மதுரை மெட்ரோவுக்கும் பட்நாவிஸுக்கும் என்ன சம்பந்தம்?: ஸ்டாலின் காட்டம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 7) சீர்காழியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.  

உங்கள் ஊர் மாப்பிள்ளை… 

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர்,  “திருவாரூரில் தொடங்கி, தமிழ்நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் டெல்டாவிற்கே அடுத்த ரவுண்டுக்காக வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் மற்ற ஊருக்கெல்லாம் நான் முதலமைச்சர்! ஆனால், இந்த சீர்காழியைப் பொறுத்தவரையில், நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, உங்கள் ஊர் மாப்பிள்ளை! ஏழாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய – திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, உங்கள் ஊரில் பெண்ணை எடுத்த உரிமையோடு, உங்கள் ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்ல, இங்கு தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இருக்கும் நாகப்பட்டினத்தில் இருந்தும் வந்திருக்கிறீர்கள்! நாகை எப்போதும், தி.மு.க. வாகை சூடும் மாவட்டம்!

அதேபோன்று, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று சொல்லுவார்களே! நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கிறீர்கள்.

ADVERTISEMENT

என்னதான் உங்கள் ஊர் மருமகனாக இருந்தாலும், வெறும் கையோடு நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. 5 ஆண்டுகாலமாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த உரிமையுடன் உங்கள் ஆதரவைக் கேட்க வந்திருக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், “நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது அல்லவா… அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே கீழே இறங்கிக் கொண்டே போகிறது.

கூவத்தூரில் MLA-க்களை ஏலம் எடுத்து முதலமைச்சரான அவர், அந்தப் பதவியில் இருக்கும் தகுதியே இல்லை என்று சொல்லி, நீங்கள் எல்லாம் தோற்கடித்தீர்கள். இப்போது அவரே, முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவும் தனக்கு தகுதி இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கிறார். தன்னுடைய தராதரம் இல்லாத பேச்சுகளால், தன்னையும் – தன்னுடைய கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

2026 தேர்தல் முடிவுகள், பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்.

எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது!

ஈபிஎஸ், பாஜக மீது அட்டாக்

ஒன்றிய பா.ஜ.க. அரசு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறார்கள்.

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், சர்ச்சுகளையும் குறிவைத்து FCRA சட்டத் திருத்தம் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.

பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி தொகுதி மறுவரையறை செய்யத் துடிக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகிறது.

முக்கியமான அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களை அவசர அவசரமாக செய்யப் போகிறார்கள்.

இதை நாம் கண்டித்து, பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கும் இந்தச் சமயத்தில், எதற்கு இந்த அவசரம்? என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களும் இதையே கேட்கிறார்கள். ஆனால், இதற்கு அவரிடத்தில் பதில் இல்லை!

“தொகுதி மறுவரையறையால், வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கும் தொகுதி எண்ணிக்கையில் பெரிய இடைவெளி உண்டாகும். இது அநியாயம்!” என்று எச்சரிக்கிறோம்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா , கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் , தொகுதி மறுவரையறை தொடர்பாக, நான் நீண்ட காலமாக வெளிப்படுத்தி வரும் அச்சத்தை, அவர்களும் கேள்வியாக எழுப்பி இருக்கிறார்கள். இது எதைப் பற்றியும் வாய் திறந்து பேச வக்கில்லாமல் இருக்கிறார் பழனிசாமி!

அதற்கு காரணம் என்ன? அ.தி.மு.க.வையும் – பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? பா.ஜ.க.! அதாவது, டெல்லி டீம்! அந்த டீம்-இல் இருந்து, இப்போது அடிக்கடி ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜ.க. முதலமைச்சர்களும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்ட கேள்விக்கும், நான் விட்ட சவாலுக்கும் பதில் இருக்கிறதா? இல்லை!

நான் கேட்கிறேன்… தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, வேறு எதற்காகத்தான் பேசுவார்?

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருப்பதால்தான், தொகுதி மறுவரையறைப் பற்றி, பா.ஜ.க. அரசு அறிவிப்பதற்கு முன்பே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாம் கூட்டினோமே! இந்தியா முழுவதும் இருந்து முதலமைச்சர்களை சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோமே! ஏன், சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஒருவேளை பழனிசாமி ஆட்சியாக இருந்திருந்தால், தமிழ்நாட்டை கூறு போட்டு விற்றிருப்பார். நல்ல வேளை இல்லை! வரும் தேர்தலிலும் பழனிசாமியும் – என்.டி.ஏ கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட, வெற்றி பெறக் கூடாது.

இதற்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்வதில்லை என சொல்லி வருகிறோம். அதற்கு ஆதாரமாக, சமீபத்தில் ‘லைவ் மிண்ட்’ என்கிற பொருளாதாரம் சார்ந்த முன்னணி ஆங்கில நியூஸ் பேப்பரில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். ஆதாரம் இருக்கிறது.

