விப்ரோ நிறுவனத்துக்கு சறுக்கல்: காலாண்டு லாபத்தில் வீழ்ச்சி!

Published On:

| By Minnambalam Desk

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ (Wipro) தனது 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்தது. ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.89 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3,569.6 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம் (PAT), இந்த ஆண்டு ரூ.3,501.8 கோடியாக பதிவாகியுள்ளது. இருப்பினும், முந்தைய டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் விப்ரோவின் லாபம் 12.27 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.22,504.2 கோடியாக இருந்த விப்ரோவின் வருவாய் 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 7.69% அதிகரித்து ரூ.24,236.3 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 2.88% அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனம் ரூ.15,000 கோடி மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெறுவதாக (Buy Back)அறிவித்துள்ளது. தலா ரூ.2 மதிப்புள்ள முழுமையாகச் செலுத்தப்பட்ட 60 கோடி வரையிலான ஈக்விட்டி பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான திட்டத்திற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பங்குகள், மொத்த செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தில் 5.7% ஆகும். மேலும், ஒரு ஈக்விட்டி பங்குக்கு ரூ.250 என்ற விலையில் இவை திரும்பப் பெறப்படும்.

ADVERTISEMENT

விப்ரோவின் EBITDA கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.4,624 கோடியாக இருந்த நிலையில், சமீபத்திய மார்ச் காலாண்டில் 6.17% அதிகரித்து ரூ.4,909 கோடியாக உயர்ந்துள்ளது. EBITDA மார்ஜின் கடந்த ஆண்டு 20.55% ஆக இருந்த நிலையில், தற்போது 20.26% ஆக உள்ளது. 2025-26 நிதியாண்டில் விப்ரோவின் லாபம் முந்தைய நிதியாண்டில் ரூ.13,154 கோடியாக இருந்த நிலையில் தற்போது 0.47% அதிகரித்து ரூ.13,197 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், 2026 ஜூன் மாதம் முடிவடையும் காலாண்டில் தனது தகவல் தொழில்நுட்ப சேவைகள் வணிகப் பிரிவின் வருவாய் 2597 மில்லியன் டாலர் முதல் 2651 மில்லியன் டாலர் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாக விப்ரோ தெரிவித்துள்ளது. விப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனி பல்லியா கூறுகையில், “செயற்கை நுண்ணறிவில் (AI) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகளை மறுவடிவமைத்து அவர்களுடன் மேலும் ஆழமாக ஈடுபடுவதற்கும், மதிப்பு சார்ந்த முடிவுகளை வழங்குவதற்கும் எங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share