அதிமுகவினரை தவெகவில் சேர சொல்லி பிச்சை எடுக்கிறீங்களே.. ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி!

Published On:

| By Mathi

RB Udhayakumar AIADMK TVK

அதிமுகவினரை (AIADMK) தவெகவில் (TVK) இணைய சொல்லி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) விடுத்த வேண்டுகோளுக்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் (RB Udhayakumar) பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி உள்ளதாவது: 90 சதவீத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள் தவெக-வில் இணைவதாக, பல்வேறு கட்சிகளில் தாவி 10 வருடங்களிலே பல கட்சிகளுக்குத் தாவி, இன்றைக்கு முதலீடு செய்த அமைச்சராக, அதிகார மையமாக விளங்குகிற அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் “கேட்க நாதி இல்லை” என்ற நிலையிலேதான் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

ADVERTISEMENT

அதிமுகவினரிடம் (AIADMK) பிச்சை எடுக்கிறீர்களே?

உங்கள் கட்சியின் மீதும், தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் நீங்கள் நம்பிக்கையை இழந்து விட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா? நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் வழிவந்த தொண்டர்களை “கட்சியிலே சேருங்கள்” என்று பிச்சை எடுக்கின்ற மாதிரி கூவி கூவி அழைக்கிறீர்களே…

விஜய் (VIJAY) செல்வாக்கு கேள்விக்குறியா?

இன்றைக்கு விஜயின் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறியாகி இருக்கிறதா? அல்லது அதை நிலைநிறுத்துவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே தொண்டர்களிடத்திலே பிச்சை கேட்கிறீர்களா? விசுவாசமுள்ள தொண்டர்களை விலைபேச தொடர்ந்து முயற்சித்து இருக்கிறீர்களே… இது எந்த வகையிலே நியாயம், தர்மம்?

ADVERTISEMENT

இன்றைக்கு இதற்கெல்லாம் விஜய் அவர்கள் தடை போடுவாரா? அல்லது தடையின்றி இந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அனுமதிப்பாரா? என்பதுதான் இன்றைய தொண்டர்களுடைய கேள்வியாக இருக்கின்றது.

எங்களை விலை பேசவே முடியாது

ஆகவே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாச தொண்டர்களை ஒருநாளும் விலைபேச முடியாது என்பதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கிறது; வரலாறு இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி தமிழின மக்களின் இதயதெய்வம் அம்மா அவர்கள் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சுயம்புவான இயக்கம். அதிகாரத்திற்காகவோ, பதவி சுகத்திற்காகவோ உருவாக்கப்பட்ட இயக்கம் இல்லை. அதுமட்டுமல்ல, இந்த இயக்கத்தை உருவாக்கியவர் மனிதரல்ல, மனிதப் புனிதர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

ADVERTISEMENT

புதிய அதிகார மையம் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna)

அதிகார மமதையிலே அதிமுக-வை குறைத்து மதிப்பிட்டவர்கள், அல்லது அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் தோற்றுப் போயிருக்கிறார்கள். இதுதான் கடந்த கால வரலாறு. இப்போது புதிதாக அதிமுக-வை அழிக்க தன் முழு பலத்தையும், அதிகாரத்தையும் செலவழித்து, அதிகார ஆசை காட்டி வருகின்ற புதிய அதிகார மையத்தின் அமைச்சர் அவர்கள் தொடர்ந்து இன்றைக்கு கூவி கூவி அழைப்பதைத்தான்… இந்தக் கண்றாவி காட்சியை எல்லாம் நாம் எப்படி கடந்து போவது என்று தெரியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை, வேதனையிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உழன்று போயிருக்கிறார்கள், துவண்டு போயிருக்கிறார்கள் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்.

நெஞ்சுரத்தோடு “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியிலே, இன்றைக்கு மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை, புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியாரின் தலைமையிலே… “கட்சிதான் எங்கள் உயிர், கழகம்தான் எங்கள் உயிர் மூச்சு, கழகமே கோயில், அம்மாவே தெய்வம்” என்று வாழ்ந்த தொண்டர்கள், இன்றைக்கு அம்மாவின், புரட்சித்தலைவருடைய வழித்தோன்றலாக புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியாரின் தலைமையிலே கழகப் பணியாற்றி கொண்டிருக்கின்றோம்.

