பெயருக்கு ஏற்றபடி இருக்கிறதா இப்படம்?
மலையாளத்தில் வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் குறிப்பிட்ட வகையிலான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கும். தொண்ணூறுகளின் இறுதியில் தொடங்கி 2010 வரை அந்த ட்ரெண்ட் நீடித்தது. அதே பாணியில் இப்போதும் சில படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலொன்றாக அமைந்துள்ளது ‘விருன்னு’. தமிழில் இது ‘விருந்து’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்த படம் இது.
அர்ஜுன், நிக்கி கல்ரானி, அஜு வர்கீஸ், பைஜு சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தைக் கண்ணன் தாமரக்குளம் இயக்கியிருக்கிறார்.
சரி, எப்படியிருக்கிறது ‘விருந்து’?
விருந்து படைக்கிறதா கதை?
பிரபல தொழிலதிபர் ஜான் (முகேஷ்) தனது நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்குக் கஷ்டப்படுகிறார். அதனால், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் நெருக்கடி தருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நிதி ஆலோசகர் தேவநாராயணனை (அர்ஜுன்) அவர் சந்திக்கிறார்.
தேவநாராயணன் தரும் யோசனைகள் பலன் தரும் என்று ஜான் நம்பிக்கை கொள்கிறார். ஆனால், அதற்கடுத்த சில நாட்களில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகிறது. ஏரியொன்றில் அவர் காருடன் குதித்ததாகச் செய்திகள் வருகின்றன.
பின்னர் அந்த நிறுவனத்தை ஜான் மனைவி எலிசபெத் (சோனா நாயர்) நடத்தத் தொடங்குகிறார். தேவநாராயணன் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்த, நிறுவனமும் நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், ஒருநாள் எலிசபெத் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது.
அதனை நேரில் காண்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர் (கிரிஷ் நெய்யார்). எலிசபெத்தை காப்பாற்ற முடியாமல் அவர் திணற, ‘கட்சி அலுவலகம் சென்று பாலன் அண்ணனைப் பார்த்து, ஏழுமலை தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்’ என்கிறார்.
அடுத்த நாள் அந்த ஆட்டோ டிரைவரின் தங்கைக்குத் திருமணம். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற, ‘நீ பேசாமல் இரு’ என்கிறார் அவரது நண்பர் (தர்மஜன் போல்காட்டி). அடுத்த சில தினங்களில் இறந்தது எலிசபெத் என்று தகவல் தெரிய வருகிறது. கூடவே, அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரது மரணங்கள் ‘அவை கொலையா’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதையடுத்து, காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது.
இந்த நிலையில், ஜான் – எலிசபெத் மகள் பெர்லியை (நிகில் கல்ரானி) சிலர் கடத்த முயற்சிக்கின்றனர். அவர்களிடம் இருந்து பாலன் (பைஜு சந்தோஷ்) அவரை மீட்கிறார்.
அதன்பிறகு, அந்த ஆட்டோ டிரைவர் பாலனைக் காண்கிறார். அதையடுத்து, பெர்லி இருக்குமிடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். ஏழுமலை என்ற பெயரை பாலனோ, பெர்லியோ கேள்விப்பட்டதில்லை. ‘அங்கு என்ன இருக்கிறது’ என்ற கேள்விக்கு விடையறிய, அவர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில், பெர்லியைத் தேடி அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. உடனே அந்த ஆட்டோ டிரைவர் உடன் பெர்லியை ஓரிடத்திற்கு அனுப்பி வைக்கிறார் பாலன். அங்கு செல்கையில், வழியில் சிலர் அவர்களைத் தாக்க வருகின்றனர். அப்போது, அவர்களைத் தேவநாராயணன் காக்கிறார். தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
அன்றிரவு, வெளியே சென்றுவிட்டு வரும் தேவநாராயணனைக் கொல்ல முயற்சிக்கிறார் பெர்லி. அதனைக் கண்டு அவர் அதிர்கிறார்.
உண்மையில், ஜான் – எலிசபெத் மரணம் எதனால் நிகழ்ந்தது? அதற்குப் பின்னிருப்பவர் யார்? பெர்லி ஏன் தேவநாராயணனைக் கொல்ல முயற்சிக்க வேண்டும்? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.
