ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்!

Published On:

| By Kumaresan M

நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா. இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர் ரத்தன் நெவல் டாடா. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி, தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ரத்தன் டாடாவுக்கு 10 வயதுதான் ஆகியிருந்தது.

நியூயார்க்கில் கார்னெல் பல்கலையில் இன்ஜினீயரிங் படித்து விட்டு. ஹார்வர்டில் பிசினஸ் படிப்பு படித்தார். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் 1971-ம் ஆண்டு வரை பணி புரிந்தார். பின்னர், 1991-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார். தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரின் தலைமையின் கீழ் டாடா நிறுவனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான  டி.சி.எஸ் நிறுவனம் உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது. இதன் தலைவராக இருந்த என். சந்திரசேகரன்தான் தற்போது டாடா சன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகரனின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ரத்தன் டாடா தன் குழுமத்தையை அவர் கையில் ஒப்படைத்தார். என். சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா தலைவராக இருந்த காலக்கட்டத்தில் பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாக்குவார், லேண்ட் ரோவர், கோரஸ், டெட்லி போன்ற நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. 1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா இண்டிகா இந்திய சாலைகளில் கோலோச்சியது. இது டாடாவின் கனவு கார்களில் ஒன்று. ‘மக்களின் கார்’ என்று சொல்லப்பட்ட ‘நானோ’ இவரின் பிரைன்சைல்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. நானோ கார் தொழிற்சாலை மூடப்பட்டாலும் , ஒவ்வொரு இந்தியரும் காரில் பயணிக்க வேண்டுமென்ற டாடாவின் ஆசை ஓரளவுக்கு இதனால் நிறைவேறியது.

இப்படி… பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது.

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962-ஆம் ஆண்டு ‘அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார்.

தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண், ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.  ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது.

`திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? ‘ என்ற கேள்விக்கு, நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடா காதலித்த பெண்களில் பிரபல இந்தி நடிகை சிமி கோர்வெலும் ஒருவர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் சிமி கோர்வலும் ரத்தன் டாடாவும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு சிம் கோர்வல் ஊடகம் ஒன்றுக்கு ரத்தன் டாடா பற்றி பேட்டியளித்துள்ளார். அதில், ரத்தன் டாடா ஜென்டில்மேன் என்றும் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு ஒரு போதும் அவர் இயங்கியதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, ரத்தன் டாடா மறைவையடுத்து சிமி கோர்வெல் தன் எக்ஸ் பக்கத்தில் ரத்தன் டாடாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லோரும் நீங்கள் மறைந்து விட்டதாக கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமான விஷயம் ஆகும். சென்றுவாருங்கள் என் நண்பரே” என்று சிமி கோர்வெல் உருக்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 பிக் பாஸ் சீசன் 8 : விபரீதத்தில் முடிந்த பிராங்க்!

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : ஸ்டாலின் உத்தரவு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share