அதிமுகவுக்கு ஓட்டுப் போட்ட 1 கோடி பேர்

இன்றைக்கு 2026 சட்டமன்றத் தேர்தலிலே வாக்களித்தவர்களுடைய புள்ளி விவரத்தை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தவெக-வுக்கு 1 கோடியே 72 லட்சம் பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியான திமுக அதிகார பலம், பண பலம், படை பலம் அத்தனையும் பயன்படுத்தி 1 கோடியே 19 லட்சம் பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக, அம்மா இல்லாத நிலையிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லாத நிலையிலும், அவருடைய செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக… இன்றைக்கு முள் பாதையிலே நடந்து, அதிலே வெற்றிவாகை சூடுவதற்காக தன்னை அர்ப்பணித்து புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் தலைமையிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து வாக்குகளைப் பெற்றிருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கு 19 லட்சத்து 72 ஆயிரம் பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதர கட்சிகளுக்கு 9 லட்சத்து 66 ஆயிரம் பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். நோட்டோவுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக 68.5% பேர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதில் தவெக 34.5% தான் பெற்றிருக்கிறது. புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களுடைய தலைமையிலே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு நாம் நம்பிக்கையை இழந்ததாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு, தவெக தொடர்ந்து அவர்களுக்குப் பதவி ஆசை காட்டி, விசுவாசத் தொண்டர்களை எல்லாம், அப்பாவித் தொண்டர்களை எல்லாம் விலைபேச முயற்சிக்கின்றார்கள்.

ஆகவே முழுமையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான மக்களின் நம்பிக்கை பெறாத கட்சி, இன்றைக்குத் தொண்டர்களை விலைபேசிக் கூட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றைக்குப் பலவீனப்படுத்த யார் முயற்சி செய்தாலும்… கோடிக்கணக்கான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள் உயிரோடு இருக்கின்ற வரை இந்த இயக்கம் உயிரோட்டமாக புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியாரின் தலைமையிலே மக்கள் பணியாற்றும்.

ஆதவ் அர்ஜூனாவின் பின்புலம் என்ன?

ஆகவே இன்றைக்கு விசுவாசத் தொண்டர்களை விலைபேச முயற்சிக்கின்ற… சனிக்கிழமைகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலே, விடுமுறை நாட்களிலே கட்சியில் இணைப்பு விழா தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அதிகார மையத்தின் முதலீட்டுப் போட்டி அமைச்சர் அவர்களே… உங்களுடைய அரசியல் பின்புலம் என்ன? நீங்கள் எத்தனை கட்சிகள் இந்த ஐந்து ஆண்டுகளில் மாறி வந்திருக்கிறீர்கள்? முதலிலே திராவிட முன்னேற்றக் கழகம், அதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதற்குப் பிறகு தவெக… அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே சேர முயற்சி… இன்னும் எத்தனை கட்சிகள் எல்லாம் இருக்கிறதோ, அத்தனையிலும் முயற்சி செய்துவிட்டு கடைசிப் புகலிடமாக இன்றைக்கு விஜய்யிலே அடைக்கலம் ஆகியிருக்கிற நீங்கள், இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அடைக்கலம் தருவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிற அந்தச் சித்தாந்தம் என்பது…

நீங்களே அழித்து கொள்கிறீர்கள்..

உங்களை நீங்களே யானை தன் தலையிலே மண்ணை வாரி இறைத்துக் கொள்வதைப் போல, உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுகிற செயல். ஆகவே, இறுதி எச்சரிக்கையாகச் சொல்லுகிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இரண்டு கோடி தொண்டர்களிலே சாமானியத் தொண்டனாக இறுதி எச்சரிக்கையாக… இந்த ஆள் பிடிக்கிற வேலையும், அதிகாரம் வழங்குகிறோம் என்கிற நாடகத்தையும் இனியும் நீங்கள் தொடர்வீர்கள் ஆனால், நீங்கள் கடும் பின்விளைவுகளை அரசியல் பயணத்திலே நீங்கள் சந்திக்க வேண்டும், சந்திக்க நேரிடும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் தலைமையிலே வலிமையோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியாற்றும். வெற்றி தோல்விகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருநாளும் பின்னடைவு ஏற்படுத்தியது இல்லை. வெற்றிகள் வரலாம், தோல்விகள் வரலாம். ஆனால் மக்கள் பணிக்கு அது தடை இல்லை என்பதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விசுவாசத் தொண்டர்களுடைய அந்த கொள்கை, கோட்பாடு, லட்சியம், இலக்கணம், எண்ணம், சிந்தனை, செயல்பாடு.

ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் பின்புலம் என்ன என்பது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. தெளிவு பிறந்துவிட்டால், மக்கள் தெளிந்த நீரோடையாகப் புரியும் நேரம், காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, ஆள் பிடிக்கிற வேலையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்கள் தொடர்வீர்கள் ஆனால், கடும் விளைவுகளை நீங்கள் பின்தொடர வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கோடிக்கணக்கான விசுவாசத் தொண்டர்களின் மனக்குமுறலாகப் பதிவு செய்கிறேன். இவ்வாறு ஆர்பி உதயகுமார் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share