட்டது.

சே.த இளங்கோவன்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel