பட்டியல் உருவான பின்னணி…
‘திமுக வேட்பாளர் பட்டியலை, நாளை காலை 11.00 மணிக்கு கருணாநிதி வெளியிடுகிறார்!’ – இப்படி ஒரு தகவலை வாட்ஸ் அப் அனுப்பியிருந்தது.
‘நிஜம்தானா?’ ஆர்வமாக வந்து கேட்டது ட்விட்டர். ஆனால், வாட்ஸ் அப் ஆஃப் லைனில் இருந்தது.சற்றுநேரத்துக்குப் பிறகு, ஆன் லைனில் வந்து பதிலை டைப்செய்ய ஆரம்பித்தது.
‘‘திமுக-வின் தேர்தல் அறிக்கை இரண்டு நாட்களுக்குமுன்பு வந்தது. ஏப்ரல் 14ம் தேதி அஷ்டமி வருவதால் 15ம் தேதி வெளியிடலாம் என்பது ஸ்டாலின் திட்டம். இதை அவர், கருணாநிதியிடமும் சொல்லியிருக்கிறார். ‘அவங்க வேட்பாளரை அறிவிச்சுட்டு, பிரச்சாரத்தையே ஆரம்பிச்சுட்டாங்க. நாம இன்னும் வேட்பாளரையே அறிவிக்காம இருக்கோம். நாளைக்கே அறிவிச்சுடலாம். இனியும் தள்ளிப்போட வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான் ஸ்டாலின், பட்டியலை ஃபைனல் செய்திருக்கிறார். அந்தப் பட்டியலுடன் மறுபடியும் கருணாநிதியைச் சந்தித்திருக்கிறார். பட்டியலை வாங்கிப் பார்த்த கருணாநிதி, அதில் சில கரெக்ஷன் சொல்லியிருக்கிறார். அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஸ்டாலின் பட்டியலில் திருத்தம் போட்டாராம். அப்படித்தான் இன்று ஃபைனல் லிஸ்ட் ரெடியாகி இருக்கிறது!” என்று, அந்தச் செய்தியை செண்ட் கொடுக்க… படித்துப்பார்த்த ஃபேஸ்புக் அதை அப்படியே ஷேர் செய்தது.
தொடர்ந்து, ஸ்டேட்டஸ் ஒன்றையும் தட்டியது ஃபேஸ்புக். ‘‘திமுக நேர்காணல் நடத்துவதற்குமுன்பே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடம் இருந்தும், தொகுதிக்கு 3 பேர் லிஸ்ட்டை கேட்டு வாங்கியிருக்கிறார் ஸ்டாலின். ‘நீங்க 3 பேரைச் சொல்லுங்க. அதுல ஒருத்தரை நாங்க முடிவு பண்ணிக்கிறோம்’ என்று சொன்னாராம் ஸ்டாலின். அதன்படியே மாவட்டச் செயலாளர்களும் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். நேர்காணலுக்கு வந்தபோது எல்லோரிடமும் தவறாமல் கேட்கப்பட்ட கேள்வி, ‘எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்பதுதான். அதில், ரூ.5 கோடிக்குமேல் செலவு செய்யமுடியும் என்று சொன்னவர்களின் பட்டியலை மட்டும் முதலில் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் பின்னணி என்ன? அவர்மீது எதுவும் புகார் இருக்கிறதா? என்பதையெல்லாம் சபரீசன் டீம் சல்லடை போட்டு விசாரித்து ஒரு லிஸ்ட் எடுத்தது.