நான் பொத்தம் பொதுவாக எல்லாம் பேசமாட்டேன். ஆதாரத்தோடுதான் பேசுகிறேன். இதில் என்ன வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், ஒன்றிய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அதிகமாக நடக்கும் டாப் 10 மாநிலங்கள் என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய அளவில் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட மகாராஷ்டிரா, அதில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாடுதான், 2-ஆவது இடத்தில் நியாயமாக இருக்க வேண்டும். ஆனால், இல்லை. அதிகமாக தொழில்மயமான மாநிலமும் நாம்தான்! ஆனால், அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முதல் பத்து இடத்தில், தமிழ்நாடு எங்குமே இல்லை.

வரி கட்ட மட்டும் தமிழக மக்கள் வேண்டுமா?

ஒன்றிய அரசு தமிழ்நாடு என்கிற இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினை, எந்த அளவுக்கு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வரி கட்டுவதற்கு மட்டும், தமிழ்நாட்டு மக்கள் பணம் வேண்டும். ஆனால், எங்களுக்கு எந்தத் திட்டமும் கிடையாதா? சிறப்புத் திட்டமும் இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கு முட்டைதான் போடுகிறார்கள். இரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்தான் போடுகிறார்கள்.

இதில் நேற்று மதுரைக்கு வந்த மகாராஷ்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் பட்நவிஸ் என்ன சொன்னார் என்று பார்த்தீர்களா? நான் இன்றைக்கு டிவிட்டரில் அதற்கு செய்தி போட்டிருக்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் “மதுரைக்கு ஏன் மெட்ரோ நிராகரிக்கப்பட்டது?” என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்கிறார். “மதுரையில் பா.ஜ.க. MLA வெற்றி பெற்றால், மதுரைக்கு மெட்ரோ கிடைக்கும்” என்று பேசுகிறார்.

முதலில் நான் கேட்கிறேன்… அவருக்கும் – மதுரை மெட்ரோவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் என்ன பிரதமரா? இல்லை, அந்தத் துறைசார்ந்த ஒன்றிய அமைச்சரா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பேசும் பேச்சா இது? பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால்தான், உங்களுக்கு மெட்ரோ தருவோம் என்று வெளிப்படையாக கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்.

பட்நவிஸ் அவர்களே! இப்படி, பிளாக்மெயில் செய்ய உங்களுக்கு வெட்கமே இல்லையா… எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி , இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? இப்போதாவது மக்கள் பிரச்சினையைப் பேசுவீர்களா? இல்லை, வழக்கம்போல் உங்கள் சொந்தக்கதை சோக கதையைத்தான் பேசப் போகிறீர்களா?

அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு செய்யும் சில வேலையும், ஒழுங்காகச் செய்வது இல்லை! நேற்றுகூட, இங்கு பக்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலம் உள்வாங்கி சேதமடைந்திருக்கிறது. சீர்காழி – சிதம்பரம் இடையே போக்குவரத்து பாதிப்படைந்திருக்கிறது.

இதே போன்றுதான், இந்தியா முழுவதும் இவர்கள் கட்டுவதெல்லாம் திறந்த சிறிது நாளில் இடிந்து விழுகிறது. நிறைய இடத்தில் திறப்பதற்கு முன்பே கொலாப்ஸ் ஆகிறது. பிரதமர் மோடி அவர்களின் குஜராத்திலேயே, மோர்பி பாலம் இடிந்து விழுந்து 140 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இப்படி என்னால் பெரிய லிஸ்டே போட முடியும். இப்படி ஊழலும் பொறுப்பின்மையும் அலட்சியமும் நிறைந்த அரசுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இவர்கள் அனைவரும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து நம்மை விமர்ச்சிக்கிறார்கள், வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை?

நமக்காக சூப்பர் ஸ்டார் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்

பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாடு வளரக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மீறித்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறேன். முத்திரைத் திட்டங்களே, நிறைய இருக்கிறது. அந்தப் பட்டியலை எல்லாம் பல கூட்டங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அந்தத் திட்டங்களை, அடுத்து மேலும் விரிவுபடுத்துவது போன்றும், இன்னும் பல புதிய திட்டங்களையும் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அதாவது, 2026 தேர்தலின் சூப்பர்ஸ்டார் இதுதான்! ரஜினி படத்தில் பாட்டு இருக்கும். அதுபோல, “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, தி.மு.க. தேர்தல் அறிக்கை”னு சொல்லும்.

நான் பிரசாரத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே, நம்முடைய சூப்பர்ஸ்டார் நமக்காக பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாரை சொல்கிறேன். வாக்கு எண்ணப்படும் மே 4 கல்யாண நாள் என்றால், தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள்தான் நம்முடைய வெற்றிக்கு நிச்சயதார்த்த நாள்! அப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையின் டாப் அறிவிப்புகளை – முக்கியமான அறிவிப்புகளை மட்டும் இப்போது சொல்கிறேன்.

