டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் இன்று (ஏப்ரல் 28) பத்ம பூஷன் விருதைப் பெற்றார் நடிகர் அஜித் குமார். actor ajithkumar received padma award from murmu
தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் ஆனவர் அஜித் குமார். அதன்பின்னர் ’அமராவதி’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து காதல்கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற திரைப்படங்களின் வழியே ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த அஜித், இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்கிறார்.
இதற்கிடையே கார் பந்தயத்திலும் அதிக ஆர்வமுடைய அவர், ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி, சர்வதேச கார் பந்தய போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில் கலைத்துறையில் அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அவருக்கு ’பத்ம பூஷன்’ விருது அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
அதில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட அஜித் குமார், குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷன் விருதை பெற்றார்.
விழா அரங்கில் இருந்த பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தி, மாஸாக நடந்து சென்று அஜித் விருது வாங்கிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து அவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகை ஷோபனா, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 13 பேர் பத்ம விருதை பெற்றனர்.