ADVERTISEMENT

Video: அண்ணாமலை BLA 2 ஏஜென்ட்டா? பாஜக வேட்பாளரா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் BLA 2 ஏஜென்ட்டாக வேலை பார்க்கப் போவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம் தெரிவித்துள்ள சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் சுழன்று வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவர்களின் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இரு கட்சிகளும் இன்று தங்களது வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கடும் அதிருப்தியில் உள்ளார்.

ADVERTISEMENT

கோவையில் பாஜகவுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு தற்போதைய எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் கோவையில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்த அண்ணாமலை, தான் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தலைமையிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையில், அண்மையில் கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்போர் பட்டியலிலும் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் பேட்டியளித்த வானதி சீனிவாசன், அண்ணாமலை பெயர் பட்டியலில் இருந்ததாகவும், அவர்தான் வரவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதுபோல் அடுத்தடுத்து அண்ணாமலைக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அண்ணாமலை, காளப்பட்டி பகுதியில் BLA 2 ஏஜென்ட்டாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் உள்ள அண்ணாமலையின் வீட்டில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.ஆர்.ஜி. அருண்குமார் நேற்று அவரை சந்தித்தார்.

ADVERTISEMENT

அண்ணாமலையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அருண்குமார், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு அண்ணாமலையிடம் வேண்டுகோள் வைத்தார்.

அப்போது அண்ணாமலை, “ஏப்ரல் 23-ம் தேதி காலையிலேயே வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு, BLA 2 ஏஜென்ட்டாக வேலை பார்த்து மாலை வரை இருந்து முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் செல்வேன்” என்று உறுதி அளித்துள்ளார்.பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவர் BLA 2 ஏஜென்ட்டாக இருப்பேன் எனத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share