உடலை இறுக்கிப் பிடிக்கும் ஸ்லிம்-ஃபிட் ஆடைகளுக்கு மத்தியில், இப்போது Baggy Clothes மீண்டும் ஃபேஷன் உலகில் கவனம் பெற்றுள்ளன.
வசதியையும் ஸ்டைலையும் ஒன்றாக விரும்பும் இளம் தலைமுறையினர் மத்தியில் இந்தப் பாணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
90களில் பிரபலமாக இருந்த ஹிப்-ஹாப் தாக்கம் கொண்ட இந்த ஸ்டைல், தற்போது நவீன தோற்றத்துடன் திரும்பியுள்ளது.
டி-ஷர்ட் மட்டுமல்ல… பேகியில் பல தேர்வுகள்
பேகி ஃபேஷன் என்றால் பெரிய அளவிலான டி-ஷர்ட்டுகள் மட்டும் என்று நினைக்க வேண்டியதில்லை.
வைட்-லெக் ஜீன்ஸ், லூசான கார்கோ பேன்ட், ஓவர்சைஸ் சட்டைகள், ஹூடிகள் என பல வகையான ஆடைகள் இதில் இடம்பெறுகின்றன.
கல்லூரி மாணவர்கள் முதல் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் வரை பலரும் இந்த ஸ்டைலைத் தேர்வு செய்கின்றனர்.
கலர் தேர்விலும் மாற்றம்
முன்பு பேகி ஆடைகள் பெரும்பாலும் கருப்பு, அடர் நீலம் போன்ற நிறங்களில் அதிகம் காணப்பட்டன. இப்போது வெளிர் நிறங்கள், விதவிதமான பிரிண்ட்கள், பல வண்ணக் கலவைகள் என தேர்வுகள் அதிகரித்துள்ளன. இதனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தனிப்பட்ட ஸ்டைலை உருவாக்க முடிகிறது.
எப்படி அணிந்தால் ஸ்டைலாக இருக்கும்?
பேகி ஜீன்ஸ் அணியும்போது உடலோடு ஒட்டிய டாப் அல்லது டக்-இன் செய்யப்பட்ட மேலாடையைத் தேர்வு செய்யலாம்.
அதேபோல் ஓவர்சைஸ் டி-ஷர்ட் அல்லது சட்டை அணிந்தால், கீழே சற்று ஃபிட்டான பேன்ட் அணிவது தோற்றத்தை சமநிலைப்படுத்தும். ஸ்னீக்கர்ஸ், கேன்வாஸ் ஷூக்களும் இந்த லுக்கிற்கு பொருத்தமாக இருக்கும்.
பேகி ஃபேஷனின் முக்கிய அம்சம் தோற்றம் மட்டுமல்ல; நாள் முழுவதும் அணிந்திருந்தாலும் கிடைக்கும் சௌகரியமும் சுதந்திரமான உணர்வும்தான். அதனால்தான் 90s-ல் பிரபலமான இந்த ஸ்டைல் மீண்டும் இன்றைய இளைஞர்களின் அலமாரிக்குள் வந்துள்ளது.
