நிலக்கரி உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் Coal India, தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக நிலக்கரியைத் தாண்டிய துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நிலக்கரி வாயுவாக்கம், முக்கிய கனிமங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் மிகப்பெரிய முதலீடுகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரூ.50,000 கோடியில் நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்கள்
Coal India சுமார் ரூ.50,000 கோடி மதிப்பிலான மூன்று நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் உள்நாட்டிலேயே ரசாயனங்கள் மற்றும் எரிசக்தி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து, இறக்குமதியை குறைப்பதே நோக்கமாக உள்ளது.
ஒடிசாவின் லகான்பூரில் அமைக்கப்படும் Bharat Coal Gasification and Chemicals திட்டத்தில் கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. Coal India மற்றும் BHEL இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தில் ரூ.25,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 6.6 லட்சம் டன் அமோனியம் நைட்ரேட் உற்பத்தி செய்யும் திறன் இந்தத் திட்டத்துக்கு இருக்கும்.
மேற்கு வங்கம், மகாராஷ்டிராவிலும் திட்டங்கள்
மேற்கு வங்கத்தில் GAIL நிறுவனத்துடனும், மகாராஷ்டிராவில் BPCL நிறுவனத்துடனும் மேலும் இரண்டு நிலக்கரி வாயுவாக்கத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை தற்போது விரிவான திட்ட அறிக்கை மற்றும் டெண்டர் பணிகளில் உள்ளன.
இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், ரசாயனங்கள் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில் இந்தியாவின் சார்பை குறைக்க உதவும் என Coal India தெரிவித்துள்ளது.
லித்தியம் உள்ளிட்ட முக்கிய கனிமங்களில் கவனம்
நிலக்கரியைத் தாண்டி முக்கிய கனிமத் துறையிலும் Coal India கால் பதித்துள்ளது. கிராஃபைட், அரிய மண் தனிமங்கள் உள்ளிட்ட முக்கிய கனிமங்களுக்கான ஐந்து சொத்துகளை நிறுவனம் பெற்றுள்ளது.
சிலி, அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறது. குறிப்பாக சிலியில் லித்தியம் தொடர்பான சொத்தில் பங்குகளை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
2030-க்குள் 9.5 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் Coal India-வின் எதிர்கால திட்டங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது. 2030-க்குள் 9.5 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய சூரிய மின் திட்டங்களுடன் பேட்டரி சேமிப்பு வசதிகளையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிலக்கரி நிறுவனமாக மட்டுமின்றி, எரிசக்தி மற்றும் முக்கிய கனிமத் துறைகளிலும் தனது தடத்தை விரிவுபடுத்த Coal India தயாராகி வருகிறது.