இந்தக் கதைக்கும், ‘விருந்து’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்? அதனை கிளைமேக்ஸில் சொல்கிறார் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம். ஆனால், அந்த கிளைமேக்ஸ் ஆனது, அதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லாததாக இருக்கிறது. அது எதிர்பாராதது என்றாலும், நம்மால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதே உண்மை.
மீண்டும் அர்ஜுன்!
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்திருக்கும் அர்ஜுன், மலையாளத்தில் ‘வந்தேமாதரம்’ படத்தில் அறிமுகமானார். பிறகு ‘ஜான் & டேனியல்’, ‘மரக்கார் – அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படங்களில் நடித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவர் நடித்திருக்கும் படம் இது. தமிழில் அவரே ‘டப்பிங்’ பேசியிருக்கிறார் என்பது நம்மை எளிதாகப் படத்துடன் ஒன்ற வைக்கிறது. வழக்கம்போல, அவர் ‘ஆக்ஷன் கிங்’ ஆக இதில் வந்து போயிருக்கிறார்.
நாயகியாக வரும் நிக்கி கல்ரானிக்கு, முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளும் பாத்திரம். படம் முழுக்க, அதனைச் சரியாகச் செய்திருக்கிறார்.
நிக்கியின் பெற்றோராக இதில் முகேஷ் – சோனா நடித்திருக்கின்றனர். இரண்டொரு காட்சிகளில் வந்து போகின்றனர்.
ஆட்டோ டிரைவராக வரும் கிரிஷ் நெய்யார் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். அது, அவர் வரும் காட்சிகளைப் பார்த்தவுடன் புரிந்துபோகிறது. ஏனென்றால், இந்தக் கதையில் நிக்கி மற்றும் அர்ஜுன் தான் முதன்மை பாத்திரங்களாக இருக்கின்றன. ஆனால், கிரிஷ் நடித்த பாத்திரத்தைச் சுற்றி வருகின்றன சில காட்சிகள்.
இவர்கள் தவிர்த்து ஹரீஷ் பேரடி, பைஜு சந்தோஷ், அஜு வர்கீஸ், தர்மஜன் போல்காட்டி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
பிரதீப் மற்றும் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு, சுமார் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த சில கமர்ஷியல் மலையாளப் படங்களை நினைவூட்டுகிற விதமாக உள்ளது.
அதற்கு ஏற்றாற்போன்று, காட்சிக்கான களங்களை அமைத்திருக்கிறது சஹஸ் பாலாவின் தயாரிப்பு வடிவமைப்பு.
ரதீஷ் வேகா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவர் தந்திருக்கும் பின்னணி இசை காட்சிகளில் பரபரப்பைப் புகுத்தும்விதமாக இருக்கிறது.
வி.டி.ஸ்ரீஜித்தின் படத்தொகுப்பு, கண்களைக் கட்டிக் காட்டில் விட்டாற்போன்ற அனுபவத்தைத் தருகிறது.
இப்படத்தின் கதையைத் தினேஷ் பள்ளத் எழுதியிருக்கிறார். கிளைமேக்ஸ் திருப்பம் தான் இதில் சிறப்பு என்றபோதும், அதனை முன்னுணர்த்தும்விதமாக ஒட்டுமொத்த திரைக்கதையும் அமைக்கப்படவில்லை என்பது இக்கதையின் மிகப்பெரிய மைனஸாக உள்ளது.
இயக்குனர் கண்ணன் தாமரக்குளம், அதிர்ச்சி தரும் பின்னணியொன்றைக் கொண்டு திரையில் கதை சொல்ல விரும்பியிருக்கிறார். இதே பின்னணியில், சமீபத்தில் சில படங்கள் வெளியாகின. ஆனால், அவை பெருவாரியான மக்களைச் சென்றடைய முடியாத வகையில் ‘த்ரில்லர்’ வகைமையில் அமைந்திருந்தன. ஆனால், ஒரு வழக்கமான கமர்ஷியல்பட பாணியில் அது போன்றதொரு கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறது ‘விருந்து’. பல சுவைகளைக் கொண்டிருந்தாலும், அது ‘விருந்தாக’ இல்லை என்பதே உண்மை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார் ஸ்டாலின்
எம்.எல்.ஏ-க்கள்- பெண்கள்- தலித் இல்லை… பாஜக ஆறு பேர் குழு மீது புகார்கள்!