மத்திய அரசின் 22ஆவது சட்ட ஆணையம் நவம்பர் 7 ஆம் தேதி இரவு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவால் அமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தில் அவரைத் தவிர ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மா. கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சட்ட ஆணையம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு. நாட்டில் அவ்வப்போது செய்ய வேண்டிய சட்டத் திருத்தங்கள் பற்றி அரசுக்கு ஆலோசனையும் ஆய்வுகளும் செய்து பரிந்துரைக்க வேண்டிய மிக முக்கியமான அமைப்பு சட்ட ஆணையம்.
நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன் மத்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்படும்.
அதேபோல உச்ச நீதிமன்றம் அவ்வப்போது மத்திய அரசுக்கு பிறப்பிக்கும் சட்ட ரீதியான உத்தரவுகளை நிறைவேற்றுவது குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் ஆய்வு செய்து சட்ட ஆணையம் பரிந்துரைக்கும்.
இப்பேற்பட்ட சக்தி கொண்ட மத்திய சட்ட ஆணையம் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து நியமிக்கப்படாமலேயே இருந்தது. சட்ட ஆணையம் இல்லாமலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக பல சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த 21 ஆவது சட்ட ஆணையத்தின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பிஎஸ் சௌஹான் ஓய்வு பெற்ற பின் , ஆகஸ்டு 21 2018 க்குப் பிறகு 22 ஆவது சட்ட ஆணையம் பற்றிய அறிவிக்கை 2020 இல் வெளியிடப்பட்டது. ஆனால் புதிய சட்ட ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிடவே இல்லை.
இந்த நிலையில் முழுதாய் நான்கு ஆண்டுகள் கழித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நவம்பர் 7 ஆம் தேதி இரவு 22 ஆவது சட்ட ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
கர்நாடாக முன்னாள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தியை தலைவராகக் கொண்ட இந்த சட்ட ஆணையத்தில் முன்னாள் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சங்கரன், பேராசிரியர் ஆனந்த பாலிவால், பேராசிரியர் ராகா ஆர்யா, மூத்த வழக்கறிஞர் எம்.கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சட்ட கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பின் ஜூலை 3, 2022 அன்று ஓய்வு பெற்றார். கர்நாடகாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வுக்கு தலைமை தாங்கியவர் இவர்தான்.
22 ஆவது இந்திய சட்ட ஆணையத்தில் தமிழகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் மா.கருணாநிதி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் மாரியப்பன் மகன் கருணாநிதி. 1995-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். பின்னர், கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்து வருகிறார்.
மதுரையில் மூத்த வழக்கறிஞராகத் திகழும் கருணாநிதி, தமிழ்நாடு அரசின் க்யூ பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவின் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தற்போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
இவர், மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பல சட்டக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கும் மா.கருணாநிதி, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி, தமிழ்நாடு காவல்துறை அகாடமி மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களிலும் பல்வேறு தலைப்புகளில் சட்ட விரிவுரைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் வழக்கறிஞர் வட்டாரங்களில்.
தமிழகத்தில் இருந்து இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் மா. கருணாநிதியிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.
“சட்டம் என்பதும் அறிவியல் போலத்தான். ஒவ்வொரு கால கட்டத்துக்கும் ஏற்ற மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் சட்டங்களில் ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுக்காக அமைக்கப்பட்டதுதான் சட்ட ஆணையம். அந்தந்த கால கட்டங்களுக்கேற்ப நாட்டுக்கு தேவைப்படும் சட்டங்கள் பற்றிய ஆய்வு செய்து பரிந்துரைகளை அரசுக்கு செய்வதுதான் இந்த ஆணையத்தின் பணி. அதை நாங்கள் செய்வோம்” என்றார் மா. கருணாநிதி.
-ஆரா