தெறி: விமர்சனம்

By Balaji

|

Published on 14 Apr 2016, 12:00 AM

காதலன் விஜய், குடும்பஸ்தன் விஜய், நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய்… இந்த மூன்று கதாபாத்திரங்களையும் கலந்துகட்டி செம மாஸ் மசாலாவாக தெறிக்கவிடும் படம் ‘தெறி’.

தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தன் மகள்தான் உலகம் என கேரளாவில் வாழ்ந்துவருகிறார் ஜோசப் (குடும்பஸ்தன் விஜய்). அங்கே தற்செயலாக ஒரு ரவுடி கும்பலுடன் பிரச்னை ஏற்படுகிறது. மகள் நிவேதாவை (நடிகை மீனாவின் மகள் நைனிகா) அவர்கள் சீண்ட, சீண்டியவர்களை புரட்டியெடுக்கிறார் விஜய். அங்கிருந்து காட்சிகள் பின்னோக்கிச் சென்னை, அடையாறு செல்கின்றன. நேர்மை தவறாத போலீஸ் டி.சி. விஜயகுமாராக விஜய், தெருவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளிடம் அன்புகாட்டுகிறார். அவர்களுக்காக ரவுடிகளைப் பொளந்து கட்டுகிறார். டாக்டர் மித்ராவை (சமந்தா) சந்திக்கிறார். சின்ன மோதலில் காதல் பிறக்கிறது. காதல் கல்யாணத்தில் முடிந்து அழகான குழந்தையும் பிறந்து சந்தோஷமாக போகும் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறார் மந்திரி வானமாமலை (மகேந்திரன்). விஜய்யின் குடும்பத்தையே சின்னப்பின்னமாக்குகிறார்; சிதைக்கிறார்.

ADVERTISEMENT

மனைவிக்குச் செய்த சத்தியத்துக்காக அவர்களிடமிருந்து தப்பித்து , குழந்தையைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வளர்க்கிறார் ஜோசப் விஜய். ஐந்து வருடங்களுக்கு பிறகு விஜய்யை கண்டுபிடிக்கும் மகேந்திரன் அவரை கொல்லத் துடிக்க, தப்பிக்கும் விஜய் மந்திரி மகேந்திரன் டீம் ஆட்கள் ஒவ்வொருவராக முடித்துகட்டிவிட்டு இறுதியில் மந்திரியுடன் நடக்கும் ஆடுபுலி ஆட்ட மோதல்தான் மொத்த ‘தெறி’யின் கதையும், திரைக்கதையும்.

‘புலி’யில் துவண்டு இருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்தப்படம் வயிறுமுட்ட சாப்பிட்ட வைக்கும் புல் மீல்ஸ். படம் முழுக்க விஜய் விரவி நிரம்புகிறார். தோளைச் சாய்த்துக்கொண்டு உடலை சிலுப்பும் ஸ்டைல், மகேந்திரனை மென்மையாக மிரட்டும் ஹீரோயிசம், பார்வையாலேயே ரவுடிகளை அலற வைப்பதும், வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி ஐடி பெண்ணுக்காக அழுவதும், அந்த வெறியோடு வில்லன்களை துவம்சம் செய்வதும் என தன் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறார் விஜய்.