கடந்த 2011 தேர்தலில், 23 இடங்களில் திமுக ஜெயித்திருக்கிறது. சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 23 பேருக்கும் சீட் கொடுத்துவிட ஸ்டாலின் திட்டமிட்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருப்பவர் கே.சி.பழனிசாமி. இந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஜோதிமணி ஆர்வம் காட்டினார். ஆர்வமிகுதியில் சில இடங்களில் பிரச்சாரமும் செய்தார். ஆனால், திமுக-வில் சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு அதே தொகுதியை ஒதுக்க முடிவுசெய்திருப்பதால், காங்கிரஸுக்கு அரவக்குறிச்சி இல்லை என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். இதனால், ஜோதிமணி தற்போது ‘சுயேட்சையாகப் போட்டியிடுவேன்’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது தனிக் கதை. அதேபோல், கடந்த தேர்தலில் 5 ஆயிரம் ஓட்டுக்குள் தோல்வியடைந்த வேட்பாளர்கள், 10 ஆயிரம் ஓட்டுக்குள் தோல்வியடைந்தவர்கள் லிஸ்ட்டை எடுத்திருக்கிறார்கள். இவர்களில் சிலர்மீது சில புகார்கள் இருப்பதால், அவர்களைத்தவிர மற்ற அனைவருக்கும் வாய்ப்பு உறுதியாகியிருக்கிறது. சில மாவட்டச் செயலாளர்களுக்கு சீட் இல்லை என்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஏதாவது சர்ச்சையில் சிக்கியவர்கள். அவர்கள்மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கிறதாம். அதனால் அவர்களுக்கு சீட் கொடுத்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்று சொல்லியிருக்கிறதாம் சபரீசன் டீம். அதனால் அவர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்களாம்.’’ தகவலை போஸ்ட் செய்தது.
‘‘மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த லிஸ்ட் எதுவும் ஓகே ஆகவில்லையா?” இது, வாட்ஸ்அப் கேட்ட கேள்வி.
பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக போஸ்ட் செய்தது ஃபேஸ்புக்.
‘‘மெஜாரிட்டி லிஸ்ட், மாவட்டச் செயலாளர்கள் கொடுத்ததுதான். அதுவும், மூன்றுபேரில் முதல் நபராக யாரைக் குறிப்பிட்டிருந்தார்களோ அவர்களை ஓகே செய்துவிட்டார்களாம். உதாரணத்துக்கு, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மாவட்டச் செயலாளர் கொடுத்த பட்டியலில் முதலில் இருந்த பெயர் பழனியாண்டி. இவர் ஒன்றியச் செயலாளர். ஆனால், சபரீசன் டீம் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்த் பெயரைக் கொடுத்திருக்கிறது. முன்பு, நேருவின் ஆதரவாளராக இருந்த ஆனந்த், தற்போது அன்பில் மகேஷ் ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால், நேரு கொடுத்த பட்டியலில் முதலில் இருந்த பெயர் பழனியாண்டி. அதேபோல, கனிமொழியிடம் ஒரு லிஸ்ட் வாங்கியிருந்தார் கருணாநிதி. அதிலும் பழனியாண்டி பெயர்தான் இருந்திருக்கிறது. அதனால் பழனியாண்டி பெயரை டிக்செய்ய, ஸ்டாலின் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அதேபோல, கனிமொழி 20 பேர் லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அதில், 10 பேரை ஓகே செய்திருக்கிறார்கள். இப்படித்தான் வேட்பாளர் பட்டியல் முடிவாகியிருக்கிறது!’’

சைன் இன் ஆகியிருந்த ட்விட்டர் அடித்த ட்விட் இது. ‘‘அதிமுக-வில், ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். திமுக-வில், கடந்த தேர்தலில் ரூ.3 கோடி வரை கொடுத்தார்கள். ஆனால், இந்தமுறை ரூ.2 கோடி என்று தொடங்கிய பேச்சு, கடைசியில் ஒரு கோடி என முடிவாகியிருக்கிறது. அதுவும் ரூ.5 கோடிக்குமேல் செலவு செய்யமுடியும் என நேர்காணலில் சொன்ன யாருக்கும் அந்த ஒரு கோடியும் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் பணம் கொடுக்கப்போவது இல்லை என்பது திமுக எடுத்திருக்கும் முடிவு.’’
ஆஃப்லைனுக்க போவதற்குமுன்பு, வாட்ஸ் அப் அனுப்பிய தகவல் இதுதான்… ‘‘அதிமுக-வில் அதிகார மையங்களில் இருக்கும் சிலர், சீட்டுக்காகப் பணம் வாங்கியதாக சர்ச்சை கிளம்பியது. அது அதிமுக-வில் மட்டுமல்ல; திமுக-விலும் அப்படியொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சீட் வாங்கித் தருவதாக இங்கேயும் சிலர் பணம் வாங்கினார்களாம். அவர்கள் எல்லோரும், ‘சீட் உங்களுக்குத்தான்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டதால், பணம் கொடுத்தவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். உண்மையில், பணம் கொடுத்தவர்கள் பலரின் பெயரும் பட்டியலில் வந்துவிட்டது.’’,”









