2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற்றுவிட வேண்டும் என அதன் கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடியை தந்து வருகின்றன. 2026 Assembly Election: Alliance Parties Likely to Demand More Seats from DMK
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக், தவாக. கொமதேக, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வார்டு ப்ளாக் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 2026 தேர்தலிலும் இதே கூட்டணிதான் நீடிக்கும் என்பதுதான் தற்போது வரையிலான நிலை.
கலைஞர் கருணாநிதி காலத்தில் திமுக அணியில், கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான இடங்கள் அள்ளித் தரப்பட்டன; ஆனால் ஸ்டாலின் காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என குமுறுகின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
1996-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பிளவை சந்தித்து ஜிகே மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உதயமானது. தமாகா, திமுகவுடன் கூட்டணி அமைத்தது. திமுக கூட்டணியில் தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்:
திமுக- 176
தமாகா- 41
சிபிஐ- 13
பார்வார்டு பிளாக்-1
இந்திய தேசிய லீக்-1 (உதயசூரியன் சின்னம்)
1996-ல் திமுக கூட்டணி வென்ற இடங்கள் (மொத்தம் 221)
திமுக- 173
தமாகா- 39
சிபிஐ- 8
பார்வார்டு பிளாக்-1
2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்:
திமுக- 167
பாஜக- 21
புதிய தமிழகம் – 10
மக்கள் தமிழ் தேசம் கட்சி- 6
புதிய நீதி கட்சி-5
எம்ஜிஆர் அண்ணா திமுக- 3
எம்ஜிஆர் கழகம்-2
உழவர் உழைப்பாளர் கட்சி-1
குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ்-1
தமிழர் பூமி-1
விசிக-8 (உதயசூரியன் சின்னம்)
தமிழக முஸ்லிம் ஐக்கிய ஜமாத்- 3 (உதயசூரியன் சின்னம்)
ப.சிதம்பரத்தின் தமாக ஜனநாயகப் பேரவை-2 (உதயசூரியன் சின்னம்)
தீரனின் தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி-1 (உதயசூரியன் சின்னம்)
தமிழ்நாடு முத்தரையர் சங்கம்-1 (உதயசூரியன் சின்னம்)
கொங்குநாடு மக்கள் கட்சி-1 (உதயசூரியன் சின்னம்)
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்- 1 (உதயசூரியன் சின்னம்)
2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வென்ற இடங்கள்: (மொத்தம் 37)
திமுக- 31
பாஜக-4
எம்ஜிஆர் அண்ணா திமுக-2
2006 சட்டமன்ற தேர்தலில் திமுக தொகுதி பங்கீடு
திமுக-128
காங்கிரஸ்-48
பாமக-31
சிபிஎம்-13
சிபிஐ-10
முஸ்லிம் லீக்-2 (உதயசூரியன் சின்னம்)
புரட்சி பாரதம் கட்சி-1 (உதயசூரியன் சின்னம்)
பார்வார்டு பிளாக்-1 (உதயசூரியன் சின்னம்)
2006 தேர்தலில் திமுக கூட்டணி வென்ற இடங்கள் (மொத்தம் 163)
திமுக- 96
காங்கிரஸ் -34
பாமக- 18
சிபிஎம்-9
சிபிஐ-6
2011 தேர்தலில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்
திமுக -119
காங்கிரஸ்- 63
பாமக-30
விசிக-10
கொமுக-7
முஸ்லிம் லீக்- 3 (உதயசூரியன் சின்னம்)
மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1 (உதயசூரியன் சின்னம்)
பெருந்தலைவர் மக்கள் கட்சி-1(உதயசூரியன் சின்னம்)
2011 தேர்தலில் திமுக கூட்டணி வென்ற இடங்கள் (மொத்தம் 31)
திமுக-23
காங்கிரஸ்-5
பாமக-3

2016 தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
திமுக-176
காங்கிரஸ்-41
முஸ்லிம் லீக்-5
புதிய தமிழகம்-4
மமக-5
பெருந்தலைவர் மக்கள் கட்சி-1 (உதயசூரியன் சின்னம்)
தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி -1 (உதயசூரியன் சின்னம்)
சமூக சமத்துவ மக்கள் படை-1 (உதயசூரியன் சின்னம்)
2016-ல் திமுக கூட்டணி வென்ற இடங்கள் (மொத்தம் 98)
திமுக- 89
காங்கிரஸ்- 8
முஸ்லிம் லீக்-1
2018 ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞர் கருணாநிதி மறைந்தார். இதன் பின்னர் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு
திமுக- 173
காங்கிரஸ்-25
சிபிஐ- 6
சிபிஎம்-6
விசிக-6
மதிமுக- 6 (உதயசூரியன் சின்னம்)
முஸ்லிம் லீக்-3
கொமதேக-3 (உதயசூரியன் சின்னம்)
மமக-2 (உதயசூரியன்)
பார்வார்டு பிளாக்-1 (உதயசூரியன் சின்னம்)
தவாக-1 (உதயசூரியன் சின்னம்)
