Photoshop உள்ளிட்ட பிரபல மென்பொருட்களை உருவாக்கிய Adobe நிறுவனத்தில் மிகப்பெரிய தலைமை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளுக்கும் மேலாக CEO பதவியில் இருக்கும் சாந்தனு நாராயணுக்கு பதிலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் சக்ரவர்த்தி புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 1 முதல் அவர் President மற்றும் CEO பொறுப்பை ஏற்கிறார்.
புதிய பொறுப்பில் சாந்தனு நாராயண்
CEO பதவியிலிருந்து விலகும் சாந்தனு நாராயண், Adobe நிறுவனத்தின் Executive Chair ஆக தொடர உள்ளார். புதிய நிர்வாக மாற்றம் சுமுகமாக நடைபெற அனில் சக்ரவர்த்தியுடன் இணைந்து அவர் செயல்படுவார்.
சாந்தனு தலைமையில் Photoshop, Illustrator, Premiere Pro, InDesign போன்ற Adobe தயாரிப்புகள் உலகம் முழுவதும் படைப்பாளர்கள் பயன்படுத்தும் முக்கிய மென்பொருட்களாக வளர்ந்தன.
யார் இந்த அனில் சக்ரவர்த்தி?
2020 ஜனவரியில் Adobe நிறுவனத்தில் இணைந்த அனில் சக்ரவர்த்தி, முதலில் Digital Experience பிரிவை வழிநடத்தினார். பின்னர் உலகளாவிய விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பொறுப்புகளையும் கவனித்தார்.
Adobe-க்கு முன்பு Informatica நிறுவனத்தின் CEO-வாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். Symantec, VeriSign, McKinsey & Company நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்தியாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் B.Tech முடித்த அவர், MIT-யில் முதுகலை மற்றும் Ph.D பட்டங்களையும் பெற்றுள்ளார்.
AI போட்டி… Adobe முன் இருக்கும் சவால்
அனில் சக்ரவர்த்தி பொறுப்பேற்கும் நேரம் Adobe-க்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் Figma, Canva உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து போட்டி அதிகரித்துள்ளது.
2026-ல் Adobe பங்கு மதிப்பு சுமார் 18 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரம் AI சார்ந்த தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்ததால், கடந்த ஜூன் மாதத்தில் தனது ஆண்டு லாப கணிப்பை நிறுவனம் உயர்த்தியது. AI யுகத்தில் Adobe-வின் அடுத்தகட்ட வளர்ச்சியை வழிநடத்தும் பொறுப்பு தற்போது அனில் சக்ரவர்த்தியின் கைகளுக்கு வருகிறது.
