உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் தீர்ப்பு!

Published On:

| By Kalai

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.

ஆனால் இந்த இட ஒதுக்கீட்டு முறை, அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில்  இல்லை.

இதனால் பிற சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், இட ஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை இந்த சட்ட திருத்தம் மீறுகிறது என,

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் 10% இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து,

தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பேலா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.

தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், திமுக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

உயர் சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் கடந்த செப் 13 ஆம் தேதி முதல் 7 நாட்கள் இறுதி  விசாரணை நடைபெற்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கபட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று(நவம்பர் 7) தீர்ப்பு வெளியானது. 4 விதமான தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டன. முதலில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பை வாசித்தார்.

10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என்று அவர் தீர்ப்பில் கூறியுள்ளார். 50 சதவீத உச்ச வரம்பு என்பதை 10 சதவீத இட ஒதுக்கீடு தாண்டியதிலும் விதிமீறல் இல்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நீதிபதிகள் பேலா த்ரிவேதி, பர்திவாலா ஆகியோர் நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் தீர்ப்பை போலவே தீர்ப்பு கூறியுள்ளனர்.

கலை.ரா

“தமிழிசை பூச்சாண்டி இங்கு எடுபடாது” – முரசொலி பதில்

கமலுக்கு பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!