மக்கள் விடுதலை கட்சி-1 (உதயசூரியன் சின்னம்)
ஆதித் தமிழர் பேரவை-1 (உதயசூரியன் சின்னம்)
2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வென்ற இடங்கள் (மொத்தம் 159)
திமுக-133
காங்கிரஸ்-18
விசிக-4
சிபிஐ-2
சிபிஎம்-2
2021 சட்டமன்றத் தேர்தலில் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறி, 2024 மக்களவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை திமுகவிடம் கூட்டணி கட்சிகள் கேட்டுப் பார்த்தன.
காங்கிரஸ்- 9
சிபிஐ-2
சிபிஎம்-2
விசிக-2
மதிமுக-1
முஸ்லிம் லீக்-1
கொமதேக-1
என இடங்களை வழங்கியது திமுக. இந்த இடங்கள், குறைவானவை என ஆதங்கப்பட்டன கூட்டணிக் கட்சிகள்.
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதலான இடங்களை திமுக பெற்றாக வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் எண்ணுகின்றன.
மேலும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பார்முலாவையே 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைப்பார் அல்லது கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் மேலும் குறைக்கப்பட்டு திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் பார்முலாவை முன்வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதனால்தான் இப்போதே திமுக கூட்டணிக் கட்சிகள், கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என பேச தொடங்கி இருக்கின்றன.
காங்கிரஸ் நிர்வாகிகள், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகமான தொகுதிகளை திமுகவிடம் கேட்போம் என்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான், கூடுதல் தொகுதி விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், திமுகவிடம் 2026 சட்டமன்ற தேர்தலுக்குக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்ற குரல்கள் வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, கடந்த மே 16-ந் தேதி திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நேரங்களில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியிடம் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பது அரசியல் கட்சிகளுக்கான உரிமை என்று கூறியிருந்தார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் மீண்டும் வழங்கப்படாத நிலையில், திமுக நமக்கு ராஜ்யசபா சீட் தரவில்லை.. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளைக் கேட்போம்.. அப்படி கொடுக்காத நிலையில் சரியான ஆலோசனைகளை நடத்தி முடிவு எடுப்போம் என அக்கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துரை வைகோ பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதேபோல சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஜூன் 10-ந் தேதி அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும் என கூறியிருந்தார்.

தீக்கதிர் நாளிதழில் பெ.சண்முகத்தின் இந்த பேட்டி வெளியான அதே நாளில்- ஜூன் 10-ந் தேதி, அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெற முயற்சிப்பதுதான்
வழக்கமானது. வாடிக்கையானது. அவர்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள்; இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம் என கூறினார்.
இதன் தொடர்ச்சியாக ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் பேசிய பெ.சண்முகம், திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்போம் என்பதில் எந்த மாறுதலும் இல்லை; கூட்டணி மாறுவதற்கான சூழ்நிலைக்கு எங்களை திமுக தள்ளாது; கடந்த தேர்தலில் எங்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவும் இல்லை; தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் வெல்லவும் முடியாது; தற்போதைய கூட்டணி சிதறிவிட்டால் திமுக ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாகிவிடும்; அதனால் கூட்டணி மாறும் சூழ்நிலையை திமுக உருவாக்காது என கூறியுள்ளார்.
கடந்த தேர்தல்களைவிட அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பும் திமுக தலைமை, கூட்டணிக் கட்சிகளின் இந்த நெருக்கடிகளை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.