பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. 103 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் இது கொண்டுவரப்பட்டது.
10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், தனிநபர் என உச்ச நீதிமன்றத்தில் 30 வழக்குகள் தொடரப்பட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று(நவம்பர் 7) தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.
ஆனால் நீதிபதி ரவீந்திர பட் மட்டும் இட ஒதுக்கீடு செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
நமது அரசியலமைப்புச் சட்டம் யாரும் விலக்கப்படுவதை அனுமதிக்காது, இந்தத் திருத்தம் சமூக நீதியின் கட்டமைப்பையும், அதன் அடிப்படைக் கட்டமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பெறுபவர்கள் எப்படியாவது சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்பும்படி இந்தத் திருத்தம் நம்மை ஏமாற்றுகிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தில் உள்ள ஏழைகளை ஒதுக்கி வைப்பது தவறானது. உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவக் குறியீட்டை அழிக்கும் சமூக தோற்றம் என்று நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கலை.ரா
உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் தீர்ப்பு!