நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் முதல் முறையாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 8) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
காலை 10 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று நெல்லை வந்தார்.
இந்நிலையில் விஜய் பிரச்சாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்கைகொண்டான், ராஜகோபாலபுரம், கே.டி.சி. நகர் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நெல்லையில் விஜய் பிரச்சாரம் செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படும். விஜய் பிரச்சாரத்திற்கு கடும் விதிமுறைகள் விதிக்கப்படுகிறது. சென்னையைத் தவிர மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்ய பெரிய அளவில் பிரச்சனை இல்லை” என்றார்.
மேலும் அவர், “எனது தொகுதியான கோபியில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசை. அவர்களின் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்” என்று தெரிவித்தார்.
