அதிமுக கூட்டணியில் இடம் இல்லை என்று தெரிந்ததும். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் திமுகவிற்குச் செல்லலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் ஜி.கே வாசனிடம் வலியுறுத்தி வந்தார். வாசனும் பேசிப்பாருங்கள் என்று அனுமதி தந்த உடன் பீட்டர் உடனடியாக கோபாலபுரத்தைத் தொடர்பு கொண்டார். கருணாநிதியும் வாருங்கள் பேசுவோம் என்று அழைக்க அந்த இரவே கோபாலபுரத்தின் பின்வாசல் வழியாக சென்ற பீட்டர் அல்போன்ஸ் கருணாநிதியிடம் பேசிய போது “ மகிழ்ச்சி சோனியாகாந்தியுடன் பேசி விட்டுச் சொல்கிறேன்” என்று அனுப்பி வைத்தார் கருணாநிதி.
உடனடியாக கனிமொழி குலாம்நபியுடன் பேசிய மறு நாள் காலையிலேயே “எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்ற பதில் சோனியாவிடம் இருந்து வந்தது. திடீரென்று வாசன் “அதிமுக கூட்டணியில் நிச்சயம் நாம் இடம் பெறுவோம் காங்கிரஸ் இருக்கும் கூட்டணி தேவையில்லை” என்று பீட்டரிடம் சொல்ல அவருக்கோ அதிர்ச்சி. தற்போது மக்கள் நலக்கூட்டணியில் வாசன் இணைந்து விட்டதால் பீட்டர் அல்போன்ஸ், எஸ். ஆர். பாலசுப்ரமணியம் போன்ற தமாகாவின் முக்கிய தலைவர்கள் விரைவில் வாசனுக்கு எதிராக அறிக்கை தந்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைய இருக்கிறார்கள்.
