மலையாள உலகின் உச்சநட்சத்திரமான மோகன்லால் இயக்கி நடித்து உருவான திரைப்படம் ‘பரோஸ்’. குழந்தைகளுக்கான கதையை மையமாக கொண்ட இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெளியானது.
மோகன்லாலில் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் மூலம் சுமார் ரூ.150 கோடியில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வசூலில் படுமோசமான நிலையில் இருப்பதாக கேரளா பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாளில் 3.45 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், அதன்பிறகு வசூலில் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 5 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.8.75 கோடி என தகவல் வெளியானது.
முன்னதாக அவரது நடிப்பில் வெளிவந்த ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நிலையில், வசூலில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் பரோஸ்’ படத்தின் வசூல் பின்னடைவு குறித்து மோகன்லால் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “பரோஸ் படத்தை நான் பணம் சம்பாதிக்கவோ, லாபமடையவோ இயக்கவில்லை. திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணி தான் இந்தப் படத்தை இயக்கினேன்.
பரோஸ் திரைப்படம் ஏறக்குறைய 6 ஆண்டுகள் முயற்சியில் உருவானது. இதில் பல சிறந்த நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்காற்றியுள்ளனர்.. யாரும் இதுவரை முயற்சிக்காத வித்தியாசமான ஒன்றை நாங்கள் முயற்சித்தோம். இது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவம்.”
கடந்த 47 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும், அன்புக்கும் பிரதிபலனாக அவர்களுக்கு நான் இந்த கிஃப்டை கொடுத்துள்ளேன். இது அவர்களுக்காக நான் உருவாக்கிய பரிசு.
நான் குழந்தைகளுக்கான திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இதனை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் காணலாம். இது உங்களுக்குள் இருக்கும் குழந்தையை உங்களுடன் பேச வைக்கும்” என்று மோகன்லால் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
’பொங்கல் பரிசாக ரூ.30,000 கொடுக்க வேண்டும்’ : செல்லூர் ராஜூ தடாலடி!