சென்னை உயர்நீதிமன்றத்தின் 5வது மூத்த நீதிபதி வி.ராமசுப்ரமணியம். தசாவதாரம் திரைப்பட வழக்கு,அரசு ஓட்டுநர்கள் சம்பள விகித வழக்கு உள்ளிட்டவற்றில் துணிச்சலான தீர்ப்புகளை அளித்தவர். இவர் பணிமாறுதல் கேட்டுப் பெற்று ஆந்திர-தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் உயர்நீதிமன்றத்துக்குச்செல்கிறார்.
இதற்கான பணி மாறுதல் நியமன ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆந்திர – தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியாக அவர் பொறுப்பேற்க இருக்கிறார். ஆந்திராவிற்கான தலைநகர் அமராவதியில் உருவாக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் ஆந்திராவிற்கு என்று தனியான நீதிமன்றம் அங்கு அமைந்தால் ராமசுப்ரமணியம் அதன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவுகின்ற குழு அரசியல், சாதி-இன அரசியல் போன்ற காரணங்களால் தான் ராமசுப்ரமணியம் விருப்ப பணிமாறுதல் பெற்றுச் செல்வதாக வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