முதலில் இல்லத்தரசி திட்டம்! முதல் பந்தே சிக்சர்தான்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப்போகிறோம்! எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-யை வாங்கிக் கொள்ளலாம்! என்னென்ன பொருள்? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு – இதில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, நம்முடைய குடும்பத் தலைவிகளின் வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகத்தான் இந்தத் திட்டம்.

கலைஞர் போல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்

இங்கு தாய்மார்கள் இருக்கிறீர்கள். ஒரு புடவை வாங்குவதற்கு கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்று அந்தப் புடவையை வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். நல்ல கலரா? இது நமக்கு மேட்ச் ஆகுமா? சாயம் போகுமா? தண்ணீரில் போட்டால் சுருங்குமா? அதைத் தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, இது என்ன சில்க்கா? நைலக்சா? காட்டனா? இவ்வளவும் பார்த்துதான் வாங்குவீர்கள். ஒரு புடவை வாங்க, 250 புடவைகளை எடுத்து கடைக்காரர் எடுத்துப் போடுவார். அதை எடுத்துக் கொண்டு வெளியே எடுத்துச் சென்று சூரிய வெளிச்சத்தில் பார்ப்பீர்கள். எந்த வெளிச்சத்தில்? சூரிய வெளிச்சத்தில்…

எப்படி தலைவர் கலைஞர் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ் அடுப்பும் கொடுத்தாரோ! அவரது மகனான நானும், சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.

அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்சம் சகோதரிகளுக்கு வங்கிக் கணக்கில் வந்து கொண்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இனி எவ்வளவு ஆகப் போகிறது தெரியுமா? திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை!

உரிமைத்தொகை மட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அடுத்து, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என அனைத்து உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப் போகிறோம்.

மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மீனவர்களுக்கு மகிழ்ச்சிதானே?

20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

இங்கு இருக்கும் மகளிர் அனைவரும் டவுன் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணிக்கிறீர்கள் அல்லவா… காய்கறி, பூ, பழம், மீன் விற்பனை செய்யும் மகளிர் அனைவருக்கும் விடியல் பயணம் திட்டம் உபயோகமாக இருக்கிறதா? இல்லையா…

தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும். மகிழ்ச்சியா?

அடுத்து, உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் 2.0 திட்டத்தில் 6 மாதத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப் போகிறோம். குறிப்பாக, நாகை பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு உணவுப் பதப்படுத்துதல் பிரிவில் திறன் பயிற்சி வழங்கப் போகிறோம்.

நாகப்பட்டினம் குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் மாவட்டம். புயலால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வீட்டு கூரையை மாற்ற நீங்கள் படும் கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும். இந்த நிலை மாற, குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்ற தலைவர் கலைஞரின் கனவு நனவாக, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

நாகப்பட்டினம் துறைமுகம், உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.

நாகப்பட்டினத்தில் ஆபரணத் தயாரிப்பு குழுமமும், மயிலாடுதுறையில் அட்டைப்பெட்டி தயாரிப்பு குழுமமும் அமைக்கப்படும்.

இவை எல்லாம் போக, நம்முடைய டெல்டா மாவட்டங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறோம். அது என்ன என்றால், 2030-ஆம் ஆண்டுக்குள், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க விரைவுச் சாலைகள், திருச்சியில் ஏற்றுமதிக்கு தேவையான உலர் துறைமுகக் கட்டமைப்பு, தூய்மை காவிரித் திட்டம்-2030 செயலாக்கம், ஒருங்கிணைந்த சுற்றுலா மேலாண்மைத் திட்டங்கள், வேளாண்மைக்கான நீராதார உட்கட்டமைப்பு தீவிர மேம்பாடு, கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்ற டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் போகிறோம். இப்போது சொல்லுங்கள்… இந்த ஆட்சி தொடர வேண்டுமா? இல்லையா?

உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி, இனி செய்யப் போவதை சொல்லி வாக்கு கேட்டால், அது நம்முடைய திராவிட மாடல்! அவதூறுகளை மட்டுமே பேசி, பொய்யை மட்டுமே சொன்னால், அது அடிமை பழனிசாமி மாடல்! சாதனையோடு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? இல்லை, டெல்லிக்கு அடிமை சேவகம் செய்யும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா? சத்தமாக! திராவிட மாடல் ஆட்சி. டெல்லி வரை கேட்க வேண்டும்! நன்றி!

நாம் போராடுவது, ஏதோ, தனிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, இதோ மேடையில் இருக்கிறார்களே நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மீண்டும் சொல்கிறேன்… மறந்துவிடாதீர்கள். தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share