தேசிய அளவில் தொழில் துறையில் வேகமாக வளரும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 27ஆம் தேதி புறப்பட்டார்.
சான் பிரான்ஸிஸ்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் சுமார் ரூ.900 கோடிக்கு முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக இன்று சான் பிரான்சிஸ்கோவில் புலம் பெயர் தமிழர்களை முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.
இதற்கிடையே சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு அந்த நிறுவனங்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் வேலைவாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு பிரமிக்க வைக்கும் வகையில் வருகை அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் உற்சாகமான கூட்டாண்மைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்றாகத் தமிழகத்தை மாற்றத் தீர்மானித்துள்ளோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கலான் பார்த்துவிட்டு நள்ளிரவில் ரஞ்சித்துக்கு போன் செய்த சேரன்
ஃபார்முலா 4 கார் ரேஸ் : டிக்கெட் விலை என்ன? லைவ்-வில் எப்படி பார்ப்பது?