2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் புது வரவாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் குதித்துள்ளது.
இந்தநிலையில், விஜய் தங்களது கூட்டணியில் இணைவார் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் சீனியர் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமித்ஷா, “தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகி விடும்” என்று தெரிவித்திருந்தார்
அதாவது, விஜய் தங்களது கூட்டணியில் இணைவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையிலேயே அமித்ஷாவின் இந்த பேச்சு அமைந்தது.
இதுதொடர்பாக தவெக செய்தித் தொடர்பாளர் எஸ்.வீர விக்னேஷ்வரன் அளித்த பேட்டியில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தவெக தரப்பில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.
ஏற்கெனவே கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கருத்தியல் எதிரி என்றும் தெளிவாக தெரிவித்தார். பாஜக பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு மதவெறி சக்தி. எனவே தவெக ஒருபோதும் பாஜகவுடன் இணையாது” என விளக்கம் அளித்துள்ளார்.