சுவையான சுரைக்காய் பக்கோடா செய்வது எப்படி? இதோ ரெசிபி..

Published On:

| By Santhosh Raj Saravanan

Bottle Gourd Pakoda recipe Evening snacks

குளிர்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக சுவையான பக்கோடாவை செய்து சாப்பிடலாம்.

மக்கள் பெரும்பாலும் காய்கறிகளை குழம்பாக, பொறியல், கூட்டாகவே சாப்பிட்டு பழக்கப்பட்டு உள்ளோம். ஆனால், நீர்ச்சத்துள்ள காய்கறிகளில் இருந்து செய்யப்படும் பக்கோடாக்களின் சுவை உங்களை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தும். குளிர்காலம் நிலவும் தற்போது மாலை நேரங்களில் மற்ற சிற்றுண்டிகளை சாப்பிடுவதை விட காய்கறிகள் மூலம் செய்யப்படும் பக்கோடாக்களை சாப்பிடுவது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். காய்கறிகள் ஆரோக்கியமானது என்பதுடன் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் சுரைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

ADVERTISEMENT

சுரைக்காயில் உள்ள நன்மைகள்

சுரைக்காயில் அதிகளவு தண்ணீர் உள்ளதால் அது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், நார்ச்சத்துக்களும், தாதுக்களும் அதிகமாக உள்ளன. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. சுரைக்காயில் குறைந்த அளவே கலோரி இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – 250 கிராம் (துருவியது)
கடலை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (துருவியது)
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி இலைகள் – 2 தேக்கரண்டி (நறுக்கியது)
எண்ணெய் – வறுக்க

ADVERTISEMENT

செய்முறை

முதலில் சுரைக்காயை நன்றாக கழுவி சீவி எடுத்துக்கொண்டு அதிலுள்ள தண்ணீரை பிழிந்துவிட வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், ஓமம், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது கட் செய்து வைத்துள்ள சுரைக்காய் மற்றும் கொத்தமல்லி இலைகளை அதில் சேர்த்துக்கொள்வோம்.

தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, பக்கோடா செய்வதற்கு பதமாக மாவைத் தயாரிக்க வேண்டும். மாவில் தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல் கவனமாக இருங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் இட்டு சூடாக்க வேண்டும். மாவிலிருந்து சிறிய பக்கோடாக்களை தட்டி சூடான எண்ணெயில் போடவும். மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பக்கோடாக்களை வறுக்க வேண்டும். இப்போது சூடான சுரைக்காய் பக்கோடா ரெடி. சுரைக்காய் பக்கோடாவை கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்டால் சிறிது மசாலா தூவிக்கொள்ளுங்கள்.

மேலும் சில குறிப்புகள்

பக்கோடாவை வறுக்க கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம். பக்கோடாவின் மொறுமொறுப்பை அதிகரிக்க விரும்பினால் மாவுடன் சிறிது ரவை கூட சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும் என்றால் ஏர் ப்ரையரில் கூட பக்கோடாவை செய்து சாப்பிடுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share