கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) பாதிப்பால் அவதிப்படுபவர்கள் நெல்லிக்காய், ப்ளாக் காபி உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதயம், சிறுநீரகம் போலவே கல்லீரலும் மிக முக்கியமான உறுப்பாகும். கல்லீரல் 24 மணி நேரமும் செயல்பட்டு உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், உணவை செரிமானமாக்கவும், கொழுப்பு மற்றும் சர்க்கரையை ஒழுங்குப்படுத்தவும் உதவுகிறது. ஆனாலும் மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவை கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன.
கொழுப்பு கல்லீரல் என்பது ஒரு தீவிரமான நோய் இல்லை என்றாலும், உடனடி கவனம் தராவிட்டால் அது கல்லீரல் செயலிழப்புக்குக் கூட வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரலை கிரேடு 1 (லேசானது), கிரேடு 2 (மிதமானது), கிரேடு 3 (தீவிரமானது) என 3 வகைகளாக பிரிக்கலாம். மேலும் ஆல்ஹகால் கொழுப்புக் கல்லீரல், ஆல்ஹகால் அல்லாத கொழுப்பு கல்லீரல் எனவும் வகைப்படுத்தப்படுகிறது. கொழுப்பு கல்லீரலுக்கான மிகச் சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும், இங்கு பட்டியலிடப்பட்டுள்ள உணவுகளை உடனடியாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை அளிக்கும்.
பிளாக் காஃபி
பிளாக் காஃபியை (Black Coffee) மிதமான அளவில் அருந்துவது கல்லீரலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. பிளாக் காஃபியில் உள்ள காஃபின், கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவிபுரிகிறது. பிளாக் காபி கல்லீரல் அழற்சியைக் குறைப்பதற்கும் உதவக்கூடும் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதே சமயம் பிளாக் காஃபியில் கூடுதலாக சர்க்கரை அல்லது கிரீம் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
புளூபெர்ரி
புளூபெர்ரி (Blueberry) என்பது ஒரு சிறிய பழமாக இருந்தாலும் அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புளூபெர்ரியில் ஆந்தோசயனின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவக்கூடும். புளூபெர்ரிகளைத் தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரல் செல்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவக்கூடும்.
நெல்லிக்காய் நன்மைகள்
நெல்லிக்காயில் வைட்டமின் சி ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த முடியும். தினமும் 1 – 2 நெல்லிக்காய்களை உட்கொள்வது அல்லது நெல்லிக்காய் சாறு அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அவகேடா
அவகேடா (Avocado) பழங்களில் குளுடாதையோன் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கல்லீரல் செல்களைச் சரிசெய்து புதுப்பிக்க உதவுகிறது. கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. அவகேடா பழங்களை உங்கள் உணவில் சாலடாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ சேர்த்துக்கொள்ளலாம்.
மஞ்சள்
மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. மஞ்சளுடன் மிளகுடன் சேர்த்து உட்கொள்ளும்போது மஞ்சளில் உள்ள குர்குமின் உடலால் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. இந்தக் கலவையானது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதுவும் ரொம்ப முக்கியம்
கொழுப்பு கல்லீரல் சரியாக மேற்சொன்ன உணவுகளை மட்டும் உட்கொள்வது போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொழுப்பு கல்லீரலைத் தடுக்க, வழக்கமான உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்துதல், போதுமான தூக்கம் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைத்தல் ஆகியவையும் அவசியமானவை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சமச்சீரான உணவையும் பின்பற்றுவது, நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்கவும், நோயிலிருந்து விரைவாக மீளவும் உதவும்.