ADVERTISEMENT

சமந்தாவிடம் காதலைச் சொல்வதும், துறுதுறுவென குறும்புச் செய்வதும் , கொஞ்சுவதும் என காதலுக்கு மரியாதை செய்யும் கியூட் விஜய். நீண்டநாட்களுக்குப் பிறகு கல்லூரி பெண்கள் விரும்பும் விஜய். விஜயின் காதல் மனைவியாக சமந்தா. கொஞ்ச நேரம் வந்தாலும் படத்தின் மைய புள்ளியே இவரை சுற்றி நடக்கும் கதையும், திரைக்கதையும்தான். செல்ல சிணுங்கல்களும், பக்குவப்பட்ட காதலியாகவும், நல்ல மருமகளாகவும் ஸ்வீட் சமந்தா. அம்மாவாக ராதிகா. குறும்பு செய்வதில் விஜய்க்கு பக்கா போட்டி. ‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பாப்பா’ என ராதிகாவை விஜய் கொஞ்சுவதும் பதிலுக்கு ராதிகா அதட்டலாக கொஞ்சுவதும் என குடும்பங்கள் விரும்பும் அம்மா – மகன். விஜய் மகள் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் மீனாவின் மகள் நைனிகா. ‘நீ மொக்க பேபி’ என்று விஜய்யைக் கலாய்ப்பது, ‘நீ தெறி பேபி’ என வில்லன்களை வெளுத்துகட்ட சொல்வதும் , கண்ணை சிமிட்டிக்கொண்டு புன்னகைப்பதுமென அழகு கவிதை நைனிகா. படம் முழுக்க விஜய்யோடு வளம் வருகிறார் மொட்டை ராஜேந்திரன். ‘எங்கப்பா இம்புட்டு நடிப்ப வச்சுருந்த? செண்டிமெண்ட் காட்சியில தூள் கெளப்பிட்டீயே’ என அவர் குரல், உடல் மொழியிலேயே பாராட்ட தோன்றுகிறது. காட்சிக்கேற்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா. ஜீ.வி பிரகாஷ் இசையில் 50-வது படம் . பீட்ஸ், மெலடி என பாடல்கள் ஹிட். எல்லோரையும் பாராட்டினாலும் இவரைப் பற்றி எழுதாமல் விமர்சனக் கட்டுரையும் முழுமைப் பெறாது. படமும் முழுமை பெறாது. அவர் மகேந்திரன். மெல்ல சிரித்தபடியே வில்லத்தனம் காட்டுவதும், தனது பார்வை, பாவனைகளிலேயே மிரட்டுவதும் என இயக்குனர் மகேந்திரனை, நடிகர் மகேந்திரன் என்று பெருமையோடு அழைக்கலாம். தனது அடையாளத்தையும் தொலைக்காமல், மாஸ் ஹீரோவின் அடையாளத்தையும் சிதைக்காமல் படம் கொடுப்பது என்பது முள் மீது நடப்பது போன்றுதான். ஆனால், அதை தனது இரண்டாவது படத்திலேயே லாவகமாக கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் அட்லி. நுண்ணிய உணர்வுகளை அழகாக கையாளும் இவரின் திரைவண்ணம் இதிலும் மிளிர்கிறது.

சென்டிமென்ட், காதல், எமோசன், வன்மம் என கலந்து கட்டிய மசாலாவாக இருந்தாலும் காட்சிகளும், திரைக்கதையும் சத்ரியன், பாட்ஷா, கஜினி படங்களை நினைவூட்டுகின்றன. சிறுச்சேரியில் கொல்லப்பட்ட ஐடி பெண், மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்தது போன்ற சமகால உண்மைகளை புனைவுச் சேர்த்து காட்சிகளை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். அட்லி படமாக விஜய்யை புது கலரில் காட்டியது முதல் பாதி என்றால், இரண்டாம் பாதி வழக்கமான விஜய் படம்.

ADVERTISEMENT

முதல்பாதியில் இருந்த ட்விஸ்ட் பிடித்து, வேகமெடுக்க வேண்டிய இரண்டாம் பாதி யூகிக்க கூடிய காட்சிகளால் வேகத்தை இழக்கிறது. மேலும் வில்லன்கள் என்றால் கறுத்த மனிதர்களாக இருப்பார்கள்; வானமாமலை, கரிகாலன் என்று தனித்தமிழ் பெயர் கொண்டிருப்பார்கள்; இவர்கள் பெண்களை வன்புணர்வு செய்வார்கள்; ஊழல் செய்வார்கள். அதுவே விஜயகுமார், தர்மேஷ்வர், ராமகிருஷ்ணன், மித்ரா, நிவேதா என்ற பெயர் கொண்ட உயர் வர்க்கத்தினரோ நல்லவர்கள்; உண்மைக்காகக் குரல் கொடுப்பார்கள் என்று எத்தனை படத்தில்தான் வெளிப்படுத்துவீர்கள்? ஆதிக்க சாதிய வர்க்கத்தினர் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும், நாட்டை சீரழிப்பது எப்போதும் பிற இடைநிலை, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என்று வெளிப்படுத்தும் இதுபோன்ற காட்சிகளுக்குப் பின் ஒரு மோசமான அரசியல் இருக்கின்றது என்பதை ரசிகர்கள் உணரும் காலத்தில்… இதுபோன்று தமிழ் விரோத அரசியல் வெளிப்படும் படங்கள் குறையும் என நம்பலாம்.

மற்றபடி குழந்தைகள் மட்டுமல்ல; குடும்பங்களும் ரசிக்கும்விதமாக ‘தெறி’யைப் பட்டிதொட்டியெங்கும் தெறிக்கவிட்டிருக்கிறது, அட்லி டீம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel